முழுசாகக் கிடைத்திருக்கும் சங்கர விஜயங்களுக்குள் ரொம்பவும் பூர்வ காலத்தியதாகத் தெரிவது ஆனந்தகிரீயம். பல source-களிலிருந்து அதற்கு நிரம்ப ப்ராமாண்யம் உண்டென்பது உறுதியாகிறது. மாதவீயத்திற்கு இரண்டு வ்யாக்யானங்கள் சொன்னேனல்லவா? மாதவீயத்தில் அதற்கு ஆதி பூர்வ ஆதாரமாகச் சொல்லப்படும் ப்ருஹச்-சங்கர விஜயம், ப்ராசீன சங்கர விஜயம் என்பவற்றிலுள்ள விவரங்களெல்லாம் ஆனந்தகிரீயத்திலேயே அடங்கியிருக்கின்றனவென்றும் அதனால் இதையே ப்ருஹச் – சங்கர விஜயமென்றும் ப்ராசீன சங்கர விஜயமென்றும் சொல்வதுண்டு என்றும் அந்த இரண்டு வ்யாக்யானங்களிலிருந்து தெரிகிறது. மாதவீயத்தில் சொல்லாத விஷயங்களையும் சில இடங்களில் இந்த வ்யாக்யானங்களில் சொல்லியிருக்கிறார்கள். உதாரணமாக, அச்யுதராய மோடக் தம்முடைய ‘அத்வைத ராஜ்ய லக்ஷ்மி’யில் ஆசார்யாளின் கடைசி நாட்களைச் சொல்லுமிடத்தில் ‘சிவ ரஹஸ்ய’த்தின் ஒன்பதாவது அம்சத்தில் பதினாறாவது அத்யாயத்தில் வருகிற ஆசார்ய சரித்ரம் முழுவதையும், கடைசியில் அவர் காஞ்சியில் ஸித்தி பெற்றதுவரை quote பண்ணிவிட்டு, இந்த விஷயங்களெல்லாம் ஆனந்தகிரியின் ப்ருஹச்-சங்கர விஜயத்திலும் சொல்லப்பட்டிருக்கின்றன என்று மேலும் ‘அதாரிடி’ காட்டும் விதத்தில் சொல்லியிருக்கிறார்1. அவர் சொல்வதிலிருந்து ஆனந்தகிரிக்கு ‘ஆனந்தஞானர் ‘என்று பெயரிருந்தது தெரிகிறது.
தனபதிஸூரி தம்முடைய (‘டிண்டிம’) புஸ்தகத்தில் ஆசார்யாளின் திக்விஜயத்தை வர்ணிக்கும் மாதவீயத்தின் 15-வது அத்யாயத்திற்கு வ்யாக்யானம் செய்யும் போது, என்னென்ன ஸித்தாந்தக்காரர்களோடெல்லாம் ஆசார்யாள் வாதம் பண்ணினார் எப்படி வாதித்தார் என்று 800 ச்லோகங்களுக்கு மேலே சொல்லிக்கொண்டு போகிறார். “அத்ர ப்ராசீநாநுரோதேன வ்யாக்யேயம்”– அதாவது, “ப்ராசீனமான மூலத்தை அநுஸரித்து இப்படி வ்யாக்யானம் பண்ணப்பட்டிருக்கிறது” என்றும் சொல்கிறார். அவர் ஆனந்தகிரீயத்தையே ரொம்பவும் க்ளோஸாக அநுஸரித்துத்தான் இந்த இடத்தில் எழுதியிருக்கிறாரென்பது அந்த சங்கர விஜயத்தைப் பார்த்தால் ஸந்தேஹத்திற்கு இடமில்லாமல் தெரியும். திக்விஜயத்தில் ஆசார்யாள் எந்தெந்த ஊருக்குப் போனார், எந்த ஆர்டரில் போனார், யார் யாரைப் பார்த்தார், எங்கே எத்தனை காலம் தங்கினார் என்ற விஷயங்களெல்லாம் நூற்றுக்குத் தொண்ணூறு ஆனந்த கிரீயத்திலுள்ளபடியே இந்த வ்யாக்யானத்தில் இருப்பது மட்டுமின்றி, ஒவ்வொரு ஸித்தாந்தக்காரரும் அவரோடு ஆசார்யாளும் எப்படி வாத ப்ரதிவாதம் பண்ணினார்களென்பதும் அப்படியே ஆனந்தகிரீயத்தில் காணும் பாயிண்ட்களாக, அதே வாக்யங்களாகக்கூட, இருக்கின்றன.
