ஸந்நியாத்துடன் மஹாவாக்ய உபதேசம். அதைப் பெற்றுக் கொள்வதே ச்ரவணம். உபதேசத்தை உருப்போட்டு, அலசி, அலசி, ஆராய்ந்து உறுதிப்படுத்திக் கொள்வதான ‘மனனம்’ என்பதும், அப்புறம் அதைப் பிரத்யக்ஷ அநுபவமாக்கிக் கொள்வதற்காகச் செய்யும் த்யானமாகிய ‘நிதித்யாஸனம்’ என்பதும் ஸாதனையைக் ‘கம்ப்ளீட்’ பண்ணிவிடுகின்றன.
இந்த மூன்றும் [ச்ரவணம், மனனம், நிதித்யாஸனம்] வேதக் கட்டளையாகவே ஏற்பட்டவை. சமம், தமம், உபரதி, திதிக்ஷை, முதலியவற்றைச் சொல்லும் அதே உபநிஷத் வாயிலாகத்தான் இந்த மூன்றையும் வேதம் கட்டளையிட்டிருக்கிறது1. சமம், தமம் முதலியவற்றை நேரே கட்டளையாக, ‘ஆர்ட’ராகப் போடாமல் ஒரு ஞானி அந்த ஆத்ம ஸம்பத்துக்களை உடையவனாக — சாந்தனாக, தாந்தனாக, உபரதனாக எல்லாம் — இருப்பான் என்று சொல்வதன் மூலம் மறைமுக விதியாகத்தான் விதித்திருக்கிறது. ஆனால் இந்த மூன்றையோ ‘இன்ஜங்க்ஷன்’ என்கிறார்களே, அப்படி அதிகார பூர்வமான கட்டளையாகவே போட்டிருக்கிறது. “ச்ரோதவ்யோ, மந்தவ்யோ, நிதித்யாஸிதவ்யோ – ஆத்ம தத்வமே ச்ரவணம் செய்யப்பட வேண்டும். மனனம் செய்யப்பட வேண்டும். நிதித்யாஸனம் செய்யப்படவேண்டும்” என்று ரூலாகவே கொடுத்திருக்கிறது.
1 ப்ருஹதாரண்யகோபநிஷத் II. 4..5.