தேசம் முழுதும் ஆசார்யாள் திக்விஜயம் செய்ய வேண்டுமென்று வ்யாஸர் சொல்லியிருந்தாரல்லவா? அதன்படி ஆசார்யாள் காசியிலிருந்து புறப்பட்டார்.
முதலில் அவர் போனது குமாரிலபட்டர் இருந்த ஊருக்கு. நிவ்ருத்தி மார்க்க ப்ரவர்த்தகர் நேரெதிரான ப்ரவர்த்தி மார்க்க ப்ரவர்த்தகரைப் பார்க்கப் போனார்! அந்த ஊர் ப்ரயாகை. ருத்ரபுரம் என்று ‘ஆனந்தகிரீயம்’ சொல்கிறது1. ஊர் எதுவானாலும் ஆசார்யாளுக்கும் குமாரிலபட்டருக்கும் நடந்த ஸந்திப்பு விவரம், பட்டரின் பூர்வகதை ஆகியவற்றை எல்லாப் புஸ்தகங்களிலும் ஒரே விதமாகத்தான் சொல்லியிருக்கிறது.
மீமாம்ஸகர்களில் முதலிடம் வஹித்த பட்டர் அத்வைத வேதாந்தத்தை ஏற்றுக்கொள்ளும்படிப் பண்ணிவிட்டால் தம்முடைய அவதார கார்யத்திற்குப் பெரிய பலமாகும் என்றே ஆசார்யாள் அவரிடம்போனார். அவஸர அவஸரமாகப் போனார். ஏனென்றால் அப்போது பட்டர் ஒரு ப்ராயச்சித்த கர்மாவைப் பண்ணித் தம்முடைய உயிரைக் கொஞ்சங் கொஞ்சமாகப் போக்கிக் கொண்டிருந்தார். ப்ராணன் அடங்கியே விடுவதற்குள் அவரை ஸந்தித்துவிட வேண்டுமென்றுதான் ஆசார்யாள் ஓடினார்.
எதற்குப் ப்ராயச்சித்தம், என்ன ப்ராயச்சித்தம் என்ற கதை பார்க்கலாம்.2
குமாரஸ்வாமியின் அவதாரந்தான் குமாரிலபட்டரென்று ஞாபகமிருக்கலாம். அவருடைய அவதாரம் ஏற்பட்டபோது பௌத்தர்களின் ஆதிக்யம் அதிகமாயிருந்தது. அவர்கள் வேதாத்யயனம், யாக யஜ்ஞங்கள், வர்ணாச்ரம விபாகங்கள் எதுவும் இல்லாமலிருந்துகொண்டு ஜனங்களையும் அப்படியே நாஸ்திகமாகப் பண்ணிக்கொண்டு வந்தார்கள். இந்த நிலைமையை மாற்றுவதற்கே குமாரிலபட்டரின் அவதாரம் உண்டானது. இப்போது நான் சொன்ன விஷயமெல்லாம் கர்ம மார்க்கத்தில் பௌத்தம் ஏற்படுத்திய ஹானியாகும். இப்படியே ஈச்வரன், ஈச்வர பக்தி என்பவை இல்லாமல் பக்தி மார்க்கத்துக்கும் அது ஹானி செய்து வந்தது. எல்லாம் ஒரு பாழ்வெளியாகப் போய் முடிவதுதான் மோக்ஷமென்று சொல்லி, ப்ரஹ்ம ஸ்வரூபமாக ஆகிவிடுவதற்கு வழி சொல்லும் ஞான மார்கத்துக்கும் ஹானி இழைத்து வந்தது. இவற்றில் பக்தி, ஞான ஸமாசாரங்களை விட்டுவிட்டு வைதிகமான கர்ம மார்க்கத்தை மட்டும் நிலைப்படுத்தத்தான் குமாரஸ்வாமி குமாரிலராக வந்தது. அவதாரம் மநுஷ்ய ரீதியிலேயே நிறையப் பண்ணுவதுதானே வழக்கம்? அதனால் பௌத்தத்தைக் கண்டிக்க அவர் நினைத்தபோது, முதலில் அந்த மதக் கொள்கைகள் எல்லாம் என்னவென்று மநுஷ்ய ரீதியிலேயே நன்றாகப் படித்தறிய வேண்டுமென்று எண்ணினார்.
ஒன்றைக் கண்டனம் பண்ணுவதற்குமுன் அந்த விஷயம் என்ன, எதனால் அதைச் சேர்ந்தவர்கள் அப்படிச் சொல்கிறார்கள் என்பதையெல்லாம் தீர்க்கமாகத் தெரிந்து கொள்ள வேண்டியதே முறை. இப்பொழுதுள்ள புதுக் கொள்கைக்கு மாறுதலாக ஒன்றை தர்ம சாஸ்த்ரம் சொல்கிறதென்றால் உடனே அது தப்பு என்று கண்டனம் செய்யப் புறப்படுகிறார்களே, இது ஸரியில்லை. சாஸ்த்ரம் ஏன் ஏற்பட்டது, அது ஏன் அப்படிச் சொல்கிறது, அதற்கு என்ன ப்ரயோஜனம் சொல்கிறது, அந்த ப்ரயோஜனத்தைப் பூர்விகர்கள் அடைந்தார்களா, இல்லையா, அப்படி அடைந்திருந்தால் இப்போது நமக்கு அது வேண்டாமா, வேண்டாமென்றால் ஏன் வேண்டாம், வேண்டுமென்றால் அப்போதும் நாம் ‘புதுக் கொள்கைதான்’ என்று பிடித்துக்கொண்டிருக்கலாமா என்பதையெல்லாம் ஆலோசித்துப் பார்த்தே முடிவெடுக்க வேண்டும். ஆனால் இந்தக் காலத்தில் “உங்கள் சாஸ்த்ரம் சுத்த நான்ஸென்ஸ். அதில் ஆராய்ந்து பார்க்க ஒன்றுமில்லை. எங்கள் கொள்கைதான் கொள்கை” என்று ஒரேயடியாகத் தள்ளிவிடுகிறார்கள்.
