அத்வைத ஸாதனை என்று அஸலாக வருகிறபோது அதற்கு ஸந்நியாஸம் முதல் அங்கமாதலால், அதையும் (இங்கே யாரும் அப்படிப் போவார்கள், அல்லது போகணும் என்று இல்லாவிட்டாலும்) சொல்ல வேண்டியதாகிறது. அதில் பாச பந்தங்களை ஒரே போடாகப் போட்டுக் கத்தரிப்பது போல மற்றவர்கள் பண்ணுவதற்கில்லாவிட்டாலும், ஆத்மாபிவிருத்திக்காக எந்த வழியில் முயற்சி பண்ணுகிறவர்களும் ஓரளவாவது இப்படிப்பட்ட பற்றுக்களைக் குறைத்துக் கொள்ளத்தான் வேண்டுமாதலால், ஐடியல் நிலையான ஸந்நியாஸத்தைப் பற்றிக் காதாலாவது கொஞ்சம் கேட்டுக் கொள்வது நல்லதுதான்.
ஆத்மாவைத் தெரிந்து கொள்ளணுமானால் அதே குறியாய், கார்யமாய், சிந்தையாய் இருந்தால்தான் முடியும். மஹா பெரிய சக்தியான மாயையிலிருந்து விடுபடுவது, மஹா பெரிய ஸித்தியாக ப்ரஹ்மமாகவே ஆகிறது என்றால் அந்த லக்ஷ்யம் ஒன்றுக்கே ‘டெடிகேட்’ பண்ணிக்கொண்டு, அது ஒன்றிலேயே பற்றாக, அதுவே கார்யமாக இருந்தாலொழிய எப்படி முடியும்? மற்ற பற்றுக்கள், கார்யங்களையும் வைத்துக் கொண்டு இதையும் பண்ணுவது என்றால் அந்த மாயையும் இந்த ஞானமும் எப்படி ஒரே ஸமயத்திலே சேர்ந்து வரும்? ஒரு பக்கம் அடுப்பிலே ஜலத்தைக் கொட்டிக் கொண்டே இன்னொரு பக்கம் விசிறி விசிறி மூட்டப்பார்க்கிற மாதிரிதானிருக்கும்! ……. இப்படி மற்ற கார்யங்களையும், மற்ற பற்றுக்களையும் விடுவதுதான் ஸந்நியாஸம்.
அதைப் பண்ணினவிட்டுத்தான் [ஸந்நியாஸம் ஏற்ற பிறகுதான்] ‘இந்த ஜீவன் ஸாக்ஷாத் ப்ரஹ்மம்தான்’ என்று வேதமே சொல்கிற மஹாவாக்யங்களில் உபதேசம் பெற ஒருத்தருக்கு யோக்யதா ஸித்தி கிடைக்கிறது. ப்ரஹ்மம் என்றால் வேதம் என்றும் ஒரு அர்த்தம். ப்ரஹ்மமான வேதமே ப்ரஹ்மமாக ஜீவனைத் தெரிவிப்பதான ‘மஹா வாக்யங்கள்’ என்கிற மந்த்ரங்களுக்குத் தனிப்பட்ட சக்தி உண்டு. ‘ஜீவன் ப்ரம்மமே’ என்ற கொள்கையை நன்றாகத் தெரிந்து வைத்துக்கொண்டு அதுவே த்யானமாயிருந்தால் மட்டும் அந்த லக்ஷ்யம் லேசிலே அநுபவமாகி விடாது. அந்தக் கொள்கையை இந்த வேத மந்த்ர அக்ஷர ஸமூஹங்களாலான மஹாவாக்யங்களின் மூலம் ஜபித்து ஜபித்து, த்யானித்து த்யானித்து அப்யஸித்தால்தான் லக்ஷ்ய ஸித்தி ஸுலபாகும். ‘ஸுலபம்’ என்றால் ரொம்ப ‘ஈஸி’யில்லை; ‘கம்பேரடிவ்’ ஆகச் சொன்னது. குளிக்க வேண்டுமென்றால் நம் புதுசாகக் கிணறு வெட்டிக் கொள்கிற மாதிரி, நாமே அத்வைத சிந்தனையாயிருந்து ஸாக்ஷாத்கரிக்க ப்ரயத்தனப் படுவது. வெட்டி வைத்த கிணற்றிலிருந்து இழுத்துக் கொள்கிற மாதிரி, உபநிஷத் மஹாவாக்யத்தின் மூலம் அதே லக்ஷ்யத்தை அடைவது. இழுத்துத்தான் ஆகணும்! திருப்பி விட்டவுடன் குழாய் கொட்டுகிற மாதிரி இல்லை!குடத்தின் ஸைஸ், கிணற்றின் ஆழம் இவை அவரவர் ஸம்ஸ்காரத்திற்கேற்ப மாறும்! சின்னக் குடத்தாலே ஆழக் கிணற்றிலிருந்து பல தடவை இழுக்கிறார்போலவும் சில பேர் ப்ரயாஸைப்பட வேண்டியிருக்கலாம். ஆனாலும் நாமே புதுசாகக் கிணறு வெட்டிக்கொள்வதோடு ‘கம்பேர்’ பண்ணினால்?
