ஸாதன சதுஷ்டயத்தில் தேறிய பிறகு மூன்றாவது ஸ்டேஜ், முடிவான ஸ்டேஜ், அதற்குப் போகிறவர்களாக இங்கே யாரும் இருக்க மாட்டார்கள். ஏனென்றால் அது வீடு வாசலை விட்டுவிட்டு ஸந்நியாஸம் வாங்கிக்கொண்ட அப்புறமே அநுஷ்டானம் பண்ணவேண்டிய ஸ்டேஜ். அதனால் அதை விஸ்தாரம் பண்ண வேண்டாந்தான். ஆனாலும் அத்வைத ஸாதனை என்று ஆரம்பித்து இத்தனை1 சொன்ன பிறகு அதையும் கொஞ்சம் சொல்லிப் பூர்த்தி பண்ணலாமென்று……..
அதில் வரும் அம்சங்களான உபதேசம் கேட்டுக் கொள்வது, கேட்டதை உருப்போட்டுப் போட்டு உறுதி பண்ணிக் கொள்வது, அப்புறம் அதிலேயே அந்தஃகரணத்தை நிறுத்தி தியானிப்பது ஆகிய விஷயங்கள் எல்லாருக்குமே, எந்த மார்க்கத்திலும் போகிறவருக்கும், அடிநிலையிலிருந்து ஆரம்பித்து எல்லா நிலையில் முயற்சி பண்ணுகிறவர்களுக்கும் அவரவர்களின் அவச்யத்திற்கும் சக்தி ஸாமர்த்யங்களுக்கும் ஏற்றபடி அநுஸரிக்கப்பட வேண்டியவையே. அதனால் [அவற்றைப் பற்றிச்] சொல்லாமல் விடக்கூடாது.
1 ஸ்ரீசரணர்கள் ஒரு குறிப்பிட்ட உபந்நியாஸத்தில் நிறைய விஷயம் கூறியதையே “இத்தனை” என்கிறார். அந்த ‘இத்தனை’யோடு வேறு சில உபந்நியாஸங்களிலும், ஸம்பாஷனைகளின்போதும் அவர் கூறிய தொடர்புள்ள விஷயங்களும் இப் பேருரைத் தொகுப்பில் சேர்ந்து அதை ‘எத்தனையோ’ பெரிதாக்கிவிட்டது! அவர் அக் குறிப்பிட்டதோர் உபந்நியாஸத்தில் மூன்றாம் கட்ட ஸாதனை குறித்துக் “கொஞ்சம்” சொன்னதிலும் பிற சந்தர்ப்பங்களில் கூறிய பல சேர்க்கப்பட்டுள்ளன.