குமாரிலபட்டர் மாற்றுக் கட்சியையும் பூர்ணமாகத் தெரிந்துகொண்ட பிறகே கண்டிக்கப் போகணுமென்ற கருத்தை உடையவர். ஆனால் பௌத்தர்களோ வைதிகாசாரங்களோடு உள்ள ப்ராம்மணமனுக்குத் தங்கள் சாஸ்த்ரங்களைச் சொல்ல மாட்டார்கள். இந்த ஏறுமாறான ஸந்தர்பத்தில் என்ன பண்ணலாமென்று அவர் யோசித்து, ‘ஸரி, வைதிகாசாரத்தை விட்டுவிட்டு, பௌத்தத்தில் உண்மையான பற்றுதல்கொண்டே அந்த சாஸ்த்ரத்தைக் கற்றுக்கொள்கிற மாதிரி வேஷம் போட வேண்டியதுதான். வேறே வழியில்லை’ என்று நினைத்தார். பௌத்தர் வேஷம் போட்டுக்கொண்டு ஒரு பெரிய விஹாரத்திலிருந்த அவர்களுடைய வித்யாசாலையில் சேர்ந்தார். அது ஏழு மாடிகள் கொண்ட பெரிய விஹாரம்.
குமாரிலபட்டர் அத்யாவச்யமான கர்மாநுஷ்டானங்களை மட்டும் ரஹஸ்யமாகப் பண்ணிக்கொண்டு பௌத்த குருமார்களிடம் படித்து எல்லாம் தெரிந்துகொண்டார்.
அவர்கள் ஒரேயடியாக வேதத்தை தூஷித்து ஆர்க்யூ பண்ணும்போது — “வேத வேள்வியை நிந்தனை செய்துழல்” என்று ஞானஸம்பந்தர் சொன்னதுபோலச் செய்யும்போது — இவருக்கு துக்கம் துக்கமாக வரும். ‘வலிய வந்து, பொய் வேஷம் போட்டுக்கொண்டு, இப்படி நமக்கு உயிராயுள்ள வேதத்தின் தூஷணையைக் கேட்டுக் கொள்கிறோமே?’ என்று அழுகை வரும். அடக்கிப் பார்ப்பார். சில ஸமயம் அடங்காமல் கண்ணில் ஜலம் வந்துவிடும். பிக்ஷூக்கள் இதை கவனித்தார்கள். ‘இவன் வைதிகப் பார்ப்பானாயிருப்பானோ? என்று ஸந்தேஹித்திதார்கள். “ஏன் அழுகிறீர்?” என்று கேட்பார்கள். இவர், “ஆஹா! எத்தனை புத்திசாலித்தனமாகக் கண்டனம் பண்ணியிருக்கிறது! அதுதான் ஆனந்த பாஷ்பம் வருகிறது!” என்று ஸமாளிப்பார்.
எத்தனை நாள் ஒளிக்க முடியும்? அவர்கள் இவருடைய நடவடிக்கைகளைக் கூர்மையாகக் கண்காணித்து உண்மையைத் தெரிந்துகொண்டு விட்டார்கள். ‘கெடுத்தானே பார்ப்பான்! இவன் விரட்டிவிட வேண்டியதுதான். எங்கே விரட்டுவது? இவன் கொஞ்சமாகத் தெரிந்துகொண்டிருந்தால் இந்த விஹாரத்திலிருந்து வெளியுலகத்துக்கு விரட்டி விட்டால் போதும். இவனோ பூர்ணமாகத் தெரிந்துகொண்டு விட்டான். அதனால் வெளியுலகத்துக்குப் போய்ப் பூர்ணமாகக் கண்டன ப்ரசாரம் பண்ண ஆரம்பிப்பான். ஆகையால் இவனை உலகத்தைவிட்டே விரட்ட வேண்டும்’ என்று தீர்மானித்தார்கள் – “அஹிம்ஸா பரமோ தர்ம:” என்று உபதேசித்தவர்கள்!
உப்பரிகையிலிருந்து வேடிக்கை பார்க்கலாமென்று சொல்லி ஹிதவஞ்சனையாக அவரை ஏழாவது மாடிக்குக் கூட்டிக் கொண்டுபோய் அங்கேயிருந்து கிழே தள்ளிவிட்டார்கள்.
அவர் கீழே விழுந்தார்.
அந்த ஆபத்திலும் வேதம் கை கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு “வேதம் ப்ரமாணமாக இருந்தால் எனக்கு எந்த ஹானியும் ஏற்படாமல் உயிருடன் இருப்பேனாக!” என்று சபதம் பண்ணிக்கொண்டே விழுந்தார்!
“பதந் பதந் ஸௌத–தலாந்யரோருஹம்
யதி ப்ரமாணம் ச்ருதயோ பவந்தி |
ஜீவேயம் அஸ்மிந் பதிதஸ்-ஸமஸ்தலே
மஜ்ஜீவநேந ச்ருதிமாநதா கதி: || “3
அத்தனை நம்பிக்கையோடு அவர் விழுந்ததற்கேற்க அவருக்கு ப்ராணஹானி ஏற்படவில்லை! எலும்பு கிலும்பு முறியக்கூட இல்லை! கண்ணில் மட்டும் ஒரு கல் குத்திவிட்டது.
‘இதுகூட எப்படி நேரலாம்? வேதத்தின் சக்திக்கு இந்த அளவுகூட ஒரு ஊனம் ஏற்படலாமா?’ என்றே அவர் கோபித்துக் கொண்டாராம்!
அப்போது ஒரு அசரீரி வாக்கு உண்டாயிற்று. “வேதம் ப்ரமாணமாக இருந்தால் — ‘யதி ப்ரமாணம்’ — என்றீரே! ‘இருந்தால்’ என்பதில் உமக்கு அதன் ப்ராமாண்யத்தில் கொஞ்சம் ஸந்தேஹம் இருந்ததாகத்தானே தொக்கி நிற்கிறது? அதனால்தான் இந்தச் சின்ன ஊனம்!” என்று அது சொல்லிற்று.
