ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
பன்னிரு ஆழ்வார்கள்
நம்மாழ்வார்
இந்நிலவுலகம் சீரும் சிறப்பும் பெற்றுச் சிறந்த முறையில் விளங்குவதற்கு ஏற்றவாறு, இவ்வுலகத்தை நிலைப்படுத்தலும், நீக்கலும், நீங்கலா அலகிலா விளையாட்டுடையவனும், வேண்டுதல் வேண்டாமை இலாதனும், மலர்மிசையேகினாலும், தனக்குவமை இல்லாதானும், அறவாழி அந்தணனும் ஆகிய இறைவனுடைய நிலையினை ஆன்மாக்கள் அடைதற்கு ஏற்ற மெய்ப்பொருளை உலகத்திற்கு உணர்த்துவான் வேண்டி, அவற்றினை இனிது விளக்கிக் கூறும் உண்மைப் பொருள் உரைக்கும் நூல்களுள் நம்மாழ்வார் திருவாய்மலர்ந்தருளிய தமிழ் வேதமே முதன்மையானதாகும்.
நம்மாழ்வார் அவதரித்த நாடு பாண்டிய நாடு ஆகும். ஒளவையாரால் "பாண்டியா, நின்னாடுடைத்து நல்ல தமிழ்"என்று போற்றிப் புகழப்பட்ட பாண்டிய நாட்டில் திருக்குருகூரில் சதுர்த்த வருணத்தில் (A. H. 9 - ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்) பிரமாதி ஆண்டு வைகாசித் திங்கள் பன்னிரண்டாம் நாள் வளர்பிறையில், பௌர்ணமி திதியில், வெள்ளிக்கிழமை அன்று விசாக நட்சத்திரத்தில் கடக லக்னத்தில் சேனை முதலிகள் அமிசராய் நம்மாழ்வார் அவதரித்து அருளினார்.
இவ்வாழ்வாருடைய ஏனைத் திருநாமங்கள் காரிமாறன், மாறன், சடகோபன், பராங்குசன், குருகைப்பிரான், திருக்குருகூர் நம்பி, வகுளாபரணன், அருள்மாறன், தென்னரங்கன் பொன்னடி, திருநாவீறுடைய பிரான் என்பனவாகும். இவரது தகப்பனார் பெயர் காரியார் ஆகும். காரியாரது தகப்பனாராகிய பொற்காரியார் திருவண்பரிசாரத்தில் வாழ்ந்தவரும், குடி, குணம், ஒழுக்கம், அன்பு முதலியவற்றால் தம்மோடு ஒத்தவரும், வேளாளர் குலச் செல்வரும் ஆகிய திருவாழ்மார்பரது அருந்தவச் செல்வியாகிய உடைய நங்கையாரைக் காரியாருக்கு இல்வாழ்க்கைத் துணைவியாக்கினார்.
பொற்புருமங்கையும், அருங்குணச் செல்வியும், கற்புடை நல்லாளும், கணவனைத் தொழுதேத்தும் பெண்பாலும் ஆகிய இவ்வுடைய நங்கையார், தம் கணவராகிய காரியாருடன் திருக்குறுங்குடியை அடைந்து, அப்பதியில் எழுந்தருளியிருக்கும் நம்பியைச் சேவித்து வணங்கி, பலவகையாகப் போற்றி, 'மக்கட் பேறு உண்டாகும்படி எம்பெருமான் அருள் புரிய வேண்டும்' என வேண்டினார். அதனால் உதித்த புதல்வரே உண்மைப் பொருள் உணர்த்திய செம்மலாம் நம்மாழ்வார் ஆவார்.
அருங்குணச் செல்வராக அவதரித்த நம்மாழ்வாராகும் மைந்தன், பால் உண்டிலன்;அழுதிலன்;மலர்க் கண் திறந்திலன்;ஆயினும் திருமேனி மெலிந்திலன்.