இது ‘protected water’ [பாதுகாவல் செய்த ஜலம்]! [இதற்கு] பாராக்காரன் போட்டிருக்கிறது! அவன் allow பண்ணினால்தான் ஜலம் எடுத்துக் கொள்ள முடியும்! அந்தப் பாராக்காரனுக்குத்தான் குரு என்று பேர்!
சப்த ஸமூஹங்களான மந்த்ரங்கள் ஆகாசத்திலே பரவியிருக்கிற பரமாத்ம சக்தியையும் அநுக்ரஹத்தையும் பல விதங்களில் இழுத்துப் பிடித்துக் கொண்டு வந்து பலவிதமான இஹ பர நலன்களை நமக்கு உண்டாக்குபவையாகும். அம்மாதிரி இருப்பவற்றில் உச்சிக் கொம்பில் ஜீவாத்மாவை அந்தப் பரமாத்மாவோடேயே அபேதமாக ஐக்யப்படுத்துகிறவையே ‘மஹா வாக்யங்கள்’ என்கிறவை. “ஆத்ம ஜ்ஞான ப்ரபோத க்ருச்-சப்திகாயாம்” -“(அஞ்ஞானத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் ஜீவாத்மாவுக்குள் அத்வைதமான) ஆத்ம ஞானத்தை விழிப்புறுத்துகிற சப்தங்களைக் கொண்டவை” என்று ஆசார்யாள் மஹாவாக்யங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்.1 தூங்குகிறவனை டமாரம் கொட்டி எழுப்புகிறதுபோல குரு இந்த மஹாவாக்ய டமாரத்தைக் கொட்டி சிஷ்யனுக்கு ஞான விழிப்பைத் தருவதாகச் சொல்லியிருக்கறார்.
அந்த குரு யோக்யதை பார்த்துத்தான் ஒருத்தனை [சிஷ்யனாக] அங்கீகாரம் பண்ணி [ஸந்நியாஸ] ஆச்ரமம் கொடுத்து மஹாவாக்யோபதேசம் பண்ணுவார். ஸாதன சதுஷ்டயத்தில் பார்த்த விவேக வைராக்ய சம தமாதிகளில் ஓரளவு நன்றாக முன்னேறியிருப்பதுதான் அந்த யோக்யதை.
வேதத்திற்கு இருக்கப்பட்ட ஆயிரத்து நூற்றெண்பது சாகைகளில் [கிளைகளில்]2 ஒவ்வொன்றுக்கும் ஒரு உபநிஷத்தும் அந்த உபநிஷத்தில் ஒரு மஹாவாக்யமும் உண்டு. இப்படி ஆயிரத்து நூற்று சொச்சம் இருந்தாலும் ஒவ்வொரு வேதத்திற்கும் முக்யமான ஒன்றாக நாலு மஹா வாக்யங்களை எடுத்திருக்கிறார்கள். ஸந்நியாஸ தர்மங்களை விஸ்தாரமாக சொல்கிற ‘விச்வேச்வர ஸ்ம்ருதி’, ‘நிர்ணய ஸிந்து’ என்கிற நிபந்தனம் [தர்ம சாஸ்திரத் தொகுப்பு நூல்], மற்றும் அநேக தர்ம சாஸ்திரப் பிரமாணங்கள், ஸத் ஸம்பிரதாயங்களில் வந்துள்ள வழக்கு ஆகியவற்றிலிருந்து ஸந்நியாஸ தீக்ஷையின் போது இந்த நாலு மஹாவாக்யங்களையும் உபதேசிக்க வேண்டுமென்று தெரிகிறது. அதோடு கூட இன்னும் பல மஹாவாக்யங்களை குரு உபதேசிக்கவும் இடம் இருக்கிறது. தீக்ஷை வாங்கிக் கொள்கிறவன் பூர்வாச்ரமத்தில் எந்த சாகையைச் சேர்ந்தவனோ அந்த சாகையில் வருகிற மஹாவாக்யத்தையும் அடிஷனலாக உபதேசம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் ஒரு ஸம்பிரதாயத்திலிருக்கிறது. ப்ரணவத்தை முதலில் உபதேசித்து விட்டு, அப்புறம் மற்ற மஹாவாக்யங்களை உபதேசிக்கும் வழக்கமும் உண்டு.