அப்புறம் குமாரிலபட்டர் க்ருஹத்துக்குத் திரும்பினார். பௌத்தத்தை அலசி அலசிக் கண்டனம் பண்ணிப் (பூர்வ) மீமாம்ஸை என்கிற கர்ம மார்க்கத்தை மறுபடி நன்றாக அநுஷ்டானத்துக்குக் கொண்டு வந்தார். தேசத்தில் மறுபடி வைதிக ஆசார, அநுஷ்டானங்கள் வ்ருத்தியாயின. அநேக வருஷங்கள் ஆகி அவர் நல்ல வ்ருத்தராகி விட்டார்.
‘ஸநாதன தர்ம ஸம்ஸ்தாபனத்தில் நாம் ஆரம்ப கட்டமாகச் செய்யவேண்டியதெல்லாம் செய்தாயிற்று. அப்பாக்காரர் அவதாரம் பண்ணி பாக்கி செய்ய வேண்டியதை ஆரம்பித்து விட்டார். நாம் திவ்ய லோகத்துக்குத் திரும்பிவிட வேண்டியதுதான்’ என்று எண்ணினார்.
‘தம்முடைய தேஹ பரித்யாகத்திலும் லோகத்திற்கு சாஸ்த்ராபிமானம் ஏற்படும்படியாக ஒன்று பண்ணிக்காட்ட வேண்டும். ஜீவிப்பதற்கு மட்டுமில்லாமல் சாவதற்கும்கூட சாஸ்த்ரப்படிதான் செய்யணுமென்று காட்டவேண்டும்’ என்று நினைத்தார்.
சாஸ்த்ரப்படித் தாம் கடுமையான ஒரு ப்ராயச்சித்தம் பண்ணிக்கொள்ள வேண்டியவர் என்று அவர் அபிப்ராயப்பட்டார். என்ன அப்படி பெரிய தப்புப் பண்ணினார், அதற்காக ப்ராயச்சித்தம் என்றால்… ‘ஒரே ஒரு எழுத்து சொல்லிக் கொடுத்தாலும் அவர் நமக்கு குரு. குருவுக்கு த்ரோஹம் பண்ணுவதை சாஸ்த்ரம் மஹா பாபம் என்கிறது. புத்த பிக்ஷூக்களோ நமக்கு அவர்களுடைய மத விஷயம் முழுவதும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். நாமானால் பொய் வேஷம் போட்டுக் கற்றுக் கொண்டோம்! அப்புறம் அவர்கள் சொல்லிக்கொடுத்ததையெல்லாம் கண்டனம் பண்ணி அவர்களுக்கு மனவேதனை கொடுத்திருக்கிறோம். இப்படி குரு த்ரோஹியாகிவிட்டோம். கர்மாநுஷ்டானத்தை ஸ்தாபிக்க வந்த நாமே இதற்கான ப்ராயச்சித்த கர்மாவைப் பண்ணாமலிருக்கலாமா?’ என்று நினைத்து, இதற்கு என்ன ப்ராயச்சித்தம் சொல்லியிருக்கிறதென்று தர்ம சாஸ்த்ரங்களைப் பார்த்தார்.
‘இவர் ஸொந்த ஆதாயத்துக்காக வேஷம் போடவில்லை. லோகத்துக்கு ஸத்யம் தெரியவேண்டுமென்றே அப்படிப் பண்ணினார். சிஷ்யனுக்கு குருபக்தி மாதிரியே, குருவுக்கு சிஷ்ய ரக்ஷணம் பெரிய தர்மம். அவர்களானால் இவரை ஏமாற்றி ப்ராணஹானி பண்ணவே யத்தனித்தார்கள். இப்படிப்பட்டவர்களின் விஷயத்திலே குரு த்ரோஹம் என்பது ஸரியாகுமா?’ என்று நமக்குத் தோன்றலாம்! ஆனால் பெரியவர்களோ பிறத்தியார் செய்த பெரிய தப்புக்களையும் மறந்துவிட்டுத் தாங்கள் செய்த சின்னத் தப்புக்களைத்தான் பெரிசாக நினைப்பார்கள். அதனால் நிஜமாக இல்லாத போலி குரு த்ரோஹத்திற்கும் தம்மைத் தாமே சாஸ்த்ர ப்ரகாரம் தண்டித்துக்கொள்ளத்தான் வேண்டுமென்று அவர் நினைத்தார்.
ப்ராயச்சித்தத்துக்காகப் புஸ்தகம் பார்த்தார். அதில் ரொம்பவும் கஷ்டமான முறையில் மரணத்தை ஏற்பதே குரு த்ரோஹத்திற்கு ப்ராயச்சித்தம் என்பது போட்டிருந்தது. ‘அப்படியா? ஸரி, சரீரத்தை அணு அணுவாகப் பொசுக்கிக்கொண்டு உயிரை விடுவோம்;’ என்று உடனே முடிவு பண்ணிவிட்டார். நாமானால் அந்தப் புஸ்தகத்தை நெருப்பில் போட்டிருப்போம்! அவரோ, ‘நல்ல வேளை! குரு த்ரோஹத்திற்கு ப்ராயச்சித்தமே இல்லை என்று சொல்லாமல் இப்படியொன்று சொல்லியிருக்கே!’ என்று ஸந்தோஷமே பட்டார்.
உமியை நிறையக் கொட்டிக்கொண்டு அது சிறுகச் சிறுகக் கருகும்படி எரித்துக்கொண்டு அதற்குள்ளே அவர் இறங்கிவிட்டார். அணு அணுவாக எரிந்து சாவதற்கு இதுவே வழி என்று இப்படிப் பண்ணினார். ‘துஷாக்னி ப்ரவேசம் செய்தார்’ என்று சொல்லியிருக்கிறது. துஷம் என்றால் உமி.