பிற்காலத்தில் நம்மாழ்வார் திருவாக்கினின்றும் ஒழுகிய தமிழ் அமிழ்தும், அதன் கருத்துச் சுவையுமே அவருக்கு அப்பெயரைத் தந்தன. அன்பில் ஆர்வமுடையார் அனைவரும் அவரை 'நம் அறிஞர்', 'நம் அன்பர்'என்று துதிப்பார்கள். அத்தகைய சான்றாண்மைக் குணம் படைத்வரது திருவாக்கை ஓதும் வாய்ப்பைப் பெறுங் கிறிஸ்துவர், அஸ்லாமியர், பௌத்தர், சமனர், சைவர், வைணவர் முதலிய எல்லாச் சமயத்தவரும் அவரை 'நம் சமயத்தவர்', 'நம் சமயத்தவர்' எனப் போற்றுவர். பாவன்மையுடையவர் அவரைப் பாவலர் எனவும் தத்துவ ஆராய்ச்சியினர் அவரை 'நம் தத்துவ மூர்த்தி'எனவும் தழுவுவர். ஒரு நாட்டவர்க்கோ, ஒரு சமயத்தவர்க்கோ, ஓரினத்தார்க்கோ மட்டும் உரியவராகாமல், எல்லா நாட்டவர்க்கும், எல்லாச் சமயத்தவர்க்கும், எல்லா இனத்தவர்க்கும் உரியவர் ஆகும் பேற்றினை அடையும் ஆற்றல் அமையப்பெற்றவராக விளங்கப்போகும் அவர், பிள்ளைத் தம்மையில் பால் உண்ணாமலும், அழாமலும், அசையாமலும், மலர்க் கண்கள் திறவாமலும் இருந்தமை வியத்தகு செயலாகவும், பெற்றோர்க்கு எல்லை கடந்த வருத்தத்தைத் தரும் செயலாகவுமே இருந்தன.
ஆழ்வார் அவதரித்தற்கு முன்னதாக ஆதிசேடன் அப்பதியின் திருக்கோயிலின்கண் ஒரு புளிய மரமாய்த் தோன்றி விளங்கலானான். உலகம் உய்ய அவதரித்த ஆழ்வாருக்குத் திருமகள் நாதன் ஞானமாகிய அமுதத்தை ஊட்டியருளிச் சென்றனன். அதனால் ஆழ்வார் உலகத்தில் பிறக்கும் குழந்தைகளின் செயலினின்றும் வேறுபட்ட நிலையில் வைகுந்தவாசனின் திருவடிகளையே தமது திருவுள்ளத்தில் கொண்டிருப்பாராயினார். இதனை அறியாத பெற்றோர்களின் வருத்தம் எல்லை கடந்ததாயிற்று.
அழகிய நம்பி என்பவர், நாம் இயற்றியருளிய குரு பரம்பரை என்னும் நூலில், நம்மாழ்வாரின் பெற்றோருக்கு ஏற்பட்ட வருத்தத்தைப்ப்ற்றிக் கூறும் செய்யுட்கள் கல்லையும் நெகிழ்வித்துக் கரையச் செய்வன;படிப்போர் மனத்தைப் பாகாய் உருக்குவன.
உடைய நங்கையார் வருந்துதலைக் கண்ட காரியார் மிக்க வருத்தம் அடைந்து, அவ்வூர் திருக்கோயிலுக்கு எடுத்துச் சென்று இறைவன்முன் குழந்தையைக் கிடத்தி, அதற்கு 'மாறன்'என்னும் திருநாமத்தைச் சூட்டி, அப்பெருமானைச் சேவித்து வணங்கிப் போற்றிக் குழந்தைக்கு அருள் புரிய வேண்டினார்கள்.
வைகுந்தத்தில் பாம்பணையில் பள்ளி கொண்டு, அறிதுயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் இறைவன் அப்பொழுது சேனை முதலியாரை நோக்கி, 'நீவிர் மாறானாகிய நம்மாழ்வாருக்கு உண்மைப் பொருள்களை யெல்லாம் உபதேசித்து வருவீராக'எனப் பணிக்க, அங்ஙனமே அவர் திருக்குருகூருக்குச் சென்று பிறர் அறியாதபடி ஆழ்வாருக்குத் தத்துவப் பொருள்களை உபதேசிக்கவும், அதனை உணர்ந்துகொண்டு ஆழ்வார் அக்கோயிலின்கண் உள்ள புளிய மரத்தின் அடியிலே பதினாறு ஆண்டுகள் வரையிலும் யோகத்தில் எழுந்தருளியிருந்தார்.
