விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் தொடர் நாமங்கள் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

‘நிஷ்டா சாந்தி: பராயணம்’ என்று (விஷ்ணு) ஸஹஸ்ரநாமத்தில் வருகிறது. அதில் ஒரே விஷயத்தை அழகாக ஸம்பந்தப்படுத்திக்கொண்டு போவதாகச் சில நாமாக்கள் தொடர்ச்சியா வருவதுண்டு. அப்படி ஒரு ஏழெட்டு பேர் ஸந்நியாஸ விஷயமாகவே பூ பூவாகச் சேர்த்து மாலை தொடுத்தாற் போல் வருகிறது.

…………………….நிர்வாணம் பேஷஜம் பிஷக் |
ஸந்ந்யாஸக்ருத் சமோ சாந்தோ நிஷ்டா சாந்தி:பராயணம் ||

[விரல் விட்டு எண்ணி] இப்படி ஒன்பது நாமாக்கள் ஒரே விஷயமாக வருகின்றன. ‘நிர்வாணம்’ – அதுதான் ஞான யோகத்தின் முடிவு. ஸகுணமாக விஷ்ணு என்று இருப்பவனேதான் அப்படி இருப்பவனும். பேஷஜம் என்றால் மருந்து. பவரோகத்திற்கு (ஸம்ஸார வியாதிக்கு) மருந்தான ஞானம் என்று அர்த்தம். “அருமருந்தொரு தனி மருந்து” என்று பாடுகிற மருந்து…..

முத்துத்தாண்டவர் என்கிற நடராஜா பக்தரின் பாட்டு அது. அவர் [ஸங்கீத] த்ரிமூர்த்திகளுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தவர். அவரைப் பாம்பு கடித்தபோது நடராஜாதான் மருந்து என்று சொல்லி இந்தப் பாட்டைப் பாடினாராம். உடனே விஷமும் இறங்கி விட்டதாம்…..

கர்மா விஷம் ஏறியபோது ஞானமான விஷங்கொல்லிப் பூண்டாக வருகிறவன் பகவான்தான்.

மருந்தும் அவனே, மருந்து தருகிற வைத்தியனும் அவனே!அதைத்தான் ‘பிஷக்’ என்று சொல்லியிருக்கிறது. இங்கே திருவான்மியூரில் ஸ்வாமி மருந்தீச்வரராக இருக்கிறார். வைத்தீச்வரன் கோவில் என்றே பேர் உள்ள ஊரில் ‘பவரோக வைத்யநாத ஸ்வாமி’ என்று ஸம்ஸார வியாதியைத் தீர்க்கிற ஞானாச்சார்யனாக இருக்கிறார். “கீதை என்ற மருந்தைக் கொடுத்த டாக்டர்” என்று ஆசார்யாள் [விஷ்ணு ஸஹஸ்ரநாம] பாஷ்யத்தில் சொல்லியிருக்கிறார்.

கீதையின் ஸ்வாமி முடிவாகக் கொடுத்த மருந்து என்னவென்றால் ஸந்நியாஸந்தான். கர்ம யோகத்தின் வழியாக ஞான யோகத்தில் ஸந்நியாஸத்திற்குத்தான் அழைத்துக் கொண்டு போய் முடித்திருக்கிறார். ஆயுர் வேதத்தில் பேதிக்குக் கொடுத்துவிட்டு அப்புறம் மருந்து தருவதுண்டு. அப்படிக் கர்மாக் கழிசடை எல்லாம் போகவே கர்ம யோகத்தை கொடுத்துவிட்டு, அப்புறம் மருந்தாக ஞானத்தைக் கொடுக்கும்போது ஸந்நியாஸத்தை விதித்திருக்கிறார். ஆதியில் நாலு ஆச்ரமங்களையும் அவர்தான் உண்டாக்கி, அந்த்யாச்ரமமாக [முடிவிலுள்ள ஆச்ரமாக] இதை ஏற்படுத்தியவர். ‘ஸந்ந்யாஸக்ருத்’ என்ற நாமா அதைத்தான் தெரிவிக்கிறது.

ஸந்ந்யாஸக்ருத் சமோ

சமோ. சமம், சமம் என்று நிறைய பார்த்துக் கொண்டு போனோமே அதுவும் பகவத் ஸ்வரூபந்தான். மனஸ் அடங்குவது — அதுதானே சமம்? — அதுதான் ஞான யோகத்தின் உயிர்நிலை. துளிக்கூட அடங்காமல் அடங்காப் பிடாரியாக இப்போது நமக்கு இருப்பதிலிருந்து, துளித் துளியாக அது அடங்கிக் கொண்டே போவதில் எத்தனையோ ஸ்டேஜ்கள். முடிவில் துளிக்கூட மனஸ் என்று ஒரு வஸ்து இல்லாமல் அது அப்படியே ஆத்மாவிலே அடங்கிப் போவதுதான் ஸித்தி ஸ்தானம். அதுதான் ஸந்நியாஸிக்கு லக்ஷ்யம். நான்கு ஆச்ரமிகளில் ஒவ்வொருத்தனுக்கும் இதுதான் தர்மம் என்று சொல்கிற ஒரு ஸ்ம்ருதி ‘கொடேஷன்’ ஆசார்யாள் இந்த இடத்தில் கொடுத்திருக்கிறார். அதில், ‘ஸந்நியாஸிக்கு சமம் தர்மம்; வான ப்ரஸ்தனுக்கு நியமம் என்ற கட்டுப்பாடான தபோவ்ரதங்கள் தர்மம்; க்ருஹஸ்தனுக்கு தானம் தர்மம்; ப்ரம்மசாரிக்கு தர்மம் குரு சுச்ரூஷை’ என்று இருக்கிறது1.

அப்புறம் சாந்த: என்று நாமா வருகிறது. ‘சமம்’ என்பதோடு கூடியவன் சாந்தன்.

அதற்கடுத்தபடியாகத்தான் ‘நிஷ்டா’ என்றே நாமம் வருகிறது. ஸந்நியாஸியாகி, மனமடங்கப்பெற்ற சாந்தனாகி ஒருவன் ஞானாநுபவத்திலேயே நிலைத்து நிற்கிற நிஷ்டையில் நிற்கிறானே, அந்த நிலையும் பகவான்தான். ஸகுணத்தில் பகவானாக இருப்பவன் நிர்குணத்தில் இப்படி இருக்கிறான்.

அந்த நிலையிலிருக்கிற அமைதியை ‘சாந்தி’ என்றும் அதுதான் பரமான goal என்பதைப் ‘பராயணம்’ என்றும் இரண்டு நாமாக்களாகக் கொடுத்திருக்கிறது.


1 யதீநாம் ப்ரசமோ தர்மோ
நியமோ வநவாஸிநாம் |
தாநமேவ க்ருஹஸ்தாநாம்
சுச்ரூஷா ப்ருஹ்மசாரிணாம் ||

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is துறவறம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  வேதக் கட்டளையாகவே சிரவணம் முதலியன
Next