‘ஆசார்யாள் காலம் கி.பி. 788-820 இல்லை; கி.மு. 509-477ம் இல்லை. கி.மு. 44-12 தான்’ என்றும் ஒரு அபிப்ராயமிருக்கிறது. கன்னட தேசத்தில் இந்த அபிப்ராயம் இருந்து வந்திருக்கிறது. அதாவது நாம் சொல்வதைவிட 460-470 வருஷத்துக்குப் பிற்பாடு அவர்கள் ஆசார்யாளின் காலத்தைச் சொல்கிறார்கள்.
இந்த 460-470 வருஷ வித்யாஸத்திற்கு டி.எஸ். நாராயண சாஸ்த்ரி1 போன்றவர்கள் ஒரு காரணம் காட்டுகிறார்கள். அதாவது: ஜைனர்களும் பௌத்தர்களும் யுதிஷ்டிர சகம் என்று ஒன்றைப் பின்பற்றுகிறார்கள். இது கலியுகம் ஆரம்பித்து 468 வருஷத்துக்குப் பிறகு ஆரம்பிப்பது. யுதிஷ்டிரர் என்பது பாண்டவர்களில் மூத்தவரான தர்மபுத்ரர்தான். க்ருஷ்ணர் பரமபத ஆரோஹணம் செய்ததைக் கேள்விப்பட்டு உடனே அவரும் ‘மஹாப்ரஸ்தானம்’ என்பதாக ஜீவயாத்ரையை முடித்து ஸ்வர்க்கத்துக்குப் புறப்பட்டுவிட்டார். க்ருஷ்ணரின் பரமபத ஆரோஹணத்திலிருந்துதான் கலி பிறந்தது. அப்போது யுதிஷ்டிரர் 36 வருஷம் ஆட்சி நடத்தியிருந்தார். ஆகையால் நாம், அதாவது ஹிந்துக்கள், கலிக்கு 36 வருஷம் முன்னால் (கி.மு. 3138-ல்) யுதிஷ்டிர சகாப்தம் ஆரம்பிப்பதாகக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஜைன, பௌத்தர்கள் கலி ஆரம்பித்தபின் 468 வருஷத்திற்கு அப்புறமே தங்களுடைய யுதிஷ்டிர சகாப்தத்தை ஆரம்பிக்கிறார்கள். ‘யூனிஃபார்மா’க அவர்களுடைய புஸ்தகங்களில் அப்படித்தான் இருக்கிறது.
ஜைனமதம் ஆதியிலிருந்தே கன்னடதேசத்தில் வேர்பிடித்திருக்கிறது. மௌர்ய சந்த்ரகுப்தனே கடைசி நாளில் ஜைன பிக்ஷுவாகி ச்ரவண பௌகொளாவுக்கு வந்துதான் ப்ரயோபவேசம் பண்ணி (உண்ணா நோன்பிருந்து) உயிரை விட்டானென்று சொல்வதுண்டு. அதனால் அங்கே ஜைனர்கள் பின்பற்றும் யுதிஷ்டிர சகம் பிறரிடமும் வழக்குக்கு வந்தது என்றும், அதனால் கலியில் 2600 வருஷம் என்று ஆசார்யாள் காலத்தைச் சொல்லிருப்பதை ஜைன யுதிஷ்டிர சக 2600 என்று அவர்கள் நினைத்துக்கொண்டு 460-470 வருஷம் தள்ளிக்கொண்டுவந்து விட்டிருக்கலாம் என்றும் அவர் (நாராயண சாஸ்த்ரி) சொல்கிறார்.
‘கி.மு. ஆறாம் நூற்றாண்டு என்ற அத்தனை முன்னேயும் போகவேண்டாம். கி.பி. எட்டாம் நூற்றாண்டு என்று அத்தனை பின்னுக்கும் தள்ளவேண்டாம்; [சிரித்து] ‘காம்ப்ரமை’ஸாக இந்த கி.மு. முதல் நூற்றாண்டை வைத்துக்கொண்டு விடலாமே’ என்று சிலர் சொல்கிறார்கள். இதற்கு அவர்கள் சொல்லும் ஒரு காரணம்: நம்முடைய மடத்தின் ஆரம்ப காலத்து ஏழெட்டு ஸ்வாமிகள் 80-90-100 வருஷங்களுக்கு பீடத்திலிருந்ததாக நம்முடைய குரு பரம்பரையில் இருக்கிறது. ‘புண்ய ச்லோக மஞ்ஜரி’யில் அப்படித்தான் தேதிகள் கொடுத்திருக்கிறது. ‘இது ரொம்ப ஜாஸ்தியாகத் தெரிகிறது. ப்ராசீனத்வம் (தொன்மை) கொடுக்க வேண்டுமென்றே, வாஸ்தவத்தில் 20-30-40 வருஷம் பட்டத்திலிருக்கக்கூடியவர்களுக்கு ஒரு அறுபது வருஷ ஸைகிள் கூட்டிச் சொன்னதாகத் தோன்றுகிறது. நிஜமாக அவர்கள் ஸித்தியான ப்ரபவாதி வருஷப் பெயர், மாஸம், பக்ஷம், திதி ஆகியவற்றை மாற்றாமலே புண்ய ச்லோகங்களில் வைத்துக்கொண்டு, அவர்களுடைய பதவிக் காலத்தை ஸரியாக அறுபது, அறுபது வருஷம் சேர்த்துச் சொல்லியிருக்கலாம். தலா அறுபது வருஷமாக அந்த ஏழெட்டுப் பேருக்குக் குறைத்து விட்டோமானால் ஸரியாகிவிடும். அப்போது ஆசார்யாள் அவதாரம் கி.மு. 44 என்பதும் ஸரியாக வந்துவிடும்’ என்று சொல்கிறார்கள்.
1 “The Age of Sankara” என்ற நூலில்.