இப்படி உபதேசம் கேட்டுக் கொள்வதற்குத்தான் ‘ச்ரவணம்’ என்று ப்ரம்ம வித்யா சாஸ்திரத்தில் பேர். ‘ச்ரவணம்’ என்றால் நேர் அர்த்தம் ‘கேட்டுக் கொள்வது’. அதை மஹாவாக்யோபதேசம் பெறுவது என்ற அர்த்தத்திலேயே திருமூலரும், “தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்” என்று சொல்லியிருக்கிறார்3. “கேட்டலுடன் சிந்தித்தல் மெய்தெளிதல்”என்று தாயுமானவரும் சொல்லியிருக்கிறார்4. . ச்ரவண – மனன- நிதித்யாஸனத்தையேதான் கேட்டல் – சிந்தித்தல் – மெய்தெளிதல் என்று சொல்லியிருக்கிறார். திருமூலரும் “திருவார்த்தை கேட்டல்” என்றதையடுத்து “தெளிவு குருவுரு சிந்தித்தல்தானே!” என்று சொல்லியிருக்கிறார். இங்கே ‘குரு உரு’ என்பதற்கு குரு கொடுத்த மந்த்ரத்தை உருப்போடுவது என்று அர்த்தம். ‘உரு’ என்பதற்கு மந்திர ஜபம், அதாவது மனனம், என்றே இருக்கிற அர்த்தைத்தான் இங்கே எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்தச் செய்யுளின் முதல் பாதத்திலேயே “தெளிவு குருவின் திருமேனி காண்டல்” என்று வந்து விடுகிறது. ‘திருமேனி’ என்பது உருவம் தானே? எனவே அதையே மறுபடி நாலாம் பாதத்திலும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அதனால் இங்கே உபதேச மந்திரத்தை உருப்போடுவது என்றே அர்த்தமாகும். இப்படி உருப்போட்டு அதே சிந்தையாயிருப்பது தானாகவே நிதித்யாஸனமான மெய் தெளிதலில் கொண்டு சேர்க்குமாதலால் அதுவும் இதிலேயே அடங்கினதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
“ஸந்ந்யஸ்ய ச்ரவணம் குர்யாத்” – ‘துறவறம் பூண்டு ச்ரவணம் செய்வாயாக!’ – அதாவது ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டுதான் ச்ரவணம் செய்ய வேண்டும் என்றே [ஆன்றோர் வசனம்] இருக்கிறது.
எங்கேயும் போகாமல் இருக்கிற இடத்திலேயே நிர்குண ப்ரஹ்மமாக முக்தி அடைவதே இந்த ச்ரவணத்தின் லக்ஷ்யம். இதற்குக் கீழ்பட்டதுதான் ஸூர்ய கதியிலே ப்ரஹ்ம லோகத்திற்கு உயிர் போய் ஸகுண ப்ரஹ்மத்தோடு சேர்வது. அதை அடையவுங்கூட நல்ல பக்குவமான ஒரு ஜீவன் – சாந்தனாகவும் வித்வானாகவும் இருப்பவன் – வீட்டைவிட்டு அரண்யத்திற்குப் போய் பிக்ஷை வாங்கி ஜீவித்துக்கொண்டு தபஸிருக்கணும்மென்று முண்டகோபநிஷத் சொல்கிறது5. அப்படியானால் நிர்குண தத்வத்தில் உபதேசம் வாங்கிக் கொள்ள வேண்டியவன் ஸந்நியாஸம் பெற்றுக்கொண்டுதானே ஆகவேண்டும்? அடுத்த மந்திரத்திலேயே இவனைப் பற்றியும் சொல்லிவிடுகிறது: லோகத்தையெல்லாம் அவன் பரீக்ஷை பண்ணிப் பார்த்து, “இதிலே ஸகலமும் கர்மத்தில் கட்டுப்பட்டதாகவே இருக்கிறது. நம் லக்ஷ்யமான ஆத்மாவோ கர்மத்திற்கு அகப்படவே அகப்படாது. ஆகையால் ஸகல கர்மாவையும் விடுவோம்” என்று தீர்மானிக்கிறான். அதாவது ஸந்நியாஸி ஆவதற்குத் தயாராகிறான். அதை குருமுகமாகவே பண்ணணும் என்று குருவைத் தேடிப் புறப்படுகிறான். ‘குருமுகமாகவே, குருமுகமாகத்தான்‘ என்று தெரிவிப்பதற்காக “குரும் ஏவ” என்று உபநிஷத் சொல்கிறது. “விஷயமெல்லாம் தெரிந்த சாஸ்திரஜ்ஞனுங்கூடத் தானே ஸ்வதந்திரமாக ப்ரஹ்ம ஞானம் அடைந்து விடலாமென்று முயற்சி பண்ணக் கூடாது என்று தெரிவிக்கவே ‘குரும் ஏவ‘ போட்டது” என்று ஆசார்யாள் விளக்கியிருக்கிறார்.