உமிக் காந்தல் அக்னியில் அவர் இறங்கிவிட்டாரென்று ஆசார்யாள் கேள்விப்பட்டதால்தான், ‘எந்த நிமிஷம் என்ன ஆகுமோ? நாம் சுருக்க (விரைவில்) போய் அவரை வேதாந்தம் சொல்லும் ஞானமார்க்கத்தை ஏற்கும்படிச் செய்ய வேண்டுமே!’ என்று பதறிக்கொண்டு வந்து சேர்ந்தார். ப்ராயச்சித்தம் முடிந்தபின் ஆஸாமியையே பார்ப்பதற்கில்லையே என்பதால் நாலு நாளில் ஓடோடி வந்து சேர்ந்தார்.
அக்னியில் வெந்து கொண்டிருந்த குமாரிலபட்டருக்கு ஆசார்யாளின் தர்சனமே குளிர்ச்சியாக இருந்தது. அதுவும் போதாதென்று ஆசார்யாள் உபதேசமாக அவர் மேலே ஞானாம்ருதத்தையும் வர்ஷித்தார்.
உபதேச ஸாரம் என்னவென்றால்: வேதத்தில் சொன்னபடியே கர்மாநுஷ்டானம் அவச்யம் செய்யத்தான் வேண்டும். ஆனால் அது சித்தப் பரிசுத்தி ஏற்பட்டு ஞானவிசாரத்திற்குப் பக்வமாதற்குத்தானே தவிர, குமாரிலபட்டர் முதலான மீமாம்ஸகர்கள் சொல்கிறபடி அதுவே முடிவான ஸாதனம் என்று அல்ல. கர்மாநுஷ்டானத்தால் அடையும் ஸ்வர்கம் முதலான இன்பப் பலன் எதுவும் சாச்வதமில்லை. ஆத்மாவை அறிந்து ஆத்மாவாகவே, ப்ரஹ்மமாகவே நிற்பதுதான் சாச்வதமான மோக்ஷம். அதுதான் ஸத்ய ஸத்யமான ஸ்திதி.
“ஜீவனை ‘இன்ன இன்ன செய்’ என்று கார்யத்தில் ஏவும் கர்ம காண்டமே வேதத்தின் பரம தாத்பர்யம். வெறுமே ஒரு கார்யமுமில்லாததாக சும்மா இருக்கும் ஆத்மாவைப் பற்றிச் சொல்லியிருக்கும் ஞான காண்டத்தில் நாம் எடுத்துக்கொள்வதற்கு எதுவுமில்லை. ஏன் பின்னே இப்படி ஒரு காண்டம் இருக்கவேண்டுமென்றால், கர்த்தாவை அவனேதான் ஸ்வாமி என்று தூக்கிவைத்து ஸ்துதித்தால்தான் அவனுக்கு உத்ஸாஹம் ஏற்படும் என்றுதான் இருக்கிறது. இதற்கு ‘அர்த்தவாதம்’ என்று பெயர். ஆனால் இதுவே பரமதாத்பர்யமாகாது” என்று மீமாம்ஸா மதம் சொல்லும். இதற்கு ஆசார்யாள் என்ன சொன்னாரென்றால்: கார்யத்தைச் சொல்வதாலேயே, சொல்கிறபோதே, வேதத்தை அங்கீகரிக்கிறோம் என்று மீமாம்ஸகர்கள் சொன்னாலும் உண்மையில் அந்தக் கார்யத்தால் ஏற்படும் ப்ரயோஜனமான ஆனந்த ப்ராப்திக்காகத்தான் அங்கீகரிக்கிறார்களே தவிர கார்யத்திற்காகவே அல்ல. ‘இன்ன இன்ன செய்’ என்று கார்யங்களில் ஏவும் ”விதகிள்” கர்ம காண்டத்தில் இருப்பது போலவே ‘இன்ன இன்ன செய்யாதே’ என்று கார்யத்திலிருந்து விலக்குவதாகவுள்ள “நிஷேத”ங்களும்தான் இருக்கின்றன. கார்யமில்லாததைச் சொல்லும் இவற்றையும் மீமாம்ஸகர்கள் ஏற்றுக்கொள்ளத்தான் செய்கிறார்கள். ஏனென்றால் ஆனந்த ப்ராப்தி என்ற ப்ரயோஜனத்தை அடையவேண்டுமென்றால் இந்த நிஷித்த கர்மாக்களை (நிஷேதமாக உள்ள கர்மாக்களை) நாம் செய்யாமல் இருந்தால்தான் முடியும் என்பதால் இப்படி. கர்ம காண்டத்திலேயே சில கார்யங்களை விடச் சொல்லியிருப்பது. அதன் ப்ரயோஜனத்தை உத்தேசித்து ஏற்கத்தக்கதாகிறது என்றால் ஞான காண்டத்தில் ஸகல கார்யங்களையுமே விட்டுவிட்டுச் சும்மா இருப்பதுதான் பரம ப்ரயோஜனம் என்று இருப்பதை எப்படி வெறும் அர்த்தவாதம் என்று தள்ளலாம்? கர்மாவின் ப்ரயோஜனம் என்ன, ஞானத்தின் ப்ரயோஜனம் என்ன என்று சீர்தூக்கிப் பார்த்துத்தானே முடிவு செய்யவேண்டும்? கர்மாவினால் அடையும் ஆனந்த ப்ராப்தி சாச்வதமே அல்ல. ஞானத்தினால் அடையும் ஆனந்த ப்ராப்தியோ–ஆத்மானந்தம், ப்ரஹ்மானந்தம் என்பதோ–சாச்வதமாக இருப்பது. அப்போது அதைத் தானே எடுத்துக்கொள்ள வேண்டும்? ஆகையால் கர்மாக்களையும் பண்ணவேண்டியவரை பண்ணத்தான் வேண்டுமென்றாலும், அவை தரும் சிறிய சிறய ஆனந்தங்களுக்காக இல்லாமல் இந்த ஆனந்த பலனை த்யாகம் பண்ணிவிடவேண்டும். அப்படிப் பண்ணினாலே பேரானந்தமான ஆத்ம லக்ஷ்யத்தில் சேர்க்கிற ஞானமார்க்கத்தில் ப்ரவேசிப்பதற்கான சித்த சுத்தி ஏற்படும்.
