இடத்திலும் வழி-திசைகள் இருக்கின்றன, மனித வாழ்க்கையிலும் வழி-திசைகள் இருக்கின்றனவென்று பார்த்துக் கொண்டிருந்தோம். ‘திச்’ என்பதிலிருந்து திசை, திக்கு என்ற வார்த்தைகள் உண்டாவதாகச் சொன்னேன்.
‘திச்’ என்று பெயர்ச் சொல்லும் இருக்கிறது, வினைச்சொல்லும் இருக்கிறது. பெயர்ச் சொல்லாக இருக்கும்போது தான் இட ஸம்பந்தப்பட்டதான ‘திசை’ என்று அர்த்தம் கொடுக்கிறது. வினைச் சொல்லாக இருக்கும்போது ‘திச்’ என்றால் ‘இப்படிப் பண்ணு’ என்று ஒருத்தன் செய்ய வேண்டியதைச் சொல்லிக் கொடுப்பதாக, உத்தரவு போடுவதாக ஆகும். சுருக்கமாகச் சொன்னால் ‘வழி சொல்வது’, ‘வழி காட்டுவது’ என்கிறோமே, அதைக் குறிக்கும். [சிரித்து] மறுபடி ‘வழி’க்கு வந்துவிட்டோம்.
‘இப்படியிப்படிப் பண்ணு’ என்று வழிகாட்டுவதை ‘டைரக்ட்’ பண்ணுவது என்கிறோம். ஒரு மருந்தானால்கூட அதை எப்போது, எப்படி, எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று பாட்டில்மேல் ஒட்டியிருக்கும் குறிப்புக்கு ‘டைரக்ஷன்’ என்று பேர் கொடுத்திருக்கிறது, ‘டைரக்ஷன்’ என்றாலே திசை என்றும் அர்த்தமிருக்கிறது! நார்த்த(ர்)ன் டைரக்ஷன், ஸத(ர்)ன் டைரக்ஷன் என்றெல்லாம் திசைகளைச் சொல்கிறோம். லோகம் பூரா ஜன ஸமுதாயம் ஒரே சிந்தனைப் போக்குள்ளதாக இருக்கிறதென்று காட்டி எல்லாரையும் ஒரு குடும்பமாக ஒட்டி வைக்க இந்த மாதிரி வார்த்தையொற்றுமைகளே போதும்! நாம் ‘திச்’ என்பதற்குச் சொல்லும் அந்த இரண்டு அர்த்தங்களையே அவர்களும் டைரக்ஷன் என்பதற்குச் சொல்கிறார்கள். இதற்கு அடிப்படையாக வாழ்க்கையை ஒரு யாத்திரையாக பயணமாகப் பார்க்கும் ஒரே சிந்தனைப் போக்கு தெரிகிறது.