அந்த உபநிஷத்திலேயே பின்னாடி ஒரு இடத்திலே, ‘ஏதோ ஆத்ம விஷயத்திலே பூஞ்சையாக இருக்கிறவனாலேயும், பிரமித்து நிற்கிறவனாலேயுந்தான் ஆத்மாவை அடைய முடியாது என்றில்லை; ‘அலிங்க’னாக [அதாவது, அதற்குரிய அடையாளம் இல்லாதவனாக] இருக்கும்வரை தபஸ் பண்ணுகிறவனால்கூட அதை அடைய முடியாது தான்’ என்று வருகிறது6. அலிங்கம் என்பது ஸந்நியாஸம் வாங்கிக் கொள்ளாமலிருப்பதுதான் என்று ஆசார்ய பாஷ்யம்.
ப்ருஹதாரண்யகத்திலும், “ஆத்மலோகத்தை இச்சிக்கிறவன் இஹலோகத்து வீட்டைவிட்டு ஸந்நியாஸியாகப் புறப்படுகிறான். ஏனென்றால் பூர்வகாலத்தில் ஆத்மவித்யை அப்யஸித்த வித்வான்கள் அப்படித்தான் பிள்ளைக்குட்டி ஆசை சொத்து ஆசை, தேவலோகங்களை அடையும் ஆசை எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டுப் பிச்சைக்கார ஆண்டியாகப் புறப்பட்டு போனார்கள்” என்று ஸந்நியாஸ க்வாலிபிகேஷனை விதித்திருக்கிறது7.
எதிலேயும் அபிப்ராய பேதம் மாதிரி ஒன்று வருவது, அப்புறம் [பேதமில்லை என்று] ஸமாதானம் பண்ணுவது – என்று சில ஸமாசாரம் வரத்தான் செய்யும். அப்படி இந்த ப்ருஹதாரண்யகத்திலேயே இதற்கு முன்னாடி ஒரு இடத்தில் “ஆத்மாநம் விதித்வா“, [அதாவது] ஆத்மாவைத் தெரிந்து கொண்டு பிள்ளைக்குட்டி ஆசை, சொத்து ஆசை, பரலோகங்களில் ஆசை முதலானதைத் தூக்கிப் போட்டுவிட்டு ஆண்டிப் பிச்சைக்காரர்களாக ஒடுகிறார்கள் என்று இருக்கிறது8. “ஆத்மாவைத் தெரிந்துகொண்டு” என்றால் “ஆத்ம ஞானம் ஸம்பாதித்துக் கொண்ட பிறகு” என்று தானே தோன்றுகிறது? ஸம்பாதித்துக் கொள்வதற்காகவே, அதாவது அதற்கு முந்தி ஸந்நியாஸத் தகுதியை வைத்திருப்பதாகச் சொன்னதற்கு மாறாக, ஞான ஸம்பாதனைக்கு அப்புறமே ஸந்நியாஸம் என்றல்லவா இங்கே இருக்கிறது? — இப்படிக் கேள்வி வருகிறது. ஊன்றிப் பார்த்தால் பதில் கிடைக்கிறது. என்னவென்றால் : அந்த மந்திரத்திலேயே அப்புறம், ‘ஞானி எப்படி நடந்து கொள்வான்?’ என்று கேட்டு, ‘எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்வான். அதெப்படியானாலும் அவன் ஞானிதான்’ என்று சொல்லியிருக்கிறது. அதாவது அவனுக்கு இதுதான் விதி, இப்படித்தான் இருக்கணும் என்ற சாஸ்திரக் கட்டுப்பாடு எதுவுமில்லை என்று அர்த்தம். அப்படிப் பட்டவன் சாஸ்திரோக்தமான நாலு ஆச்ரமங்களில் கடைசியான ஸந்நியாஸத்தை ஸ்வீகரிக்க வேண்டும் [ஏற்க வேண்டும்] என்பது பொருத்தமில்லைதானே? ஆனபடியால், [ஆத்மாவைத்] ‘தெரிந்துகொண்டு’ என்பதற்கு ‘அநுபவத்தில் தெரிந்துகொண்டு’ என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளாமல், ‘புத்தியினால் தெரிந்துகொண்டு’ என்று பண்ணிக் கொண்டால் ஸரியாகி விடும். அத்வைத சாஸ்திர விஷயங்களைப் படித்தும் கேட்டும் அது ஸத்யந்தான் என்று புத்தியில் உறுதியாகத் தெரிந்து கொண்டவன் ஆசைகளை தூக்கிப் போட்டுவிட்டு ஸந்நியாஸியாகிறான் என்பதே இங்கே சொல்லியிருப்பதென்று தெளிவுபடும்9.