மீமாம்ஸையில் கர்மா என்பது அதுவே பலனைத் தருகிறது என்று சொல்லி, ஸ்வாமி வேண்டாமென்று தள்ளுவதும் அடியோடு ஸரியில்லை. பெரிய ப்ரபஞ்ச நிர்வாஹத்தைப் பார்த்தாலும், ஒரு புழுவிலிருந்து ஆரம்பித்து ஸகல ஜீவர்களுக்கும் இருக்கும் குணாதிசயங்களைப் பார்த்தாலும், அந்த ஜட ப்ரபஞ்சத்தை இந்த ஜீவ லோகத்தோடு கோடி தினுஸில் முடிச்சுப் போட்டு ஜீவ யாத்ரை நடப்பதைப் பார்த்தாலும் இதையெல்லாம் நடத்துவிக்கிற ஒரு பேரறிவு இருந்தே தீர வேண்டும், அதுதான் இன்ன கார்யத்திற்கு இன்ன பலன் என்று திட்டம் பண்ணி நடத்துகிறது என்று ஒப்புக்கொள்ள வேண்டியே ஏற்படும். அந்தப் பேரறிவைத்தான் ஸ்வாமி என்பது. சித்த சுத்திக்காகவே கார்யமே தவிர இந்தக் கார்யத்தினாலேயே கிடைக்கும் பலனுக்காக இல்லை என்னும்போது, ‘அப்பா, இந்தப் பலனை உன் பாதத்தில் அர்பபணம் பண்ணிவிட்டேன். எனக்கு சித்த சுத்தியைத் தா’ என்று அவனிடம்தான் பலத்யாகம் பண்ண வேண்டும்.
‘அவன் அத்வைதமான ஞானத்தை அநுக்ரஹிக்கும் வரையில் அவனிடம் அன்போடு பக்தி பண்ணிக்கொண்டு இப்படிக் கர்மபல த்யாகம் செய்து வரவேண்டும். அப்புறம் அவனாகவே ஆகிவிடலாம். பக்தி என்கிற இந்த அன்புக்கும் மீமாம்ஸையில் இடமே இல்லாமலிருப்பது ஒரு பெரிய குறை. இந்த அன்பின் அம்சமாக லோகத்திலுள்ள பல தினுஸான நல்ல அன்புகள் எதற்கும் அதில் இடமில்லை. ஒரு ஜீவன் என்றால் அவன் உடம்பால் செய்யும் கார்யம், மனஸால் செய்யும் அன்பு, மனஸும் கழண்டு (கழன்று) போய் அப்படியே ஆத்மாவாக உள்ள சாந்தி நிலை என்று எல்லாமும் சேரும்படி, ஒன்றுக்கொன்று கைக்கொடுத்துப் போகும்படி வழி சொன்னால்தானே integrated personallty (ஒழுங்கு சேர்ந்த ஜீவ பூர்ணம்) உருவாக முடியும்? மனஸின் அன்பும் இல்லை, ஆத்மாவின் சாந்தியும் இல்லை, வறட்டு வறட்டு என்று உடம்பால் கார்யம் பண்ணிக்கொண்டிருந்தால் போதும் என்றால் எப்படி ஒரு ஜீவனுக்கு நிறைவு கிடைக்கும்?
‘கர்மம், பக்தி இரண்டையும் கலந்து ஈச்வரனுக்காகப் பண்ணவேண்டியதையெல்லாம் பண்ணவேண்டும். அவனுடைய ஸ்வரூபமாகவே லோகத்தையெல்லாம் பார்த்து அதற்கானதையெல்லாமும் பண்ணவேண்டும். கடைசியில் இதெல்லாமும், ‘அவனுக்கானது, அவர்களுக்கானது’ என்பதைவிட ‘நமக்கேயானதுதான்’ என்கிற மாதிரி நமக்கே ஞான நிஷ்டைக்கு ஏறுவதற்கான யோக்யதை ஸித்திக்கும், அப்போது எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு, கார்யமெல்லாம் போச்சு, மனசும் போச்சு என்று அப்படியே ஆத்மாவாக இருந்துகொண்டிருப்பதற்கான ஸாதனைகளை ஆரம்பிக்க வேண்டும். ஸாதனை பண்ணி முடிவில் அப்படி ஆகிவிடவேண்டும். அப்போதுதான் ஜன்மா இல்லை, ஸம்ஸார பந்தமில்லை என்று சாச்வதமாக விடுதலை பெற முடியும். ஏனென்றால் ஜன்மம், பந்தம் எல்லாம சரீரமும், மனஸும் உள்ளவரைதானே ஸாத்தியம்? ரூபமுமில்லை, எண்ணமுமில்லை என்றால் எதற்குக் கர்மா, கர்ம பலன் ஆகியவற்றைக் கொடுத்து ஜன்மா உண்டாக்கி, ஸம்ஸாரத்தில் பந்தப்படுத்த முடியும்? அந்த சாச்வத சாந்தம் வேண்டாம், ஸதா கார்யங்களில் தான் சிக்கிக்கொண்டு ஏதாவது சஞ்சலப்பட்டுக் கொண்டிருப்பது என்றால் ஸரியா?