ச்ருங்கேரி ஸ்வாமிகள் ஒருவருடைய உத்தரவிலும் மேற்பார்வையிலும் குருவம்ச காவ்யம் என்ற க்ரந்தம் எழுதப்பட்டதாகச் சொன்னேனல்லவா? அதை எழுதிய காசி லக்ஷ்மண சாஸ்த்ரிகளே அதற்கு வ்யாக்யானமும் எழுதியிருக்கிறார். மூல நூலின் ஆரம்பத்தில் அவர் ஆசார்யாளின் குலத்தைப் பற்றிச் சொல்லும்போது, ‘இது ஏற்கெனவே கவீந்திரர்களால் விவரிக்கப்பட்டிருக்கிறது’–‘கவீந்த்ரை : உபர்சிதம்’2 — என்று சொல்லியிருப்பதற்கு அவரே வ்யாக்யானம் பண்ணும்போது ‘கவீந்திரர்களால்’ என்பதற்கு, ‘ஆனந்தகிரி முதலான யதீந்திரர்களால்’ என்று ஆனந்தகிரி ஒருவரை மாத்திரம் பேர் குறிப்பிட்டு ஸ்தானம் கொடுத்துச் சொல்கிறார் : “ஆனந்தகிரி யதீந்த்ராதிபி:”.
இண்டாலஜிஸ்ட்களுக்குள் ப்ரஸித்தி பெற்ற ஒருவர் (ஹெச்.ஹெச்.) வில்ஸன். ஸண்ட்ரகோட்டஸ் ஸமாசாரம் கண்டுபிடித்துச் சொன்னவர். அவரும் ஆனந்தகிரீயத்தின் ப்ராமாண்யத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார். பொதுவாக வெள்ளைக்காரர்களின் மனோபாவம் என்ன என்று முன்னே சொன்னேன். ஆகையால் அவர்கள் ‘ஸர்டிஃபிகேட்’கொடுத்துத்தான் நாம் நம்முடைய புஸ்தகங்களையே ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று இதைச் சொல்லவில்லை. அவர்களில் ரொம்பப் பேருக்கு நம்முடைய வழிகளிலும் நம்பிக்கைகளிலும் கௌரவமான பார்வை இருப்பதில்லை. தஞ்சாவூர் அரண்மனையைச் சேர்ந்த ஸம்ஸ்க்ருதச் சுவடிகளுக்கு ‘இன்டெக்ஸ்’ தயாரித்த பர்னெல் என்பவர் இப்படித்தான் ஆனந்தகிரீயத்தை ஒரே கண்டனமாகப் பண்ணியிருக்கிறார். அதில் சொல்லியே இல்லாத விஷயத்தைச் சொல்லியிருப்பதாக-‘கோரமாண்டல் கோஸ்ட்’ என்று அவர்கள் சொல்லும் சோழ மண்டலக் கடற்கரையிலேயே ஆசார்யாள் பல மடங்கள் ஸ்தாபித்ததாக ஆனந்தகிரீயத்தில் இல்லவே இல்லை. ஆனால் அப்படியிருப்பதாக-இவர் (பர்னெல்) சொல்லிக் கண்டனம் பண்ணியிருக்கிறார். வில்ஸனே ஆனந்தகிரீயத்தில் அநேக ‘மிராகிள்’கள் சொல்லியிருப்பதை நம்பமுடியாமல், ‘இதெல்லாம் ஒரே பொய்யாகப் புளுகியிருப்பது’ என்று திட்டியிருக்கிறார். ஆனாலும் மொத்தத்தில் அவர் ஸம்மதமாகச் சொல்வதை ஏன் சொல்கிறேன் என்றால் அதுதான் நமக்கு ‘அதாரிடி’ என்பதற்காக அல்ல; அநேக விஷயங்களில் ஸம்மதமாகப் போக முடியாதவர்களே அப்படிப் போகிறார்களென்றால் அப்படிப்பட்டது நிச்சயம் ஸரியானதாக, ப்ரமாணமுள்ளதாகத்தானே இருக்கும் என்பதற்காகத்தான்! அவர்கள் கொள்கைப்படி ஆசார்யாள் கி.பி. 788-820 தானே? வில்ஸன் எழுதியது பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் (1832-ல்). அதாதவது அவரது எண்ணப்படி ஆசார்யாள் அவருக்கு ஆயிரம் வருஷம் முந்தி இருந்தவர். ஆனந்தகிரீயத்தை அவர் ஆராய்ந்து பார்த்து, அதுவும் கிட்டத்தட்ட அவ்வளவு காலத்திற்கு முந்தையது, ஆசார்யாள் காலத்தையொட்டியே எழுதப்பட்டது என்பதற்கு மறுக்கமுடியாத உட்சான்று இருக்கிறது என்று அபிப்ராயம் தெரிவித்திருக்கிறார். அக்கால ஹிந்து மத நிலையை உள்ளபடி அறிவதற்கு இந்தப் புஸ்தகத்தை very safe guide -ஆக (மிகவும் நம்பகமான வழிகாட்டியாகப்) பின்பற்றலாம் என்கிறார்3.
மோனியர் வில்லியம்ஸின் ‘ஸான்ஸ்க்ரிட்-இங்கிலீஷ் டிக்ஷ்னரி’ என்பது ஒரு பெரிய வால்யூம். நிறைய ஆராய்ச்சி பண்ணி எழுதியது. அதிலே அவர் தாம் பார்த்த மூன்று சங்கர விஜயப் புஸ்தகங்களுக்குள் ஆனந்தகிரீயத்தைத்தான் ஸம்பவங்களை, ஆசார்யாளின் திக்விஜயங்களை உள்ளபடி எழுதிய “recording” என்று அபிப்ராயம் தெரிவித்திருக்கிறார்.
ஆதாரபூர்வமாக ஆசார்ய சரித்திரம் அறிய இப்படியாக ஆனந்தகிரீயத்திற்கும் வ்யாஸாசலீயத்திற்கும் நிரம்ப ப்ராமாண்யம் இருப்பதாகத் தெரிவதால் அந்த இரண்டை முக்யமாக எடுத்துக்கொண்டு, அப்புறம் அவற்றுக்கு விரோதமில்லாமல் மற்றப் புஸ்தகங்களில் என்ன அதிகப்படி விஷயங்கள் சொல்லியிருக்கிறதோ அவற்றையும் சேர்த்துக் கொண்டுவிட்டால் ஒருவாறு ஆசார்யாளின் சரித்ரத்தை உள்ளபடிப் பூர்ணமாகத் தெரிந்துகொண்டுவிடலாம்.
அந்த இரண்டு புஸ்கங்களுக்குள்ளேயே வித்யாஸமாக உள்ள இடங்களில் என்ன செய்வது?