எனக்குப் பூர்ணகும்பம் கொடுக்கிறபோது – உங்கள் அகத்துக் கல்யாணம் கார்த்திகைகளில் ஆசார்ய ஸம்பாவனை பண்ணுகிறபோதுகூட – ஒரு மந்த்ரம் சொல்கிற வழக்கமிருக்கிறதே,10 அதில், “ஸந்நியாஸ யோகத்தினால் (‘யோகாத்’) அந்தஃகரணம் சுத்தமானவர்கள்” என்று ஞானியைப் பற்றிச் சொல்லியிருக்கிறது. இதனாலும் முதலில் ஸந்நியாஸம், அப்புறம் அதன் மூலமே சுத்தியாகி ஞானம் பெறுவது என்றே உபநிஷத் விதி பண்ணியிருப்பது தெரிகிறது.
ஸந்நியாஸாச்ரமத்திலிருக்கிறவன், அவனுக்கும் மேலே போய்த் தானே தனக்கு சாஸ்திரம் என்று இருக்கிற அஸல் ஞானி ஆகிய இரண்டு பேரையும் அத்யாச்ரமி என்று சொல்வது. ‘ச்வேதாச்வதரோபநிஷத்’ முடிவில் அப்படிப்பட்ட அத்யாச்ரமிகளுக்கே அதை உபதேசித்ததாக வருகிறது11. ‘கைவல்யோபநிஷத்’ என்று ஒன்று. அதிலிருந்து ஆசார்யாள் quote பண்ணுவதுண்டு. அதில் ஆரம்பத்தில், அத்யாச்ரமஸ்தன் ஏகாந்தமான இடத்திற்குப் போய், ‘ஸ்ட்ரெய்’டாக ஆஸனம் போட்டுக்கொண்டு உட்கார்ந்து கொண்டு, நன்றாக இந்த்ரிய நிக்ரஹம் பண்ணி ஆத்மாவாகிய சிவ ஸ்வரூபத்தைத் தியானிக்கிறான் என்று இருக்கிறது12.
ச்ரவணத்திற்கு அப்புறம் மனனமும், நிதித்யாஸனமும் அல்லவா? ‘ஸந்நியாஸியாகியே சிரவணம் செய்ய வேண்டும்’ என்கிற மாதிரியே ‘மனன – நிதித்யாஸனங்களில் ஸந்நியாஸிக்குத்தான் அதிகாரம்: மநநாதௌ ஸந்நியாஸிநாம் அதிகார:’ என்றும் வாக்கியம் இருக்கிறது.
ப்ரஹ்மஸூத்ரத்தில் ஸந்நியாஸிகளை ‘ஊர்த்வரேதஸ்’ என்று சொல்லியிருக்கிறது13. ஊர்த்வரேதஸ் என்றால் சக்தியைக் கீழ்த்தரமான இந்திரிய வியாபாரத்தில் வீணடிக்காமல் மேலான வழியில் கொண்டுபோனவர்கள். அதாவது, ஸந்நியாஸிகள். அந்த இடத்தில் வரும் ஸூத்ரங்களையும் ஆசார்யாள் பாஷ்யத்தையும் பார்த்தால் அவர்கள்தான் [அத்வைத ஸாதனையில்] மூன்றாம் ஸ்டேஜுக்கு க்வாலிஃபை ஆனவர்கள் என்று தெரியும். ஞானி ஸந்நியாஸியாகத்தான் இருப்பான், இருக்கணும் என்பது தெரியும்.
