ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
பெரிய திருமொழி
முதற்பத்து
கண்ணார் கடல்சூழ்
திருவேங்கடம்
'என்னுடைய அகங்கார மமகாரங்களை நீக்கி, எனக்குப் பக்தியைத் தரவேண்டும். என்னிடம் கைங்கரியங்களைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.' என்று வேங்கடவனை வேண்டுகிறார் ஆழ்வார்.
கலிவிருத்தம்
வேங்கடவா என் துன்பங்களைப் போக்கு
1038. கண்ணார் கடல்சூ ழிலங்கைக் கிறைவன்றன்
திண்ணாகம் பிளக்கக் சரஞ்செல வுய்த்தாய்,
விண்ணோர் தொழும்வேங் கடமா மலைமேய
அண்ணா, அடியே னிடரைக் களையாயே
திருத்துழாய் முடியாய் அருள் செய்
1039. இலங்கைப் பதிக்கன் றிறையாய, அரக்கர்
குலங்கெட் டவர்மாளக் கொடிப்புள் திரித்தாய்,
விலங்கல் குடுமித் திருவேங் கடம்மேய,
அலங்கல் துளப முடியாய அருளாயே
ஆரா அமுதனே அருள் செய்
1040. நீரார் கடலும் நிலனும் முழுதுண்டு,
ஏரா லமிளந் தளிர்மேல் துயிலெந்தாய்,
சீரார் திருவேங் கடமா மலைமேய,
ஆரா அமுதே அடியேற் கருளாயே.
கண்ணா வாமனா அருள் செய்
1041. உண்டா யுறிமேல் நறுநெய் யமுதாக,
கொண்டாய் குறளாய் நிலமீ ரடியாலே,
விண்டோய் சிகரத் திருவே கடம்மேய
அண்டா அடியே னுக்கருள் புரியாயே.
வேங்கடவா என்னை நினைவில் கொள்
1042. தூணா யதனூ டரியாய் வந்துதோன்றி,
பேணா அவுண னுடலம் பிளந்திட்டாய்,
சேணார் திருவேங் கடமா மலைமேய,
கோணா கணையாய், குறிக்கொள் ளெனைநீயே.
வேங்கடவன் என் நெஞ்சில் உள்ளான்
1043. மன்னா இம்மனி சப்பிற வியைநீக்கி,
தன்னாக்கித் தன்னின் னருள்செய் யும்தலைவன்,
மின்னார் முகில்சேர் திருவேங் கடம்மேய,
என்னானை யென்னப்ப னென்நெஞ்சி லுளானே.
வேங்கடவா என் மனம்தான் உன் குடியிருப்பு
1044. மானேய் மடநோக் கிதிறத் தெதிர்வந்த,
ஆனேய் விடைசெற்ற அணிவரைத் தோளா,
தேனே திருவேங் கடமா மலைமேய,
கோனே என்மனம் குடிசொண் டிருந்தாயே.
வேங்கடவன் அடியன்றி வேறென்றையும் அறியேன்
1045. சேய னணிய னென்சிந் தையுள்நின்ற
மாயன், மணிவா ளளிவெண் தரளங்கள்,
வேய்விண் டுதிர்வேங் கடமா மலைமேய,
ஆய டையல் லதுமற் றறியேனே.
வேங்கடவா உன்னை இனி விடமாட்டேன்
1046. வந்தா யென்மனம் புகுந்தாய் மன்னிநின்றாய்,
நந்தா தகொழுஞ் சுடரே எங்கள்நம்பீ,
சிந்தா மணியே திருவேங் கடம்மேய
எந்தாய், இனியா னுன்னையென் றும்விடேனே.
இவற்றைப் படிப்போர் தேவர்களாவர்
1047. வில்லார் மலிவேங் கடமா மலைமேய,
மல்லார் திரடோள் மணிவண்ண னம்மானை,
கல்லார் திரடோள் கலியன் சொன்னமாலை,
வல்ல ரவர்வா னவரா குவர்தாமே.
அடிவரவு - கண் இலங்கை நீர் உண்டாய் தூணாய் மன்னா மானேய் சேயன்
வந்தாய் வில் - வானவர்.
.