ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
மூன்றாம் பத்து
என்னாதன்
பெரியாழ்வார் இதுவரை கண்ணனின் பண்புகளையே கூறி மகிழ்ந்தார். இனி இராமனின் சீரிய குணங்களையும் கலந்து கூறி மகிழ விரும்பினார். தாமே இரண்டு ஆயர் பெண்களாக ஆனார். ஒரு பெண் வாயினால் இராம குணத்தையும், மற்றொரு பெண் வாயினால் கிருஷ்ணனின் குணத்தையும் கூறி அவர்களின் பெருமைக் கடலில் மூழ்குகிறார். ஒரு பாசுரம் இராமனின் பெருமையையும், மற்றொரு பாசுரம் கிருஷ்ணனின் பெருமையையும் கூறுவதாக இத்திருமொழி அமைந்துள்ளது!
இராமகிருஷ்ணாவதாரங்களின் செயல்களை இரு தோழியர் கூறிப்
பரவசமடைந்து விளையாடுதல் (உந்தி பறத்தல்)
கலித்தாழிசை
பாரிஜாதமரம் கொண்டு வந்த எம்பிரான்
307. என்னாதன் தேவிக்கன் றின்பப்பூ ஈயா தாள்,
தன்னாதன் காணவே தண்பூ மரத்தினை,
வன்னாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட,
என்னாதன் வன்மையைப் பாடிப்பற
எம்பிரான் வன்மையைப் பாடிப்பற. 1
தாடகையை அழித்த தாசரதி
308. என்வில் வலிகண்டு போவென் றெதிர்வந்தான்
தன்,வில்லி னோடும் தவத்தை யெதிர்வாங்கி,
முன்வில் வலித்து முதுபெண் ணுயிருண்டான்
தன், வில்லின் வன்மையைப் பாடிப்பற
தாசரதி தன்மையைப் பாடிப்பற. 2
ருக்மணியை அழைத்துவந்த தேவகி சிங்கம்
309. உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு,
விருப்புற்றங் கேக விரைந்தெதிர் வந்து,
செருக்குற்றான் வீரஞ் சிதைய, தலையைச்
சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப்பற
தேவகி சிங்கத்தைப் பாடிப்பற. 3
சீற்றமிலாத சீதை மணாளன்
310. மாற்றுத்தாய் சென்று வனம்போகே யென்றிட,
ஈற்றுத்தாய் பின்தொடர்ந் தெம்பிரான் என்றழ,
கூற்றுத்தாய் சொல்லக் கொடிய வனம்போன,
சீற்ற மிலாதானைப் பாடிப்பற
சீதை மணாளனைப் பாடிப்பற. 4
பஞ்சவர் தூதன்
311. பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து,
நஞ்சுமிழ் நாகம் கிடந்தநற் பொய்கைபுக்கு,
அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட் டருள்செய்த,
அஞ்சன வண்ணனைப் பாடிப்பற
அசோதைதன் சிங்கத்தைப் பாடிப்பற. 5
பரதனுக்கு அடிநிலையளித்த இராமன்
312. முடியன்றி மூவுல கங்களு மாண்டு,உன்
அடியேற் கருளென் றவன்பின் தொடர்ந்த,
படியில் குணத்துப் பரதநம் பிக்கு,அன்
றடிநிலை யீந்தானைப் பாடிப்பற
அயோத்தியர் கோமானைப் பாடிப்பற. 6
காளியனுக்கு அருளிய தூமணிவண்ணன்
313. காளியன் பொய்கை கலங்கப்பாய்ந் திட்டு,அவன்
நீள்முடி யைந்திலும் நின்று நடஞ்செய்து,
மீள அவனுக் கருள்செய்த வித்தகன்,
தோள்வலி வீரமேபாடிப்பற
தூமணி வண்ணனைப் பாடிப்பற. 7
தம்பிக்கு அரசீந்த அயோத்தியரசன்
314. தாற்கிளந் தம்பிக் கரசீந்து, தண்டகம்
நூற்றவள் சொற்கொண்டு போகி, நுடங்கிடைச்
சூர்ப்ப ணகாவைச் செவியடு மூக்கு,அவள்
ஆர்க்க அரிந்தானைப் பாடிப்பற
அயோத்திக் கரசனைப் பாடிப்பற. 8
வேய்ங்குழலூதும் வித்தகன்
315. மாயச் சகட முதைத்து மருதிறுத்து,
ஆயர்க ளோடுபோய் ஆநிரை காத்து,அணி
வேயின் குழலூதி வித்தக னாய்நின்ற,
ஆயர்க ளேற்றினைப் பாடிப்பற
ஆநிரை மேய்த்தானைப் பாடிப்பற. 9
ஆராவமுதனே அயோத்தியர் கோன்
316. காரார் கடலை யடைத்திட் டிலங்கைபுக்கு,
ஓராதான் பொன்முடி ஒன்பதோ டொன்றையும்,
நேரா அவன் தம்பிக் கேநீ ளரசீந்த,
ஆரா வமுதனைப் பாடிப்பற
அயோத்தியர் வேந்தனைப் பாடிப்பற. 10
தரவு கொச்சகக் கலிப்பா
அல்லல் இல்லை
317. நந்தன் மதலையைக் காகுத்த னைநவின்று,
உந்தி பறந்த வொளியிழை யார்கள்சொல்,
செந்தமிழ்த் தென்புது வைவிட்டு சித்தன்சொல்,
ஐந்தினோ டைந்தும்வல் லார்க்கல்ல வில்லையே. 11
அடிவரவு:என்னாதன் என்வில் உருப்பிணி மாற்று பஞ்சவர் முடி காளியன் தாற்கு மாயம் காரார் நந்தன் - நெறிந்த.