ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
நாச்சியார் திருமொழி
விண்ணீல மேலாப்பு
பிரிவாற்றாமையால் வாடும் தலைவி தலைவனைக் குறித்தோ, தலைவன் தலைவியைக் குறித்தோ ஒருவரைத் தூது விடுவது நம் நாட்டின் பழமையான வழக்கம்.
மேகம், AO, நாரை முதலியவற்றைத் தூது விடுவதை இலக்கியங்களில் காணலாம். பகவான் நீல நிறம் கொண்டவன். நீல நிறத்தில் ஆண்டாளுக்கு ஆசை. மழை காலம்!திருவேங்கடமலையிலிருந்து மேகங்கள் வருகின்றன. 'மேகங்காள்!உங்களோடு திருவேங்கடமுடையானும் வருகிறானோ? அவனோடு சேர்ந்தால்தான் என் உயிர் தரித்திருக்கும். இதை அவனிடம் சொல்லி என்னை ஏற்கச் செய்யுங்கள்'என்று வேண்டுகிறாள் ஆண்டாள்.
மேகவிடு தூது
தரவு கொச்சகக் கலிப்பா
மேகங்காள்!என் வேங்கடவன் உங்களோடு வந்தானோ?
577. விண்ணீல மேலாப்பு
விரித்தாற்போல் மேகங்காள்,
தெண்ணீர்பாய் வேங்கடத்தென்
திருமாலும் போந்தானே,
கண்ணீர்கள் முலைக்குவட்டில்
துளிசோரச் சோர்வேனை,
பெண்ணீர்மை யீடழிக்கும்
இது தமக்கோர் பெருமையே? 1
வேங்கடத்தான் ஏதேனும் சொல்லியனுப்பினானோ?
578. மாமுத்த நிதிசொரியும்
மாமுகில்காள், வேங்கடத்துச்
சாமத்தின் நிறங்கொண்ட
தாடாளன் வார்த்தையென்னே,
காமத்தீ யுள்புகுந்து
கதுவப்பட்டு இடைக்கங்குல்,
ஏமத்தோர் தென்றலுக்கிங்-
கிலக்காய்நா னிருப்பேனே. 2
கோவிந்தனையே பாடி உயிர் தரித்திருப்பேன்
579. ஒளிவண்ணம் வளைசிந்தை
உறக்கத்தோ டிவையெல்லாம்,
எளிமையா லிட்டென்னை
ஈடழியப் போயினவால்,
குளிரருவி வேங்கடத்தென்
கோவிந்தன் குணம்பாடி,
அளியத்த மேகங்காள்!
ஆவிகாத் திருப்பேனே. 3
அலர்மேல்மங்கை மணாளனுக்கே என் உடல் உரிமை
580. மின்னாகத் தெழுகின்ற
மேகங்காள், வேங்கடத்துத்
தன்னாகத் திருமங்கை
தங்கியசீர் மார்வற்கு,
என்னாகத் திளங்கொங்கை
விரும்பித்தாம் நாடோறும்,
பொன்னாகம் புல்குதற்கென்
புரிவுடைமை செப்புமினே. 4
எனது நிலையை வேங்கடனுக்குக் கூறுங்கள்
581. வான்கொண்டு கிளர்ந்தெழுந்த
மாமுகில்காள், வேங்கடத்துத்
தேன்கொண்ட மலர்சிதறத்
திரண்டெறிப் பொழிவீர்காள்,
ஊன்கொண்ட வள்ளுகிரால்
இரணியனை யுடலிடந்தான்,
தான்கொண்ட சரிவளைகள்
தருமாகில் சாற்றுமினே. 5
நாரணற்கு எனது மெலிவைச் செப்புமின்
582. சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த
தண்முகில்காள், மாவலியை
றிலங்கொண்டான் வேங்கடத்தே
நிரந்தேறிப் பொழிவீர்காள்,
உலங்குண்ட விளங்கனிபோல்
உள்மெலியப் புகுந்து,என்னை
நலங்கொண்ட நாரணற்கென்
நாடலைநோய் செப்புமினே. 6
வேங்கடவன் வந்தால் உயிர் நிற்கும்
583. சங்கமா கடல்கடைந்தான்
தண்முகில்காள், வேங்கடத்துச்
செங்கண்மால் சேவடிக்கீழ்
அடிவீழ்ச்சி விண்ணப்பம்,
கொங்கைமேல் குங்குமத்தின்
குழம்பழியப் புகுந்து,ஒருநாள்
தங்குமே லென்னாவி
தங்குமென் றுரையீரே. 7
அவர் இதமான உரை தருவாரா?
584. கார்காலத் தெழுகின்ற
கார்முகில்காள், வேங்கடத்துப்
போர்காலத் தெழுந்தருளிப்
பொருதவனார் பேர்சொல்லி,
நீர்காலத் தெருக்கிலம்
பழவிலைபோல் வீழ்வேனை,
வார்காலத் தொருநாள்தம்
வாசகம்தந் தருளாரே. 8
பாம்பணையான் வார்த்தை பொய்த்து விடுமோ?
585. மதயானை போலெழுந்த
மாமுகில்காள், வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள்!
'பாம்பணையான் வார்த்தையென்னே,
கதியென்றும் தானாவான்
கருதாது,ஓர் பெண்கொடியை
வதைசெய்தான்!'என்னும்சொல்
வையகத்தார் மதியாரே. 9
இந்த மேகவிடுதூது படிப்போர் பரமன் அடியர் ஆவர்
586. நாகத்தி னணையானை
நன்னுதலாள் நயந்துரைசெய்,
மேகத்தை வேங்கடக்கோன்
விடுதூதில் விண்ணப்பம்,
போகத்தில் வழுவாத
புதுவையர்கோன் கோதைதமிழ்,
ஆகத்து வைத்துரைப்பார்
அவரடியா ராகுவரே. 10
அடிவரவு:விண் மா ஒளி மின் வான் சலம் சங்கம் கார் மத நாகத்தின் - சிந்துர.