இதோடுகூட-இதைவிட முக்யமாக என்றுகூடச் சொல்லலாம்-ஒரே புஸ்தகத்தில் பாடபேதங்கள் இருக்கிறதே, எந்தப் பாடத்தை ஸரியென்று ஏற்பது?……
ஆசார்யாளுடைய பல சிஷ்ய பரம்பரைக் கிளைகள் இருக்கின்றன. ஆசார்ய சரித்ர புஸ்தகங்களில் சில இவற்றில் ஓரொரு கிளையைக் குறிப்பாக அபிமானித்து, ஆச்சரயித்து வந்தவர்களுடைய ஸம்பந்தமுடையதாக இருக்கிறது. பொதுவாக, பொதுநோக்கோடு உள்ளவை சிவரஹஸ்யம், மார்க்கண்டேய ஸம்ஹிதை முதலிய இதிஹாஸ, புராணங்கள். ஆசார்யாளிடமோ அத்வைத ஸித்தாந்தத்திடமோ அவற்றுக்கு விசேஷப் பற்றுதலில்லை. இதிஹாஸ-புராணங்கள் என்ற வகையில் அநேக தெய்வ புருஷர்களின் கதைகளை அவை சொல்வதில் ஆசார்யாளைப் பற்றியும் சொல்கின்றன என்பதோடு ஸரி. எல்லா சங்கர விஜயங்களுக்கும் இந்த இதிஹாஸ-புராணங்கள் முற்பட்டவை என்பதும் ஆஸ்திகர்கள் அபிப்ராயம். கவிகளிலும் குறிப்பாக இன்னாரை ஆச்ரயித்து, அவர்கள் ஸம்பந்தமாக விசேஷம் கொடுத்து எழுதுவது என்றில்லாமல் பொது நோக்கோடு எழுதியவர்கள் உண்டு. சங்கராப்யுதயம், பதஞ்ஜலி விஜயம், சங்கராசார்ய சம்பூ எழுதியவர்களெல்லாம் இப்படிப் பொதுவாகக் கவிகள் என்று பெயர் வாங்கியவர்கள். இவர்கள் ஆசார்யாளைப் பற்றி எழுதும்போது வழிவழியாக வந்துள்ள நம்பிக்கைகள், கர்ணபரம்பரைக் கதைகள், தங்களுக்கு முன்பே இருந்துவந்துள்ள சங்கர விஜயக் கதைகள் ஆகியவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து முடிவு பண்ணி அதன்படியே எழுதியிருப்பார்கள்.
ஆகையால் நாம் சங்கர விஜயப் புஸ்தங்களுக்குள்ளே இதுவா, அதுவா, ஒரு புஸ்தகத்திலேயே இந்தப் பாடமா அந்தப்பாடமா என்று பார்க்கும்போது, எந்த விவரங்கள் முந்தி வந்த இதிஹாஸ – புராணாதிகளுக்கு tally ஆகிறதோ (ஒத்துப் போகிறதோ), பொதுக் கவிகள் இந்த (சங்கர விஜய) புஸ்தகத்துக்கு முந்தியவர்களாயிருக்கும் பக்ஷத்தில் அவர்கள் சொல்வதற்கும் tally ஆகிறதோ, அல்லது அந்தக் கவிகள் இதற்குப் பிற்பட்டவர்களானால் அவர்களும் இதிலிருந்தே எந்த விவரங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்களோ–அப்படிப்பட்ட ஸமாசாரங்களை ஸத்ய ப்ரமாணமானவையென்று எடுத்துக்கொண்டுவிடலாம்.