“மா தே ஸங்கோஸ்த்வகர்மணி – கார்யம் செய்யாமலிருப்பதில் உனக்குப் பற்று வேண்டாம்; அதாவது கார்யம் பண்ணிக் கொண்டேயிரு” என்று பகவான் சொல்லவில்லையா என்றால் இது ஆரம்ப கட்டத்தில் இருக்கும் ஸாதகனுக்கே சொன்னது. இத்தனை காலமாக, ஜன்ம ஜன்மாவாக இந்த்ரிய போகங்களுக்காக இவன் ஓயாமல் கார்யம் பண்ணிக்கொண்டே இருந்தவன். தீடீரென்று நிறுத்து என்றால் எப்படி முடியும்?” கார்யத்தை விட்டுவிட்டு ஞானியாக ஸந்நியாஸியாக இப்பவே நான் ஆகி விடுவேன் என்று நினைத்தாலும் உன்னால் அப்படி முடியாது; அதற்கான சக்தி உனக்கு இல்லை; ந ஹி (தேஹப்ருதா) சக்யம் – தேஹாபிமானமுள்ள மட்டும் கார்யத்தை விடச் சக்தி இருக்காது: ‘ந ஹி தேஹப்ருதா சக்யம் த்யக்தும் கர்மாண்யசேஷத:’
இந்த ஸ்டேஜிலேயே விடுவேனென்றால், உடம்பு கார்யம் பண்ணாவிட்டாலும் மனஸ் பழக்கப்பட்ட அந்த இந்த்ரிய போகக் கார்யங்களைப் பண்ணிப் பார்த்துக் கொண்டேதானிருக்குமேயழிய, அடங்கி ப்ரசாந்தமாயிருக்காது. வெளியில் கார்யத்தை நிறுத்தின ஞானி மாதிரி இருந்து கொண்டு மனஸுக்குள்ளே இந்த்ரிய விஷயமானவற்றையே நினைத்துக்கொண்டிருப்பவன் மூடாத்மாதானே? மித்யாசாரன் என்கிற ‘ஹிபாக்ரிட்’ தானே?’ கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மனஸா ஸ்மரந் | இந்த்ரியார்த்தாந் விமூடாத்மா மித்யாசார: ஸ உச்யதே ||’ அதனாலே, அப்பா அர்ஜுனா, இப்போது உன் நிலைமையிலே நீ ஏதோ ஒரு மோஹத்தில் (மதி மயக்கத்தில்) கார்யத்தை விடுவேன் என்றாலும் உன் இயற்கை குணம் உன்னைக் கட்டியிழுத்து, உன் வசமில்லாமலே உன்னைக் கார்யத்தில்தான் தள்ளும்: ‘ஸ்வபாவஜேந கௌந்தேய நிபத்த: ஸ்வேந கர்மணா | கர்த்தும் நேச்சஸி யந்-மோஹாத் கரிஷ்யஸ்-யவ சோ (அ)பி தத் ||’ அதனால்தான் உன்னை இப்போது கார்யத்தை விட வேண்டாமென்றது. ஆனால் இப்படியே இஷ்டப்படிப் பண்ணாமல் சாஸ்த்ரப்படிப் பண்ணு என்கிறேன். என்னென்ன பண்ணனும், என்னென்ன பண்ணப்படாது என்று வரையறை செய்து கொள்கிறதற்கு சாஸ்திரம் சொல்கிறதே ‘அதாரிடி’. தஸ்மாத் சாஸ்திரம் ப்ரமாணம் தே கார்யாகார்ய வ்யவஸ்திதௌ (கீதை XVI. 24). பற்றோடு பண்ணுவதை விட்டு, பற்றை விட்டு பகவதர்ப்பணம் பண்ணு என்கிறேன்:’ தத் குருஷ்வ மதர்ப்பணம் ‘. இப்படிப் பண்ணிக்கொண்டே போனாயானால் தாமரை இலைத்தண்ணீர் மாதிரிப் பாவம் உன்னைத் தொடமலிருக்கும் நிலை வரும்: ‘லிப்யதே ந ஸ பாபேந பத்ம-பத்ரமிவாம்பஸா.‘ இப்படி அவனவனுக்கும் சாஸ்த்ரோக்தமாக வாய்த்த கர்மாவை நிஷ்காம்யமாகப் பண்ணிப் பலனை ஈச்வரனுக்கு அர்ப்பித்தானானால் அப்புறம் அவனுக்கு ஞான யோகத்தில் பிரவேசிக்கின்ற யோக்யதா ஸித்தி ஏற்படும்: ஸ்வகர்மணா தம் அப்யர்ச்ச ஸித்திம் விந்ததி மாநவ:| இது சின்ன ஸித்தி. இதற்கும் அப்புறம், கார்யத்தை விட்டுவிட்டு ஞான விசாரமே பண்ணிக்கொண்டு போகும்போதே சாச்வத மோக்ஷமான மஹா ஸித்தி – “ஸித்திம் பரமாம்” என்பது – கிடைக்கும். ‘ நைஷ்கர்ம்ய ஸித்திம் பரமாம் ஸந்ந்யாஸே நாதிகச்சதி |’ ஒரு கார்யமுமில்லாத நிலையே அந்தப் பரம ஸித்தி. அதை ஒருவன் ஸந்நியாஸியாக ஆகி அடைகிறான்,” என்கிறார். ஆக கார்யம் பண்ணாமல் மனஸை அடக்கி சாந்தமாக இருக்க மநுஷ்யர்களுக்கும் பக்வம் போதாததால் தான் சாஸ்த்ரோக்தமான ஸகல கார்யமும் பண்ணி அந்தப் பக்வத்தைப் பெறும்படி பகவான் சொன்னாரே தவிர அதுவே தான் முடிவு என்று சொல்லவேயில்லை. ஸாதனா மார்க்கத்தில் ஏற விரும்புகிறவனுக்கே கார்யம் உபயமாகிறது; அவனே ஏறிவிட்ட பிறகு ‘சமம்’ என்பதாகக் கார்யங்களை ஒழித்துவிட்ட நிலைதான் மோக்ஷோபாயமாகிறது என்று ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறார்: ‘ஆருருக்ஷோர்-முநேர்-யோகம் கர்ம காரணம் உச்சயதே | யோகாரூடஸ்ய தஸ்யைவ சம: காரணம் உச்யதே ||’. “ஸகல கர்மமும் ஞானத்தில் போய் அடங்கித்தான் பூர்த்தியடைகிறது: ஸர்வம் கர்மாகிலம் பார்த்த ஞாநே பரிஸமாப்யதே . ஞானிக்குக் கார்யம் கிடையவே கிடையாது: தஸ்ய கார்யம் ந வித்யதே” என்று தீர்மானமாக முத்தாய்ப்பு வைத்துச் சொல்லிவிட்டார்.4