ப்ரஹ்மஸூத்ரத்திற்கே பிக்ஷுஸூத்ரம் என்றும் பேர். பிக்ஷு என்றாலும் ஸந்நியாஸி என்றாலும் ஒன்றுதான். வீட்டுச்சாப்பாடு இல்லாமல் பிக்ஷையால் ஜீவிப்பவன் பிக்ஷு. ப்ரஹ்மவிசாரத்திற்கே ஏற்பட்ட புஸ்தகத்திற்கு இப்படிப் பேர் இருப்பதும் ஸந்நியாஸிதான் அதிகாரி என்று காட்டுகிறது.
ஒரு விஷயம் கீதையில் வந்துவிட்டால் அதைவிட ஸர்டிஃபிகேட் இல்லை! ஸந்நியாஸிக்குத்தான் ச்ரவணாதிகளில் அதிகாரம் என்று பகவான் அபிப்ராயத்தில் வந்திருக்கிறதா என்று பார்த்தால், வந்திருக்கிறது! “ஸகல கர்மமும் கடைசியில் ஞானத்தில் போய்த்தான் ஸமாப்தியாகின்றன” என்று பகவான் சொல்லி, உடனேயே, “தத்வ தர்சிகள் ஞானத்தை உபதேசிப்பார்கள். அவர்களுக்கு நமஸ்காரம், பணிவிடை பண்ணி நன்றாகக் கேட்டுக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்”14 என்கிறார். கர்மா ஸமாப்தியாயிற்றென்றால் அப்புறம் ஸந்நியாஸந்தானே?அப்படிப்பட்ட ஸந்நியாஸிக்குத்தான் ஞானோபதேசம் பெறத் தகுதியுண்டு என்றுதானே ஸ்வாமி சொல்வதற்கும் அர்த்தம்?
ஸத்யந்தான் பர தத்வம்; தபஸ்தான் பர தத்வம்; இல்லை, தமந்தான்; சமந்தான் – என்பதாகப் பரதத்வம் எது என்பதைப் பற்றியுள்ள பல அபிப்ராயங்களை ‘நாராயணவல்லி’யில் சொல்லி, ஒவ்வொன்றின் பெருமையையும் காட்டியிருக்கிறது15. ஆனால் முடிவில், ‘இது எதுவுமே பர தத்வம் இல்லை. ஸந்நியாஸந்தான் பர தத்வம். பர தெய்வமாக இருக்கப்பட்ட பிரம்மாவே அப்படிச் சொல்லியிருக்கிறார்’ என்று முடித்திருக்கிறது.
ஆத்மாவைத் தெரிந்து கொண்டேயாக வேண்டும் என்ற ஸாதனையில் மேல் கட்டத்திற்குப் போகும்போது கர்மாவை விட்டு ஸந்நியாஸியானால்தான் முடியும். கர்மா தொட முடியாத வஸ்து ஆத்மா. அதை அதே விசாரமாக த்யானித்து, த்யானித்து, அப்புறம் அந்த த்யான கர்மாவும் நின்றுபோய்விடுகிற நிலையில்தான் தெரிந்து கொள்ள முடியும். ‘கர்மாவும் பண்ணிக்கொண்டே த்யானமும் வைத்துக் கொள்கிறேன்’ என்றால் ஸரியாக வராது. கர்மாவிலிருக்கிற வரையில் அதை ஒட்டினதாகப் பல விதமான ஸங்கங்கள்- ‘ரிலேஷன்ஷிப்’கள் – இருந்தே தாரும். “ஸங்காத் ஸஞ்ஜாயதே காம: …க்ரோத:”16 என்று ஸ்வாமி சொன்னபடி ஒன்றிலே அஸோஸியேஷன் ஏற்பட்டால் அதிலிருந்து காமம், க்ரோதம் என்று ஒவ்வொன்றாக ஏற்பட்டுக் கொண்டே போய் கடைசியில் “புத்தி நாசாத் ப்ரணச்யதி” [அறிவு அழிந்து விநாசம் அடைகிறான்] என்றே முடியும். அதனால்தான் ஆசார்யாள் “கர்ம கோடிபி: ந சக்ய:” – “கோடி கர்மா பண்ணினாலும் பந்தத்தை வெட்டிப்போட முடியாது. விவேக விஜ்ஞான மஹாஸிநா விநா தாது: ப்ரஸாதேன சிதேன மஞ்ஜுநா17 – நித்யா நித்ய வஸ்து விவேகத்தில் ஆரம்பித்து அநுபவ ஞானம் என்கிற விஞ்ஞானத்தில் முடியும் ஸாதனை என்ற சாணை தீட்டிய பெரிய கத்தியால் ஈச்வர ப்ரஸாதத்தின் மூலமே வெட்ட முடியும்”என்று சொல்லியிருக்கிறார்.