அங்ஙனம் நம்மாழ்வாராகிய சடகோபர் யோகத்தே இருந்தகாலையில், பாண்டிய நாட்டில் அமைந்த திருக்கோளுர் என்னும் பதியில் அந்தணர் குலத்து அருந்தவச் செல்வராய்த் தோன்றிய மருதகவியார் அயோத்தி, மதுரை, கயை, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை என்று கூறப்படும் புண்ணிய நகரங்கள் ஏழினையும் சேவிக்கும் உள்ளத்தராய்ச் சென்று சேவித்து வருவாராயினார். அவர் அயோத்தியில் இருந்தகாலத்துத் தென்திசைக்கண் சிறந்ததொரு பேரொளி தோன்ற, அவ்வொளியைத் தரிசிக்கும் நோக்கத்தவராய்த் தென்திசை நோக்கி, ஒளியின்வழி வருவாராயினார். இரவில் மட்டும் தோன்றிப் பகலில் மறைந்த அப்பேரொளியின் வழி நடந்த மதுரகவியார் கோதாவரியாற்றையும், திருவேங்கடத்தையும், தொண்டைநாட்யையும், திருவரங்கத்தையும், கடந்து திருக்குருகூரையும் அடைந்தார். அவ்வொளி அவ்வூர்க் கோயிலுனுட்புக்கு மறைந்துவிட்டது. பின்னர் அப்பதியில் உள்ளார் சிலரை நோக்கி, 'இங்கு விசேடம் யாதேனும் உண்டோ?'என்று அவர் வினவினார். அவர்கள் நம்மாழ்வாருடைய அவதாரச் சிறப்பை மதுரகவியாருக்குக் கூறினார்கள். மதுரகவியாரும் கோயிலினுட் சென்று, பதினாறு கலைகளும் நிரம்பிய மதியெனப் பொலியும் திருமுகத்தினராய், யோகத்தில் எழுந்தருளியிருந்த ஆர்வாரை அணுகி, தம் இரண்டு கைகளையும் நான்றாய் ஓசையெழுமாறு தட்டினார். உடனே ஆழ்வார் கண்திறந்து மதுரகவியாரை நோக்கினார்.
மதுரகவியார் ஆழ்வாரை நோக்கி, 'உயிரற்றதாகிய பிரகிருதியினால் ஆகிய உடம்பில் அணு வடிவாயுள்ள ஆன்மா வந்து புகுந்தால் எதனை அனுபவித்துக்கொண்டு எவ்விடத்தில் இன்பம் உண்டென்று எண்ணியிருக்கும்?'என்ற பொருள் அடங்கிய, "செத்தத்தின் வயிற்றிற் சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?"என்று கேட்டார். அதற்கு ஆழ்வார், "அந்த உடலின் தொடர்பினால் ஆகும் சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம் என்னும் இவ்வைந்தினால் வரும் இன்ப துன்பங்களை அநுபவித்துக்கொண்டு அவ்விடத்திலேயே 'இன்புற்றேன்;இளைத்தேன்'என்று சொல்லிக் கொண்டே கிடக்கும்"என்ற பொருள் அடங்கும்படி, "அத்தை தின்று அங்கே கிடக்கும்"என்று திருவாய்மலர்ந்தருளினார். உடனே மதுரகவியார் அவருடைய திருவடிகளிலே தம்முடைய முடியுற வணங்கிக் கைகூப்பி, நின்று, "அன்புடையீர், அடியேனை ஆட்கொண்டருள்வீர்"என்று வேண்டினார்.
உடனே நம்மாழ்வார் மதுரகவியாரைப் பார்த்து, "நாம் பகவானை அனுபவித்ததற்குப் போக்குவீடாகச் சொல்லும் பாசுரங்களால் நீர் பட்டோலையை அலங்கரிப்பீராக"எனத் திருவாய்மலர்ந்தருள, மதுரகவியாரும் பட்டோலையை அலங்கரிக்க, நம்மாழ்வாரும் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி எனும் நான்கு தமிழ் மறைகளை அருளினார். நான்கனுள் திருவிருத்தத்தை இருக்கு வேதசாரம் என்றும், பெரிய திருவந்தாதியை அதர்வண வேதசாரம் என்றும், திருவாய்மொழியைச் சாம வேதசாரம் என்றும் கூறுவர். உலகு உய்யச் சொல்மலர்களாகிய பாமாலைகளால் பரந்தாமனைப் பாடிய நம்மாழ்வார் திருப்புளியடியில் முப்பத்தோராண்டு எழுந்தருளியிருந்தார்.
