ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
மூன்றாம் பத்து
நல்லதோர் தாமரை
தன் மகளுக்குக் கண்ணன்மீது அன்பு மிகுதி என்பதைத் தாய் அறிந்தாள்:கண்ணனோடு கலவி உண்டாயிற்று என்பதையும் உணர்ந்தாள். "ஊரில் பழிச் சொல் தோன்றுவதற்கு முன் இவளை பகவானிடம் கொண்டு சேர்த்துவிடுங்கள்"என்று உறவினர் கூறினர். அதையும் தாய் கேட்கவில்லை. ஒரு நாள் தாயும் மகளும் படுத்துறங்கும்போது, கண்ணன் இம்மகளை அழைத்துச் சென்றுவிட்டான். தாய் கண் விழித்துப் பார்த்தாள். மகளைக் காணவில்லை. பதறினாள்:கதறினாள். அருமையாக வளர்த்த தன் மகளை நினைத்துப் புலம்புகிறாள். என்னே ஆழ்வாரின் அனுபவம்!
மாயவன் பின்சென்ற மகளை நினைத்துத் தாய் பலபடியாகக் கூறி ஏங்குதல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
மல்லரை அட்டவன் பின் சென்றாளோ?
297. நல்லதோர் தாமரைப் பொய்கை
நாண்மலர் மேல்பனி சோர,
அல்லியும் தாது முதிர்ந்திட்
டழகழிந் தாலொத்த தாலோ,
இல்லம் வெறியோடிற் றாலோ,
என்மக ளையெங்குங் காணேன்,
மல்லரை யட்டவன் பின்போய்
மதுரைப்பு றம்புக்காள் கொல்லோ. 1
தந்திரத்தில் வல்ல நாராயணன்
298. ஒன்று மறிவொன் றில் லாத
உருவறைக் கோபாலர் தங்கள்,
கன்றுகால் மாறுமா போலே
கன்னி யிருந்தாளைக் கொண்டு,
நன்றும் கிறிசெய்து போனான்
நாராய ணன்செய்த தீமை,
என்று மெமர்கள் குடிக்கோர்
ஏச்சுச்சொ லாயிடுங் கொல்லோ. 2
தாமோதரனுக்கே உரியவளோ?
299. குமரி மணஞ்செய்து கொண்டு
கோலஞ்செய் தில்லத் திருத்தி,
தமரும் பிறரு மறியத்
தாமோத ரற்கென்று சாற்றி,
அமரர் பதியுடைத் தேவி
அரசாணி யைவழி பட்டு,
துமில மெழப்பறை கொட்டித்
தோரணம் நாட்டிடுங் கொல்லோ 3
செங்கண்மால் இவளை மணந்து விடுவானோ?
300. ஒருமகள் தன்னை யுடையேன்
உலகம் நிறைந்த புகழால்,
திருமகள் போல வளர்த்தேன்
செங்கண்மால் தான்கொண்டு போனான்,
பெருமக ளாய்க்குடி வாழ்ந்து
பெரும்பிள்ளை பெற்ற அசோதை
மருமக ளைக்கண்டு கந்து
மணாட்டுப்பு றம்செய்யுங் கொல்லோ. 4
மகளைப் பெற்ற தாயின் நிலை
301. தம்மாமன் நந்தகோ பாலன்
தழீஇக்கொண் டென்மகள் தன்னை,
செம்மாந் திரேயென்று சொல்லிச்
செழுங்கயற் கண்ணும்செவ் வாயும்,
கொம்மை முலையு மிடையும்
கொழும்பணைத் தோள்களும் கண்டிட்டு,
இம்மக ளைப்பெற்ற தாயர்
இனித்தரி யாரென்னு கொல்லோ. 5
பெருமாளைக் கைப்பற்றுவாளோ?
302. வேடர் மறக்குலம் போலே
வேண்டிற்றுச் செய்தென் மகளை,
கூடிய கூட்டமே யாகக்
கொண்டு குடிவாழுங் கொல்லோ,
நாடு நகரு மறிய
நல்லதோர் கண்ணாலஞ் செய்து,
சாடிறப் பாய்ந்த பெருமான்
தக்கவாகைப்பற்றுங் கொல்லோ. 6
பெருமான் என் மகளை என்ன செய்வானோ?
303. அண்டத் தமரர் பெருமான்
ஆழியான் இன்றென் மகளை,
பண்டப் பழிப்புகள் சொல்லிப்
பரிசற ஆண்டிடுங் கொல்லோ,
கொண்டு குடிவாழ்க்கை வாழ்ந்து
கோவலப் பட்டங் கவித்து,
பண்டை மணாட்டிமார் முன்னே
பாதுகா வல்வைக்குங் கொல்லோ. 7
தயிர் கடைவாளோ?
304. குடியில் பிறந்தவர் செய்யும்
குணமொன்றும் செய்தில னந்தோ,
நடையன்றும் செய்திலன் நங்காய்!
நந்தகோ பன்மகன் கண்ணன்,
இடையிரு பாலும்வ ணங்க
இளைத்திளைத் தென்மக ளேங்கி,
கடைகயி றேபற்றி வாங்கிக்
கைதழும் பேறிடுங் கொல்லோ. 8
உலகளந்தான் என் மகளை ஆள்வானா?
305. வெண்ணிறத் தோய்தயிர் தன்னை
வெள்வரைப் பின்முன் னெழுந்து,
கண்ணுறங் காதே யிருந்து
கடையவும் தான்வல்லன் கொல்லோ,
ஒண்ணிறத் தாமரைச் செங்கண்
உலகளந் தான்என் மகளை,
பண்ணறை யாப்பணி கொண்டு
பரிசற ஆண்டிடுங் கொல்லோ. 9
தூமணி வண்ணற்கு ஆளாவர்
306. மாயவன் பின்வழி சென்று
வழியிடை மாற்றங்கள் கேட்டு,
ஆயர்கள் சேரியி லும்புக்கு
அங்குத்தை மாற்றமு மெல்லாம்,
தாயவள் சொல்லிய சொல்லைத்
தண்புது வைப்பட்டன் சொன்ன
தூய தமிழ்பத்தும் வல்லார்
தூமணி வண்ணனுக் காளரே. 10
அடிவரவு:நல்லதோர் ஒன்றும் குமரி ஒரு தம்மாமன் வேடர் அண்டத்து குடியில் வெண்ணிற மாயவன் - என்னாதன்.