குருவைத் தேடிக்கொண்டு புறப்பட்ட ஆசார்யாள் வடக்காக வெகுதூரம் போய் நர்மதைக் கரையை அடைந்தார்.
அங்கே கோவிந்த பகவத் பாதர் நிஷ்டையிலிருந்தார்.
நதியிலோ ஊரையெல்லாம் அடித்துக்கொண்டு போகிற மாதிரி வெள்ளம் வந்திருந்தது. சுற்றுப்பக்க க்ராமத்தவர்கள் அந்த மஹான் காப்பாற்றுவாரென்று அவரைத் தேடிக்கொண்டு வந்தார்கள்.
அவரோ தன்னை மறந்து உட்கார்ந்திருந்தார்.
ஆனால் பக்கத்திலே தேஜோ மயமாக ஒரு குழந்தை வந்திருப்பதைப் பார்த்ததும் ஜனங்களுக்குத் தன்னால் ஒரு நம்பிக்கை, பக்தி உண்டாயிற்று. வெள்ளத்தைப் பற்றிக் அந்தக் குழந்தையிடம் முறையிட்டார்கள்.
குழந்தையாசார்யாள் தன்னுடைய கமண்டலத்துக்குள் வரும்படியாக ப்ரவாஹத்துக்குக் கை காட்டினார்.
அப்படியே நதியும் அதற்குள் அடங்கிவிட்டது!
ஜனங்களெல்லாம் ஸந்தோஷப்பட்டார்கள்.
கோவிந்த பகவத்பாதரும் நிஷ்டையிலிருந்து எழுந்தார்.
ஆசார்யாளைப் பார்த்தவுடன் அவர், ‘இந்தக் குழந்தைக்காகத்தானே காத்துக் கொண்டிருந்தோம்?’ என்று நினைத்துக் கிட்டே வந்தார். கட்டிக்கொண்டார்.
இவர் அவர் சரணத்தில் விழுந்தார்.
தெரிந்தும் தெரியாத மாதிரி இருக்கும் அவதார விளையாட்டுப்படி அவர் இவரை, “யாரு, குழந்தை?” என்று கேட்டார்.
சொல்லியும் சொல்லாமல் அவதாரமென்று தெரிவித்து, அவதார மூலத்தையும் தெரிவித்து, எல்லாவற்றுக்குமே மூலமான அத்வைத சிவத்தையும் தெரிவித்துவிட வேண்டுமென்று ஆசார்யாள் ச்லோகங்களாக பதில் சொன்னார். பத்து ச்லோகம். ‘தச ச்லோகீ’ என்றே பேர். ஒவ்வொரு ச்லோகத்தின் கடைசிப் பாதத்திலும்.
தத் ஏகோ (அ)வசிஷ்ட: சிவ கேவலோ(அ)ஹம்
என்று முடித்தார். ‘அவசிஷ்டம்’: எல்லாவற்றையும் மாயை என்று தள்ளியபின் மிஞ்சுவது. ‘கேவலம்’: கலப்படமில்லாதது. இன்னொன்று இருந்தால்தானே கலக்க முடியும்? “அப்படிப்பட்ட’ அந்த ஒன்று’: ‘தத் ஏக’:, சிவ ஸ்வரூபமாயிருக்கிறதே, அதுதான் நான்” என்று தெரிவித்துக் கொண்டார்.
யாருக்குமே தீக்ஷை என்பது இல்லாததைப் புதிதாகப் பிடித்துக்கொண்டு வந்து விடுவதில்லை! அடைகாத்துக் குஞ்சு பொரிப்பதுபோல உள்ளேயிருக்கிறதையே பூர்வ ஸம்ஸ்கார ஓட்டைப் பிளந்துகொண்டு வெளியில் வரப்பண்ணத்தான் தீக்ஷை!’ அவதாரமான இவருக்கோ பூர்வ ஸம்ஸ்காரமே இல்லை. இருந்தும் குருமுக உபதேசத்தின் பெருமை தெரியவேண்டுமென்று இவருக்குத்தான் நாம் தீக்ஷை தரணுமென்று வ்யாஸர் அனுப்பிவைத்தது’ என்று கோவிந்த பகவத்பாதருக்கு நிச்சயமாயிற்று.