இப்படி பந்தத்தைக் கத்தரிப்பதற்கே வாழ்க்கையை அர்ப்பிக்க வேண்டுமானால் குடும்பம், உறவுகள், உத்யோகம் ஆகியவைகளையும் வைதிக கர்மாநுஷ்டானங்களையுங்கூடக் கத்தரித்து போட்டுவிட்டுப் புறப்பட்டாலொழிய முடியாது.
ஆனால் ஒன்று மறக்கவே கூடாது. யார் வேணுமானாலும் கர்மாநுஷ்டானங்களை விட்டுவிட்டு “ஸந்நியாஸியாகிறேன்” என்று கிளம்பலாமென்று ஆசார்யாள் சொல்லவேயில்லை. சித்த சுத்தி ஸம்பாதித்துக் கொண்டவனுக்கு மட்டுந்தான் அந்த ரைட் உண்டு என்று அவர் ரூல் பண்ணியிருக்கிறார். எப்படி ஸம்பாதித்து கொள்வதென்றால், கர்மாநுஷ்டானம் அத்தனையும் குறைவறப் பண்ணுவதன் மூலந்தான் என்றும் தீர்மானமாகச் சொல்லியிருக்கிறார். கோடி கர்மாவாலேயும் பந்தச் சேதம் ஏற்படாது என்றவர், அபக்குவிகள் இதைப் பிடித்துக் கொண்டு அவரவருக்கும் ஸ்வதர்மமாக ஏற்பட்ட கர்மாநுஷ்டானங்களை விட்டுவிட்டு அடியோடு வீணாகிவிடப் போகிறார்களே என்ற கருணையினால் அடுத்த ச்லோகத்திலேயே விஷயத்தைத் தெளிவுபடுத்துகிறார்
ச்ருதி ப்ரமாணைகமதே: ஸ்வதர்ம-
நிஷ்டா தயைவாத்ம விசுத்திரஸ்ய |
விசுத்தபுத்தே: பரமாத்ம வேதநம்
தேநைவ ஸம்ஸார – ஸமூல – நாச: ||
பின்பாதியில் ‘சித்த சுத்தி பெற்றவனுக்குத்தான் பரமாத்ம ஞானமுண்டாகி, அதன் மூலமே ஸம்ஸார பந்தம் என்பது ஸமூலம் (வேரோடு) அழிந்து போகிறது’ என்று சொல்கிறார். அந்த சுத்தி எப்படி உண்டாகும் என்பதை முன்பாதியில் சொல்கிறார். ஸ்வதர்மத்தில் எவன் ‘நிஷ்டை’ என்னும்படியான உறுதியாக நிலைத்த ஈடுபாடு பெற்றிருக்கிறானோ அவனுக்குத்தான் சித்தம் சுத்தியாகிறது என்கிறார். ‘ஸரி, அந்த ஸ்வதர்மம் என்னவென்று எப்படித் தெரிந்து கொள்வது?’ என்றால் அதற்கும் ச்லோக ஆரம்பத்திலேயே பதில் வைத்திருக்கிறார்:‘ச்ருதி ப்ரமாணைகமதி:’ – அதாவது வேதம் என்ன சொல்கிறதோ அதுவே ப்ரமாணம் (அதாரிடி) என்ற ஒரே நம்பிக்கையால் ஸ்வதர்மத்தை அறிந்து அதைப் பூர்ணமாக நடத்தி [அதில்] நிஷ்டனாக வேண்டுமென்கிறார். வேதம் ஸ்வதர்மம் என்று சொல்வது ஸமுதாயத்தை வர்ண விபாகம் பண்ணி [ஜாதி முறையில் அமைத்து] இன்னின்னார் இன்னின்ன கர்மம் பண்ண வேண்டும், அதே மாதிரி, ப்ரம்மசாரி இன்ன பண்ணனும், க்ருஹஸ்தன் இன்ன பண்ணனும், ஸ்த்ரீகள் இன்ன பண்ணனும் என்றெல்லாம் முக்யமாகக் கர்மாக்களை எடுத்துச் சொல்வதுதான். ஆகையால் வேத ப்ரமாணத்தில் அமைந்த தர்ம நிஷ்டை என்றால் கர்மாநுஷ்டானத்தில் நிஷ்டை என்றே அர்த்தம். இவ்வாறு பூர்த்தியாகக் கர்மாக்களைச் செய்துதான் சித்த சுத்தி பெறவேண்டும்; அப்படிப் பெற்றாலே பரமாத்ம ஞானம், பவ பந்த நாசம் என்று சொல்கிறார்.
