இதைச் சொல்லும்போது இன்னொன்றும் நினைவு வருகிறது. அது வாழ்க்கை வழி ஸம்பந்தப்பட்டதல்ல; space -ல் சொல்லும் வழி, திசை ஸம்பந்தமானது மட்டுமே என்றாலும், அதையும் சொல்லி விடுகிறேன். [சிரித்து] கூட்டம் சேர்ந்திருக்கிற இடத்தில் எனக்குத் தெரிந்த வித்தையெல்லாம் காட்டிவிட வேண்டாமா? தமிழில் மேல்-கீழ் என்ற வார்த்தைகள் ஸம்பந்தப்பட்டதாக மேற்கு – கிழக்கு என்று திசைப் பெயர்கள் இருக்கின்றன. ஆனால் மேற்கும் கிழக்குமோ மேலும் கீழுமாக இல்லாமல் பக்கத்தில் பக்கத்தில் இருக்கின்றன! வடக்கும் தெற்கும் தான் மேலும் கீழுமாக உள்ள திசைகள். பூகோளத்தில் வட திசை மேலேயும், தென் திசை கீழேயும் இருக்கின்றன. கிழக்கு மேற்குகள் அப்படியில்லாமல் ஒன்றுக்கொன்று பக்கமாகவே இருக்கின்றன. பின்னே ஏன் ‘கீழ்’ ஸம்பந்தமாக ‘கிழக்கு’ என்றும், ‘மேல்’ ஸம்பந்தமாக ‘மேற்கு’ என்றும் பேர் வைத்திருப்பது? யோஜித்துப் பார்த்தபோது புரிந்தது. தமிழ்நாட்டிலே மேற்குப்புறம் மேடாகப் போய்ப் போய் அப்படியே ரொம்ப உயரமான மேற்குத் தொடர்ச்சி மலைகளில் முடிந்து விடுகிறது. கிழக்குப் பக்கம் தாழத்தாழப் போய் ஸமுத்ரத்தில் முடிகிறது. அட்லாஸில் ஸீ லெவலுக்கு [கடல் மட்டத்துக்கு] மேலே இத்தனை அடியிலிருந்து இத்தனை அடி உயரம் வரை இன்ன கலர் என்று பல உயரக் கட்டங்களைச் சொல்லி ஒவ்வொன்றுக்கும் ஒரு கலர் கொடுத்து ஒரு Map இருக்கும். இப்போது எப்படி இருக்கிறதோ, எங்கள் நாளில் ஸீ லெவலுக்கு நல்ல பச்சையாகக் கலர் கொடுத்திருக்கும். அப்புறம் உயர்ந்து போகப் போக வெளிர் பச்சை, வெளிர் ப்ரௌன், டார்க் ப்ரௌன் என்று கொடுத்திருக்கும். தமிழ்நாடு ‘மாப்’ பைப் பார்த்தால் மேற்கு ஓரம்-பார்டர்-முழுக்க ஒன்று டார்க் ப்ரௌன் அல்லது லைட் ப்ரௌன், அடுத்தாற்போல வருகிற வடார்க்காடு, சேலம், கோயம்புத்தூர், மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி ஜில்லாப் பகுதிகள் வெளிர்பச்சை; அப்புறம் ஸமுத்திரக் கோடி மட்டும் வரும் செங்கல்பட்டு, தென்னார்காடு, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி ஜில்லாப் பகுதிகள் நல்ல பச்சை என்று இருக்கும். சுருக்கமாகச் சொன்னால் மேற்கே மலைப்பாங்காகவும், கிழக்கே ஸமவெளியாகவும் இந்தத் தமிழ் தேசம் இருக்கிறது. அதாவது மேற்கு உயர்ந்த பூமி மட்டமாகவும், கிழக்கு தாழ்ந்த பூமி மட்டமாகவும் இருக்கிறது. இப்படி இருப்பது மேல், கீழ்தானே? அதனால்தான் மேற்கு-கிழக்கு என்று திசைப் பெயர்கள் ஏற்பட்டிருப்பதாகப் புரிந்தது. இந்த விஷயம் இருக்கட்டும்.