கீதை கர்மயோகத்தை நிறையச் சொல்லியிருக்கிறதென்பதால் அதையே முடிவாகச் சொல்லியிருக்கிறதென்று அர்த்தமில்லை என்று ஆசார்யாள் தம்முடைய பாஷ்யத்தில் நன்றாகத் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
இதேபோல, ஆசார்யாளின் மதத்திற்கு ஆதாரமான உபநிஷத்துக்களிலும்கூட எங்கேயாவது கர்ம மார்க்கத்தை வலியுறுத்திச் சொல்லியிருந்தால் அதுவேதான் பரம தாத்பர்யம் என்று நினைத்துவிடக்கூடாது என்றும் ஆசார்யாள் விளக்கி வைத்திருக்கிறார். ‘ஈசாவாஸ்ய (உபநிஷ)’த்தில் மநுஷன் நூறு வயஸும் வைதிக கர்மா பண்ணிகொண்டிருக்கட்டும் என்று ஆரம்பத்தில் மந்த்ரம் இருக்கிறது. ஆனால் இங்கே ‘ஜிஜீவிஷேத்’ என்று போட்டு, ‘லோக வாழ்க்கை வாழ ஆசைப்படுபவன் இப்படிப் பண்ணட்டும்’ என்றே இருக்கிறது. அதாவது நிவ்ருத்தி மார்க்கத்தில் போகாமல் ப்ரவருத்தியில் போகிறவனுக்கே இந்த உபதேசம். ‘இஷ்டப்படிப் பண்ணாதே! சாஸ்தரப்படி ஸகலமும் பண்ணு’ என்று அவனுக்குச் சொல்கிறது. இது ஆசார்யாளுக்கும் பூர்ண ஸம்மதம்தான். அடுத்த மந்த்ரத்திலேயே ஆத்மாவைத் தெரிந்துகொள்ளாதவன், அதாவது ஞான மார்க்கத்தில் போகாதவன் ஆத்மஹத்தி (தற்கொலை)யே செய்து கொண்டவன்தான் என்றும் வருகிறது. அப்புறம் ஒரே அத்வைதமாக ஆத்ம லக்ஷணத்தைச் சொல்லியிருக்கிறது. ஆகையால் வேதத்தில் கர்மாவைச் சொல்லியிருப்பது ஞானத்துக்குப் போவதற்குப் பூர்வாங்கமாகத்தான்.
இப்படியெல்லாம் ஆசார்யாள் குமாரிலபட்டருக்குத் தத்வங்களை எடுத்துச்சொல்லி உபதேசித்தார். ஒரேயடியாகக் கர்மா என்றே இருந்தவரின் மரண ஸமயத்தில் வந்து அவர் கர்மாவே தொடவே முடியாத சாந்தத்தில் சேரும்படியாக இப்படி உபதேசித்தார். அந்த சாந்தத்தின் அவதாரம்தான் ஆசார்யாள். அவதாரத்திலே அவர் கார்யமயமாகத்தான் ஸதாவும் தெரிந்து கொண்டிருந்தாலும் அப்போதும் அந்தரங்கத்தில் ஒன்றும் செய்யாத சாந்த தத்வமாகத்தான் இருந்து கொண்டிருந்தார். நிறையச் சொன்னேன், — எவ்வளவுதான் சொன்னாலும், செய்தாலும் ஒன்றும் செய்யாமல் சும்மாயிருப்பதுதான் முடிவு. அதைத தெரிவிப்பதுதான் பெரிய உபகாரம் என்பதற்காகத்தான் அவர் அவதாரம் எடுத்திருந்தது.
ஆசார்யாள் அன்போடு கூட உபதேசிக்க உபதேசிக்க, கர்ம மார்க்கத்தையே முடிந்த முடிவாகப் பிடித்துக்கொண்டிருப்பது உபயோகமில்லை என்று குமாரிலபட்டருக்குப் புரிந்தது. ஈச்வர பக்தியில் போய் ஞானம் பெற்று ஆத்மாவைத் தெரிந்து கொண்டாலன்றி சாச்வதமான சாந்தி ஸெளக்யங்கள் இல்லை என்று புரிந்து கொண்டார்.
ஆசார்ய தர்சனமும், உபதேசமும் உமிக்காந்தல் அக்னியின் தஹிப்பை அடியோடு போக்கிவிட்டன. அப்பபர் ஸ்வாமிகளைச் சுண்ணாம்புக் களவாயில் போட்ட போதும் அவர் சிவ ஸ்மரணையிலேயே ஈடுபட்டிருந்ததால் ” ஈசன் எந்தை இணையடி நிழலில் ” தாம் ஜில்லென்று இன்பமாக இருந்ததாகப் பாடிய மாதிரிதான் குமாரிலபட்டருக்கும் இருந்தது. காளவாயில் வேகிறதைவிடவும் நீடித்த சித்ரவதையாகத் துஷாக்னியில் அணு அணுவாகப் பொசுங்குவதும் துன்பமாக இல்லை. “எந்தை இணையடி” என்று அப்பர் சொன்ன பகவத்பாதம்தானே சங்கர பகவத்பாதாள்?
குமாரிலபட்டர் ஆசார்யாளிடம் மனஸ் உருகி, “தங்கள் தர்சனத்தாலும் தத்வோபதேசத்தாலும் க்ருதார்த்தனானேன். தங்கள் ஸித்தாந்தத்தை ஏற்றுக்கொள்கிறேன். தங்களுக்கே தெரியும், ஞானத்தை ஏன் அப்படிக் கண்டனம் பண்ணினேன் என்று. பௌத்தத்துக்கு நேர்மாறாகச் சொன்னாலே எடுபடுமென்றுதான் நிவ்ருத்தியை இப்படி ஆக்ஷேபித்து, அவர்கள் சீர்குலைத்திருந்த ப்ரவ்ருத்தி கர்மாக்களை நிலை நிறுத்த முழு மூச்சோடு பாடுபட்டேன். கடைசியாக ப்ராயசித்த கர்மா பண்ணிக்கொள்ளும்போது பலனாகப் பலதாதாவான ஈச்வரனே எதிரிலே ஸத்கதி தர வந்துவிட்டீர்கள்! தங்கள் வழியைக் கண்டித்தவனுக்கும் அதன் லக்ஷ்யத்தை அநுக்ரஹிக்க ஓடோடி வந்திருக்கிறீர்கள்! அந்த்ய காலத்தில் ஸ்மரிக்காதவனையும் கடைத்தேற்ற வந்திருக்கிறீர்கள்!”