இவரிடம் பட்டோலையை அலங்கரித்த மதுரகவி ஆழ்வார் வைகுந்தநாதனைப் பாடாமல் மதுரமானதும், அன்பு நிறையப் பெற்றதுமான பதினொரு பாசுரங்களால் நம்மாழ்வாரைப் பாடியுள்ளார். நூல் இயற்றப் புகுவோர் முதலில் விநாயகருக்கு வணக்கம் கூறுதலைப் போன்று, இவ்வாழ்வாருக்கும் வணக்கம் கூறுதல் மரபாயிற்று.
வைணவப் பெரியார்கள் வைணவக் குரவர்களை ஆழ்வார்கள் எனவும், ஆசாரியர்கள் எனவும் இரு திறத்தினராக வகுத்துள்ளளார்கள். இவ்வாழ்வார் அவ்விரு திறத்தினரினும் சேர்ந்தவராவர். ஆழ்வார்களுள் இவரை அவயவி (உறுப்பி) எனவும், ஏனைய ஆழ்வார்களை இவருக்கு அவயங்கள் (உறுப்புக்கள்) என்றும் கூறுவார்.
இனி ஆசாரியர்கள் வரிசையைப் பார்ப்போமாயின், முதல் மூவரும் பரமபதத்தைச் சார்ந்தவர்களாகவும், புவியைச் சார்ந்த ஆசாரியர்களின் பட்டியலில் நம்மாழ்வாரே முதல் ஆசாசியராகவும் அமைந்துள்ளார்.
ஆசாரியர்களின் வரிசை பின்வருமாறு:
1. திருமால், 2. திருமகள், 3. சேனை முதலியார், 4. நம்மாழ்வார், 5. நாதமுனிகள்,
6. உய்யக்கொண்டார், 7. மணக்கால் நம்பி, 8. ஆளவந்தார்,
9. பெரியநம்பி, திருக்கச்சி நம்பி, 10. இராமாநுசர்.
இவருக்கு விழுமிய பெருமையை அளித்ததற்குக் காரணமாயிருந்த இவருடைய அருளிச்செயல்கள் நான்கு எனவும், அவை வேதத்தின் சாரமாகக் கருதப்டுகின்றன எனவும் முதற்கண் கூறியுள்ளோம். அவற்றுள் காணும் பாசுரங்களின் எண்ணிக்கையை ஈண்டு காண்போம்:
1. திருவிருத்தம் நூறு பாசுரங்களைக் கொண்டது.
2. திருவாசிரியம் ஏழு பாசுரங்களைக் கொண்டது.
3. பெரிய திரு அந்தாதி எண்பத்தேழு பாசுரங்களைக் கொண்டது.
4. திருவாய்மொழி ஆயிரத்து நூற்றிரண்டு பாசுரங்களைக் கொண்டது.
வைணவர்களின் தமிழ் வேதமாகிய நாலாயிரத்துள் முதல் மூன்றும் மூன்றாம் ஆயிரத்துள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. திருவாய்மொழி நான்காம் ஆயிரமாக அமைக்கப்பட்டிருக்கின்றது.
நம்மாழ்வாருடைய பாடல்களில் இறையுணர்வு, அன்பு, இன்பம், பொதுமையின் சிறப்பு, கவிதையின் எழில் முதலிய காணப்படும்.
நம்மாழ்வாரால் பாடப்பெற்ற பாடல் தலங்கள்: 1. திருவரங்கம், 2. திருப்பேர்நகர், 3. கும்பகோணம், 4. திருவிண்ணகர், 5. திருக்கண்ணபுரம், 6. திருமாலிருஞ்சோலைலை, 7. திருமோகூர், 8. திருக்குருகூர், 9. ஆழ்வார் திருநகரி, 10. ஸ்ரீவரமங்கை,
11. திருப்புளிங்குடி, 12. திருப்பேரை, 13. ஸ்ரீவைகுந்தம், 14. வரகுணமங்கை,
15. பெருங்குளம், 16. திருக்குறுங்குடி, 17. திருக்கோவலூர், 18. திருவநந்தபுரம்,
19. திருவண்பரிசாரம், 20. திருக்காட்கரை, 21. திருமூழிக்களம், 22. திருப்புலியூர்,
23. திருச்செங்குன்றூர், 24. திருநாவாய், 25. திருவல்லவாழ், 26. திருவண்வண்டூர்,
27. திருவட்டாறு, 28. திருக்கடித்தானம், 29. திருவாறன்விளை, 30. திருவேங்கடம்,
31. திருவயோத்தி, 32. துவாரகை, 33. வடமதுரை, 34. திருப்பாற்கடல்,
35. பரமபதம், முதலியனவாகும்.