தேசம், உபதேசம் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

இடமாகவுள்ள ‘திச்’சை வைத்தே ‘தேசம்’ என்ற வார்த்தை உண்டாயிருக்கிறது. தேசம் என்பது நாலு திசைகளும் வரையறுக்கப்பட்ட இடப்பரப்புதானே? ‘ப்ரதேசம்’ என்பதும் இதேபோல் உண்டான வார்த்தை.

செய்யவேண்டியதைச் சொல்லிக் கொடுக்கும் ‘திச்’சிலிருந்து ஆதேசம், ஸந்தேசம், உபதேசம் என்ற வார்த்தைகள் வந்திருக்கின்றன. பொதுவாக எல்லா ஜனங்களுக்குமுள்ள திசைகளில் குறிப்பிட்ட ஜனங்களுக்கு மாத்திரம் உடைமையாக எல்லை கட்டித் தரும் பகுதி ‘தேசம்’. ஆகையால் உடைமைகளையே பிரதானமாக நினைக்கும் மநுஷ்ய மனப்பான்மையின்படி அந்த வார்த்தை இடப்பரப்புக்கு மட்டுமே உரியதென்று ஆகிவிட்டது. வினைச்சொல்லாகவும், நல்வினையில் ஒருவரைச் செலுத்தும் உத்தரவாகவும் உள்ள ‘திச்’சிலிருந்து ‘தேசம்’ என்று இன்னொரு வார்த்தையைக் கொண்டு வராமல் ‘தேச’த்திற்கு, ‘ஆ’, ‘ஸம்’, ‘உப’ என்று அடை போட்டு ஆதேசம், ஸந்தேசம், உபதேசம் என்ற வார்த்தைகளையே கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஆதேசம் என்றால் அதிகாரபூர்வமான உத்தரவு. தெய்வக் கட்டளையாக வெளிப்படவோ மனஸுக்குள்ளேயோ ஒன்று தோன்றுவதைக்கூட ஆதேசம் என்றே சொல்வது.

ஸந்தேசம் என்றால் தகவல், செய்தி. ‘உத்தரவு’ என்பதன் அதிகாரம் ஒட்டிக் கொள்ளாமல் ஸாதாரணமாக அனுப்பும் எல்லா ‘மெஸ்ஸேஜு”மே ஸந்தேசந்தான்.

ஒன்றைச் சொல்லிக் கொடுப்பது என்பதன் ஸம்பந்தமில்லாமல், ‘உத்தேசம்’, ‘ஏகதேசம்’ என்றும் ‘தேசம்’ போட்டுக் கொண்டு இரண்டு வார்த்தைகள் இருக்கின்றன.

‘உத்தேசம்’ வெளியிலே உத்தரவாகவோ, ஸாதாரண செய்தியாகவோ சொல்லாமல் மனஸுக்குள்ளேயே ஒன்றை நினைப்பது. நிச்சயமாகத் தெரியாததை ஒரு குறிப்பாக அநுமானித்துச் சொல்லும்போதும், “எத்தனை என்று ஸரியாகத் தெரியாது; உத்தேசமாகச் சொன்னேன்” என்கிறோம். பகவானே ‘விபூதி யோக’த்தில் தாம் ஒவ்வொரு வர்க்கத்திலும் ச்ரேஷ்டமான எது எதுவாக இருக்கிறாரோ அதையெல்லாம் அடுக்கிக்கொண்டே போய்விட்டு, முடிவில், “இத்தனை சொன்னதுங்கூட என்னுடைய அகண்ட விபூதிகளைப் பூராவாக அடக்கிவிடவில்லை;இவ்வளவுங்கூட ஒரு குறிப்புக் காட்டுவதாகச் சொன்னது தான்” என்னும்போது “உத்தேசத: ப்ரோக்த:” என்றே சொல்லியிருக்கிறார். இங்கே ‘உத்தேசம்’ என்பதை ஆசார்யாள் ‘ஏகதேசம்’ என்று [தம்முடைய பாஷ்யத்தில்] அர்த்தம் பண்ணியிருப்பதால் ஏகதேசம் என்ற வார்த்தைக்கும் ‘குறிப்பாகத் தெரிவிப்பது’ என்ற அர்த்தமிருப்பதாகத் தெரிகிறது. முழுசான ஒன்றில் ஒரு பங்காக இருப்பதை ‘ஏகதேசம்’ என்பது. பேச்சு வழக்கில் மற்றவர்களுக்குப் பங்கு தராமல் ஒருத்தரே முழுசையும் செய்தால் ‘ஏகதேசமாக அவரே பண்ணிட்டார்’ என்கிறோம்.

ஆகக்கூடி, உத்தேசம், ஏகதேசம் என்ற வார்த்தைகளில் நம் ‘டாபிக்’கான ‘வழி’ ஸமசாரமில்லை. ‘உத்தேசம்’ வேண்டுமானால் ஒரு வழியை யோசிப்பதாகவும் இருக்கலாம். ‘ஸந்தேச’த்தில் கூட வழி சொல்வது இருந்துதானாக வேண்டுமென்றில்லை. ‘ஆதேசம்’ ஏதோ ஒரு வழியில்தான் போகணுமென்று கட்டாயமாகவே கட்டளை போட்டு விடுகிறது.

பாக்கி இருக்கிற வார்த்தை ‘உபதேசம்’ – அதைச் சொல்லத்தான் இத்தனை பீடிகையும் போட்டது!

‘உபதேசம்’ என்றவுடன் குரு-சிஷ்யர்கள் நினைவு வந்து விடுகிறது. உபதேசம் கொடுக்க குருவும், பெற சிஷ்யனும் இல்லாமல் உபதேசம் என்பதே கிடையாது.

எவரும் எவருக்கும் எதையும் சொல்வது ஸந்தேசம். கேட்பவனுக்கு நல்லதோ இல்லையோ அவன் கேட்டுத்தானாக வேண்டும் என்று ராஜா மாதிரி உயர்ந்த ஸ்தானத்திலிருப்பவன் ப்ரஜை மாதிரி கீழ் ஸ்தானத்திலிருப்பவனுக்குச் சொல்வது ஆதேசம். கேட்பவனின் நல்லதற்காகவே குரு என்பவர் சிஷ்யனுக்குச் சொல்வது உபதேசம்.

ஸ்தானத்தில் ராஜாவுக்கும் ப்ரஜைக்கும் இருப்பதை விடவும் குரு சிஷ்யர்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வு ஜாஸ்தி. குரு என்பவர் ஈச்வரனின் ஸ்தானத்திலேயே வைக்கப் பட்டிருப்பவர். ஒரு ப்ரஜை ராஜாவுக்குக் கட்டுப்பட்டிருப்பதை விடவும் சிஷ்யன் குருவிடம் அடங்கிக் கட்டுப்பட்டிருக்க வேண்டியவன்.

ஆனாலும் ‘ஆதேசம்’ என்பதன் கண்டிப்பு இல்லாமல், குரு செய்வதற்கு ‘உபதேசம்’ என்று மாதுர்யத்தை, ப்ரேமையை (மதுரம் மதுரம் என்றால் தேனும், சர்க்கரையுந்தானா மதுரம்? எல்லாவற்றையும் விட மதுரம் ப்ரேமைதான். அப்படிப்பட்ட ப்ரேமையை)த் தெரிவிப்பதாகப் பெயர் கொடுத்திருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is ' திச் ': பெயர்ச்சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் -  -
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  ' உப ' என்பதன் உட்பொருள்
Next