“தங்களுடைய அத்வைத வேதாந்தத்தை லோகம் பூரா தெரிந்து கொண்டு கடைத்தேறணும், எனக்கு அப்படி ப்ரசாரம் பண்ணும் பாக்யமில்லை; இன்னம் சிறிது நேரத்தில் உயிர் பிரிகிற ஸ்திதியிலிருக்கிறேன். தாங்கள் ஒன்று பண்ணணும்: என்னைக் காட்டிலும் தீவ்ர மீமாம்ஸகர் ஒருவர் இருக்கிறார். மண்டனமிச்ரர் என்று பேர். மாஹிஷ்மதி நகரத்தில் இருக்கிறார்…(மண்டன மிச்ரர் இருந்தது ஹஸ்தினாபுரத்தை அடுத்துள்ள வித்யாலயம் என்ற ஊர் என்றும் அபிப்ராயம் இருக்கிறது. மாஹிஷ்மதி எது என்பது பற்றியே மூன்று நாலு அபிப்ராயங்கள் இருக்கின்றன. மண்டனமிச்ரர் குமாரிலபட்டரின் சிஷ்யர், சிஷ்யராயிருந்ததோடு மச்சினரும் என்றெல்லாமும் அபிப்ராயங்கள் இருக்கின்றன. இதெல்லாம் எப்படியிருந்தாலும், குமாரிலபட்டர் விஷயமாகச் சொன்னதுபோல, மண்டனமிச்ரருடைய பூர்வகதை, ஆசார்யாளை அவர் ஸந்தித்தபோது நடந்த விஷயங்கள், அப்புறம் நடந்த கதை ஆகியவற்றை எல்லாப் புஸ்தகங்களும் அநேகமாக ஒரே மாதிரிதான் சொல்லியிருக்கின்றன. அவரைப் பற்றி ஆசார்யாளிடம் குமாரிலபட்டர் தொடர்ந்து சொன்னார்:)
“அவர் (மண்டன மிச்ரர்) நிரம்பச் செல்வமும் செல்வாக்கும் படைத்தவராயிருப்பதால் அந்தச் சீமை முழுக்க மீமாம்ஸா சாஸ்த்ரத்தை நன்றாகப் பரப்பியிருக்கிறார். பெரிய அநுஷ்டாதா. ஸோமயாகங்கள் உள்பட ஸதாகாலமும் பெரிசாக ஏதாவது கர்மாநுஷ்டானம் பண்ணிக் கொண்டிருப்பவர். அவரைத் தாங்கள் நிவ்ருத்தி மார்க்கத்திற்குத் திருப்பி விட்டீர்களானால், ரொம்பப் பேர் திரும்பிவிடுவார்கள். இது தாங்கள் அவச்யம் பண்ண வேண்டியது” என்று கேட்டுக்கொண்டார்.
அப்படியே செய்வதாக ஆசார்யாள் சொன்னார்.
குமாரிலபட்டர் உமிக் காந்தல் அக்னியில் தேஹ விநியோகம் ஆகும்வரையில் ஆசார்யாள் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தார். ஆஞ்ஜநேயரின் வாலில் வைத்த நெருப்பு ஸீதையின் அநுக்ரஹத்தால் அவருக்குக் கொஞ்சங்கூடச் சுடாத மாதிரி, ஆசார்யாளின் ஸாந்நித்யத்தில் துஷாக்னி குமாரிலபட்டருக்குக் குளிர்ச்சியாகவே இருந்தது. சரீரம் மாத்ரம் ஜீர்ணமாயிற்று. அக்னி ஸ்வரூபமும், பரமேச்வரனின் நேத்ராக்னியிருந்து உண்டானவருமான ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமியின் அவதாரம் அக்னி முகமாகவே பூர்த்தியாயிற்று!
தர்ம சாஸ்த்ரப்படி நடக்கவேண்டுமென்றே குமாரிலபட்டர் பரித்யாகம் பண்ணினார். இப்படிப்பட்டவர்கள் போட்டு வைத்த அஸ்திவாரம் நம் மதத்துக்கு இருக்கிறது. ஆகையால், தற்போது எத்தனை கோளாறு இருந்தாலும் சாஸ்த்ராநுஷ்டானம் மறைந்தே போய்விடாது என்ற நம்பிக்கையோடு இருக்கலாம். மஹான்களுடைய ப்ராண த்யாகம் வீண்போகாது.
1 ஆசார்யாளின் ஸமகாலத்தியதாகக் கருதப்படும் ‘ப்ருஹத் சங்கர விஜய’த்தின் சிதிலமான ஒரு பகுதியை அடிப்படயாகக் கொண்டு டி.ஸ். நாராயண சாஸ்திரி எழுதியுள்ள ‘The Age of Sankara’ நூலில் இவ்வூர் ‘ருத்தபுரம்’ எனக் கூறப்பட்டுள்ளது. அது ப்ரயாகையைச்சேர்ந்த புறநகராக இருக்கலாம் என் சாஸ்ரியார் கூறுகிறார்.
2 குமாரிலபட்டரின் வரலாறு. அவரது பூர்வ மீமாம்சக் கொள்கை, அதற்கு ஆசார்யாளுடைய அத்வைத ஸித்தாந்தந்தின் ஆக்ஷேபணை ஆகியன குறித்து “தெய்வத்தின் குரல்” — முதற் பகுதியில் “முருகனின் வடநாட்டு அவதாரம்” என்ற உரையும், இரண்டாம் பகுதியில், “ ” என்ற உரையும் பார்த்துப் பல விவரங்கள் இட்டு நிரப்பிக் கொள்ளலாம்.
3 ‘வ்யாஸாசலிய சங்கர விஜயம்’ V.29.
4 இப் பாராவில் குறிப்பிடப் பெறும் கீதை ச்லோகங்கள் முறையே வருமாறு: II.47; XVIII.11; III.6; XVIII.60; IX.27; V.10; XVIII.49; VI.3; IV.33; III.17; XVI.24.