எல்லாவற்றோடுகூட, (குறிப்பாக, ஒரு முடிவும் காணமுடியாதபோது) தேசம் பூராவிலும், அல்லது பெரிய பகுதியில் ‘ஆழமான நம்பிக்கை’ என்று சொல்லக்கூடிய நெடுங்காலமாக இருந்துவரும் கர்ணபரம்பரை விஷயங்களை அத்தை பாட்டிக் கதை என்று தள்ளிவிடாமல் மதிப்புக் கொடுத்து க்ரஹித்துக்கொள்ள வேண்டும்……
ஒரு சார்பான புஸ்தகம் என்று சொல்லும்படியில்லாமல் ஒன்றுக்கு மேற்பட்ட புஸ்தகங்கள் ஒரே விதமாகச் சொல்லி, அதற்கு இசைவாகவே ஜனஸமூஹத்தின் பொதுவான நம்பிக்கையும் உள்ளபோது அந்த விஷயம் ஸரியென்று வைத்துக்கொண்டுவிடலாம்…
ஆசார்யாள் வேடிக்கை பார்க்கிற மாதிரி இருக்கிறது–பல விதமாகப் பல புஸ்தகங்களில் காட்டி! Basic texts (மூலாதார க்ரந்தங்கள்) என்று சொல்லியிருக்கும் சிவரஹஸ்ய — மார்க்கண்டேய ஸம்ஹிதைகளுக்குள்ளேயே வித்யாஸமிருக்கிறது! இரண்டிலும் ஆசார்யாள் பரமேச்வரனிடமிருந்து பஞ்சலிங்கங்கள் பெற்றுக்கொண்ட விஷயம் இருக்கிறது. ஆனால் சிவரஹஸ்யத்தில், காசி விச்வநாத லிங்கத்திலிருந்து ஸ்வாமி ஆவிர்பவித்து லிங்கங்களைக் கொடுத்தாரென்று இருக்கிறது. மார்க்கண்டேய ஸம்ஹிதையிலோ ஆசார்யாள் கைலாஸத்துக்கே போய் ஸ்வாமியை நேரே தர்சனம் பண்ணி அவரிடமிருந்து லிங்கங்களை வாங்கிக்கொண்டாரென்று இருக்கிறது. ஆசார்யாள் கைலாஸத்துக்குப் போய் ஸ்வாமி தர்சனம் பண்ணி லிங்கங்கள் வாங்கிக்கொண்டதோடு, அப்போதுதான் ‘ஸெளந்தர்ய லஹரி’யும் பெற்றுக் கொண்டாரென்று லோகத்தில் பொது வழக்காகக் கதை இருக்கிறது. அவர் கைலாஸத்துக்குப் போய் லிங்கம் வாங்கிக்கொண்டதாகச் சொல்லும் மார்க்கண்டேய ஸம்ஹிதையிலும் அப்போதே அவர் ‘ஸெளந்தர்ய லஹரி’ பெற்ற விஷயமும் இருக்கிறது. இப்படி tally ஆவதால் அதையே நாம் எடுத்துக்கொள்ளலாம். அதோடு மார்க்கண்டேய ஸம்ஹிதையில்தான் ஐந்து லிங்கங்களையும் எங்கெங்கே வைத்தாரென்றும் சொல்லியிருக்கிறது.
ஆசார்யாள் ஜயந்தி வைசாக சுக்ல பஞ்சமி என்றே தேசம் முழுவதிலும் கொண்டாடப்படுவதால் அதையே எடுத்துக்கொள்ள வேண்டுமென்று முன்னேயே சொன்னாற் போல, அவருடைய ஜன்ம ஸ்தலம் காலடி என்றே பொது அபிப்ராயமிருப்பதால் அதுவே ஸரியென்று வைத்துக் கொள்ளவேண்டும். பொதுவாக அத்தனை ஆசார்ய சரித்ரங்களிலுமே காலடியைத்தான் சொல்லியிருந்தாலும் ஆனந்த கிரீயத்தின் பாடபேதங்களில் ஒன்றில் (ஆசார்யாளின் ஜன்ம ஸ்தலம்) சிதம்பரம் என்று இருப்பதை எடுத்துக் கொள்வதற்கில்லை.
1ஏதத் கதாஜாலம் ப்ருஹச் – சங்கர விஜய ஏவ ஸ்ரீமத் ஆநந்த ஞாநாக்யாநந்தகிரி விரசிதே த்ர்ஷ்டவ்யம்.
2ஆசார்யாணாம் குலம் உபதர்சிதம் கவீந்த்ரை:
3“Sketch of the Religious Sects of the Hindus” – தொடக்கப் பகுதி.