வேத விதிப்படிக் கர்மாக்கள் செய்கிறபோது சரீர கார்யங்களின் மூலமே சரீரத்தைப் பிழிவது மாத்திரமில்லாமல் மனஸின் அழுக்குக்களையும் பிழிந்து தள்ள முடிகிறது. அப்புறம் கர்மாக்களை நிறுத்திவிட்டு, மனஸின் கார்யமான த்யானத்திலேயே போய், அதற்கும் அப்புறம் அதுவும் நின்றுபோன ஞான நிலையை அடையணும்.
தர்ம நிஷ்டை என்கிற கர்ம நிஷ்டையைப் பெற்ற அப்புறந்தான் ஞான நிஷ்டைக்கு முயற்சி பண்ணணும். இது இல்லாமல் அதற்குப் போகவும் கூடாது. அதற்குப் போகிற யோக்யதை உண்டான பிறகு இதில் ஸம்பந்தம் வைத்துக் கொள்ளவும் கூடாது. ஜலத்தை நிறைய விட்டுப் பிழிந்து தான் துணியிலிருக்கிற அழுக்கை எடுக்க வேண்டும். அதுதான் வழி. அதற்காக அழுக்குப் போன அப்புறமும் ஜலத்திலேயே போட்டுப் பிழிந்து கொண்டிருந்தால் என்ன ஆகும்? நைந்து போய்க் கிழிந்துதான் போகும். அப்புறம் காற்றுப் படப்போடுகிறதுதான் ஞான மார்க்கத்திற்குப் போவது! காற்று, ஸூர்ய வெளிச்சம் ஈரத்தை மட்டும் போக்கும். ஞானமோ துணியையே போக்கி விடும்! இது கிழிசலாக்கிப் போக்குவது போல அதோடு முடிந்து போவதில்லை. ஜீவத் துணியைப் போக்கி, அதையே ப்ரம்மம் என்ற அழிக்க முடியாத தங்கத் தகடாக மாற்றி விடும்! நிஷ்டை என்று ஆத்மாவிலேயே நிலைத்து நிற்பது ஜீவனின் கார்யமாக இல்லாமல், ஜீவனே போய், நிஷ்டையிலே பெற்ற அநுபூதி ஸ்வரூபமான ஸத்வஸ்து மாத்திரமே எஞ்சி நிற்கும். ப்ரசாந்த தத்வமாக, ‘பராயணம்’ என்கிற மேலான புகலிடமாக இருக்கும் ஸ்திதி அது.
1 ஐதரேயோபநிஷத் I. 3. 13 பாஷ்யம்
2. “தெய்வத்தின் குரல்” இரண்டாம் பகுதி, ‘வேதம்’ என்ற பேருரையில் ‘வேத சாகை‘, ‘சாகைகளின் பிரிவினையும் வழக்கில் உள்ளவையும்‘ என்ற பிரிவுகள் பார்க்க.
3 திருமந்திரம், 139
4 “கேட்டலுடன் சிந்தித்தல் கேடிலா மெய்த் தெளிவால் வாட்ட மறா உற்பவ நோய் மாறுமோ ?” (உடல் பொய்யுறவு)
5 1. 2. 11.
6 III. 2. 4.
7 IV. 4. 22.
8 III. 5.
9 ‘ஸமாதானம்‘ என்பது ‘புத்தியை ப்ரம்மத்தில் ஸ்தாபிப்பது’ என்பதற்கு ‘ப்ரம்மம் குறித்த உபதேச-சாஸ்திரங்களில்’ என விளக்கம் கூறப்பட்டுள்ளதன் தொடர்ச்சியே இது.
10 “ந கர்மணா” எனத் தொடங்கும் சில மந்திரங்கள் (மஹா நாராயணோபநிஷத் XII. 3. 4-7). அடுத்து இதில் ஸ்ரீசரணர்கள் குறிப்பிடுவது அவற்றில் “வேதாந்த விஜ்ஞான” எனத் தொடங்கும் மந்திரம். இது முண்டகம் (III. 2.6.) முதலிய பல உபநிஷத்துக்களில் இடம் பெறுவது.
11 VI. 21
12 I. 5
13 III. 4. 17
14 IV. 33-4.
15 ‘மஹாநாராயணோபநிஷத்’ என்றும் கூறப்படும் இந்நூலின் 78-வது அநுவாகம்.
16 கீதை II. 62
17 விவேக சூடாமணி 147 (அ) 149