சாஸ்த்ர ப்ரகாரம் ஆசார்யாளுக்கு அவர் ஸந்நியாஸ ஆச்ரமம் கொடுத்து உபதேசம் பண்ணினார்.
ஸந்நியாஸி முடிந்த முடிவாகத் தன் ஜீவன் என்பது ப்ரஹ்மமே என்று தெரிந்துகொள்ள வேண்டியவன். அதற்காக குரு அவனுக்கு ஜீவ – ப்ரஹ்ம ஐக்யத்தைத் தெரிவிப்பதான ‘மஹா வாக்யம்’ என்ற மஹா மந்த்ர உபதேசம் செய்வார். அவன் அதே த்யானமாயிருந்த அந்த ஐக்யத்தைப் பெற வேண்டும். வேத சாகை1 ஒவ்வொன்றுக்கும் ஒரு மஹா வாக்யமுண்டு. அந்த சாகையின் முடிவில் வரும் உபநிஷத்தில் அது இருக்கும். அத்வைத ஸம்பிரதாயத்தில் ரொம்பப் பெரியவர்களாக வந்திருக்கிறவர்களில் ஸர்வஜ்ஞாத்மர் என்கிறவர் ஒருத்தர். அசார்யாளுடைய ஸூத்ர பாஷ்யதிலுள்ள விஷயங்களை அலசி அவர் ச்லோக ரூபத்தில் செய்திருக்கிற ‘ஸம்க்ஷேப சாரீரகம்’ என்ற புஸ்தகத்தில் ஒவ்வொருவனும் எந்த வேத சாகையைச் சேர்ந்தவனோ, அந்த தன்னுடைய சொந்த சாகையிலுள்ள மஹா வாக்யத்தையே சந்நியாசியான ஒரு குருவிடமிருந்து உபதேசம் பெற்று ஹ்ருதயபூர்வமாக அப்யாசம் பண்ணினால் அதுவே முக்திக்கு வழியாகும் என்று வருகிறது. (III. 295). சொந்த சாகையிலுள்ள மஹா வாக்யம் என்பது ‘நிஜ-வேத-சாகா-மகாவசனம்) என்று சொல்லியிருக்கிறது. மதுஸூதன சரஸ்வதி என்கிற இன்னொரு பெரியவர் இதற்குப் பண்ணியிருக்கிற வ்யாக்யானத்திலும் வேதத்தின் ஒவ்வொரு சாகையிலும் ஒரு மகாவாக்யம் உண்டு என்பது உறுதி செய்யப்படுகிறது. ஆசார்யாளே ‘விவேக சூடாமணி’யில், ‘ஜீவாத்மாவும் பரமாத்மாவும் பிரிந்தில்லாமல் ஐக்யமாக இருக்கும் விஷயத்தை நூறு மஹாவாக்யங்கள் சொல்கின்றன: ‘மஹா வாக்ய-சதேந கத்யதே ப்ரஹ்மாத்மநோ: ஐக்ய-மகண்ட-பாவ:’ என்கிறார். (‘ஸம்லக்ஷ்ய’ எனத் தொடங்கும் 251-ம் ச்லோகம்). ‘நூறு’ என்றால் இங்கே ஸரியாக நூறு என்று அர்த்தமில்லை. ‘ஏகப்பட்ட’, ஏராளமான’ என்றே அர்த்தம். பேச்சு வார்த்தையில்கூட ‘நூறு சொன்னாலும் அது அப்படித்தான்’ என்கிறோமல்லவா? இப்படி சாகைக்கு ஒன்றாக அனேக மகாவாக்யங்கள் இருக்கின்றன. இவற்றிலே முக்யமானவையாக ஒரு வேதத்துக்கு ஒன்று என்று நாலு மஹாவாக்யங்கள் சொல்லப்படுகின்றன. ஆசார்யாளுக்கு கோவிந்த பகவத்பாதர் அந்த நாலையும் உபதேசித்தாரென்று மாதவீய சங்கர விஜயத்திலிருக்கிறது2. நம்முடைய (காஞ்சி) மடத்திலும் ஸ்வாமிகளாக வருகிறவருக்கு இப்படியே நாலு மஹாவாக்யங்களும் உபதேசிக்கப்படும் வழக்கம் இருந்து வருகிறது3. ப்ரணவமும் ‘ஸோஹம்’ என்ற ஜீவ – ப்ரம்ம ஐக்ய வாசகத்தில் அந்தர்கதமாக (உள்ளடங்கி) இருப்பதால் அதுவும் மஹா வாக்யமே. அதையும் உபதேசிக்கும் வழக்கம் இருந்து வருகிறது.
