காசி வாஸத்தில் வைதிக மதப் பிரசாரம் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

நம்முடைய தேசத்திற்கே மஹா க்ஷேத்ரமாக இருப்பது காசி. அது மட்டுமில்லாமல் பண்டித ராஜதானியாகவும் ஆதியிலிருந்து இருந்து வந்திருக்கிறது. தேசத்திலுள்ள அத்தனை மதங்களைச் சேர்ந்த பண்டிதர்களும் அங்கே இருப்பார்கள். அதனால் அங்கே போனால்தான் எல்லாரிடமும் எடுத்துச்சொல்லி, அவசியமானால் வாதம் பண்ணி, வேத மார்க்கத்தையும் அதன் உச்சியான அத்வைதத்தையும் சீக்ரத்தில் ஸ்தாபிக்க முடியுமென்றே ஆசார்யாளை அவருடைய குரு அங்கே அனுப்பினார்.

அப்படியே காசிக்குப்போய் ஆசார்யாள் கங்கையின் மணிகர்ணிகா கட்டத்திலுள்ள முக்தி மண்டபத்திலிருந்து கொண்டு உபதேசம் பண்ண ஆரம்பித்தார்.

ஏழு முக்தி க்ஷேத்ரங்களில் காசி ஒன்று. முக்தி க்ஷேத்ரம், மோக்ஷபுரி என்றால் அங்கே மரணமடைந்தால் யாரானாலும் மோக்ஷத்துக்குப் போய்விடுவார்கள் என்று ஐதிஹ்யம். அயோத்தி, வடமதுரை, ஹரித்வார், அவந்தி, த்வாரகை என்று இன்னும் ஐந்து வட தேசத்திலேயே இருக்கின்றன. பாக்கியுள்ளது காஞ்சீபுரம். ஸப்த மோக்ஷபுரிகளில் தக்ஷிணத்தில் இருப்பது இது ஒன்றுதான். “முக்தி தரும் நகரேழில் முக்கியமாம் கச்சி” என்று ஸ்ரீவைஷ்ணவ ஆசார்ய புருஷரான வேதாந்த தேசிகர் சொல்லியிருக்கிறார். காசி மாதிரியே காஞ்சீபுரத்திலும் முக்தி மண்டபம் என்று இருக்கிறது. புரியிலும் (புரி ஜகந்நாதத்திலும்) முக்தி மண்டபம் உண்டு. கங்கைக் கரை முக்தி மண்டபத்திலிருந்து உபதேசத்தை ஆரம்பித்த ஆசார்யாள் காஞ்சீபுரத்துக்கு வந்தபோது முதலில் ஸர்வ தீர்த்தக் கரை முக்தி மண்டபத்தில்தான் தங்கினார். அதனால் இப்போதும் வ்யாஸ பூஜையன்று காமாக்ஷிகோவிலிலுள்ள ஆசார்ய பிம்பம் அங்கு எழுந்தருளிவிக்கப் படுகிறது.

“ஸூத்ர பாஷ்யமோ?” என்று ப்ரமிப்பாகக் கேட்கிற வழக்கம் இன்றைக்கும் இருக்கிறது. அன்றைக்கு அதை ஆசார்யாளே உபதேசித்தாரென்றால் எப்படி இருந்திருக்கும்?

அங்கம், வங்கம், கலிங்கம் என்றுள்ள 56 தேசத்துப் பண்டிதர்களும் காசியில் ஆசார்யாள் உபந்நியாஸத்தைக் கேட்டார்கள். பாண்டித்யம், ஆஸ்திக்யம் இரண்டும் உள்ளவர்களாக இருந்த எல்லோரும், “இப்படி ஒரு அபார தேஜஸ்வி இத்தனை சிறு வயஸில் அபாரமான ஞானத்தோடு சொல்கிறாரே!” என்று சரணத்தில் விழுந்து பாஷ்யாம்ருதத்தில் திளைத்து ஆனந்தப்பட்டார்கள். மாற்று அபிப்ராயமுள்ளவர்களிலும் திறந்த மனஸுள்ளவர்கள், “இவர் சொல்வதுதான் தத்வம்” என்று எடுத்துக்கொண்டு சிஷ்யரானார்கள். அவர்கள் தாங்கள் தெரிந்து கொண்டதைத் தங்கள் தங்கள் ஊருக்குப் போய் ப்ரசாரம் பண்ணினார்கள்.

அதனால் சட்டென்று ஒரு பெரிய திருப்பம், நம்முடைய மதத்க்குப் பெரிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. எதற்காக அவதாரம் ஏற்பட்டதோ அந்தப் பணி நடக்க ஆரம்பித்தது. இப்போது1 ஹிட்லரிடம் ஊர் ஊராக, தேசம் தேசமாக தடதடவென்று விழுந்து கொண்டிருக்கவில்லையா? அப்படி 56 தேசங்களும் ஆசார்யாள் காலில் விழ ஆரம்பித்தன. ஹிட்லர் ஜயிப்பதில் ஆச்சரியமில்லை – ஸாதாரணமாகக் கெட்டதுகள்தான் கிறுகிறுவென்று பரவுகிற வழக்கம். ஆனால் ஆசார்யாளின் ஆத்ம சக்தி, அறிவு சக்தி, அநுக்ரஹ சக்தி எல்லாம் சேர்ந்ததில் நல்லதற்கும் இப்படியொரு அதிசயமான வளர்ச்சி ஏற்பட்டது.


1 1939-ல்

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is குரு தர்சனம்-துறவறம்-ஸ¨த்ர பாஷ்யம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  ஆசார்யாளின் நூல்கள்
Next