கோவிந்த பகவத்பாதாள் ஆசார்யாளிடம் வ்யாஸ ஆஜ்ஞைப்படியே தாம் வந்து உபதேசம் பண்ணியதாகச் சொன்னார். வ்யாஸருடைய ப்ரஹ்ம ஸூத்ரத்தின் ஸரியான தாத்பர்யத்தை விளக்கி ஆசார்யாள் பாஷ்யம் பண்ணி சுத்த வைதிகத்தையும், சுத்தாத்வைதத்தையும் ப்ரகாசப்படுத்தவேண்டும் என்ற ஆஜ்ஞையையும் தெரிவித்தார். பரமேச்வரனே அப்படி (ஸூத்ர பாஷ்யம் செய்வதாக) உத்தேசித்து தேவர்களிடம் சொல்லியிருந்ததுதானே? குரு பரம்பரையின் ஆஜ்ஞையாக அது வரவேண்டுமென்றே அவதாரத்தில் காத்துக் கொண்டிருந்தார்.
அப்படியே ஆசார்யாள் வ்யாஸ ஸூத்ரத்தின் தாத்பர்யமெல்லாம் ப்ரகாசிக்கும்படியாக பாஷ்யம் பண்ணி குருவின் சரணத்தில் வைத்து, அவருக்கு நிரம்பக் கைங்கர்யம் பண்ணிக்கொண்டு சில காலம் கூட இருந்தார்4.
வீட்டில் இருப்பதானால் எட்டு வயஸுதான் ஆயுஸ் என்றும், அப்புறம் ஸந்நியாஸம் வாங்கிக்கொண்டால் இன்னொரு ஜன்மா ஏற்பட்ட மாதிரி இன்னொரு எட்டு வருஷம் ஆயுஸைக் கூட்டிக்கொள்வதென்றும் ஸ்வாமி லீலை பண்ணியிருந்தார்.
அந்த எட்டு வருஷத்துக்குள் லோகமெல்லாம் எந்நாளும் ஸநாதன தர்மத்தில் நிற்பதற்கான பாஷ்யங்களை ஆசார்யாள் பண்ணவேண்டுமே என்பதால் கோவிந்த பகவத்பாதர் அவருக்கு விடை கொடுத்துக் காசிக்கு அனுப்பி வைத்தார்.
1 ஒரு ஜீவனைக் கடைத்தேற்றுவதற்குப் போதுமானதாக விஸ்தாரமான வேதங்களைப் பல (கிளை)களாகப் பிரிந்துள்ளது. ரிக் வேதத்தில் 21, யஜுர் வேதத்தில் 101 (சுக்ல யஜுஸ்17, க்ருஷ்ணயஜுஸ்84) , ஸாம வேதத்தில் 1000, அதர்வ வேதத்தில் 9 என்றும் மொத்தம் 1131 சாகைகள்.
2 V.103
3 1968 சங்கர ஜெயந்தியன்று ஸ்ரீசரணர்கள் அருளிய ஸம்ஸ்கிருத உரையிலிருந்து. (“சதுர்வித மஹாவாக்யௌபதேச ஸம்ப்ரதாய: ஸ்ரீ காமகோடி பீடே (அ)பி அஸ்மாகம் அதுநாபி அநுவர்ததே.”)
4 நர்மதா தீரத்திலிருந்து ஆசார்யாள் காசிக்குச் சென்ற பிறகே பாஷ்யம் எழுதியதாகவும் கருத்துண்டு. இதனை ஸ்ரீசரணர்கள் அங்கீகரித்துப் பேசியதாகவும் சில உபந்நியாஸங்களில் காண்கிறது. இங்கு தொடர்ந்து கூறபடுவதிலுந்து (பக். 955) ஸூத்ரபஷ்யம் மட்டும் நர்மதா தீரத்திலும், உபநிஷத — கீதாபாஷ்யங்கள் காசியிலும் செய்யப்பட்டதாக தொனிக்கிறது.