‘உப’ என்பதன் உட்பொருள் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

‘உப’ என்பதோடு ‘தேசம்’ என்பதைச் சேர்த்திருக்கிறது. ‘தேசம்’ என்பதை வினைச்சொல்லான ‘திச்’சிலிருந்து derive பண்ணினால், ஒருத்தர் செய்ய வேண்டியதைச் சொல்வது. ஆனாலும் அப்படி ஒரு வார்த்தை இல்லை என்றும், ‘ஆ’, ‘ஸந்’, ‘உப’ என்று முன்னடை – prefix சேர்த்துக் கொண்டு தான் ‘தேசம்’ என்பது வரும் என்றும் சொன்னேன், அவற்றில் ‘உப’ வைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

‘உப’ என்பது பல அர்த்தங்களைக் கொடுப்பது. நாம் நினைக்கக் கூடியது, ஸ்தானத்தில் ஒன்றைவிடக் குறைந்த இன்னொன்றுதான் ‘உப’ என்று. ஜனாதிபதி-உபஜனாதிபதி, அங்கம்-உபாங்கம், கதை-உபகதை என்றெல்லாம் இருப்பதைப் பார்த்து. அப்படியும் அர்த்தமுண்டானாலும், இன்னம் பலதும் [பலவும்] உண்டு. ஒன்றைவிட ஜாஸ்திச் சிறப்புள்ளதற்கேகூட ‘உப’ போடுவதுண்டு. “பரார்தம்” என்பது ஒரு மிகப் பெரிய நம்பர்; 1 போட்டு அப்புறம் 17 ஸைபர் போட்டால் கிடைக்கும் நம்பர். பகவானின் அனந்த கல்யாண குணங்கள் அதையும்விட ஜாஸ்தி என்பதை ‘உப பரார்தேர் – ஹரேர் – குணா:’ என்று சொல்லியிருக்கிறது.

‘உப’ என்பதற்கு இருக்கும் பல அர்த்தங்களில் இன்னொன்று, “கிட்ட”, “அருகில்” என்பதாகும். ‘உபநயனம்’ என்று பூணூல் கல்யாணத்தைச் சொல்வதற்கு அர்த்தம் “அருகில் கொண்டு போய் சேர்ப்பது”. யாருக்கு அருகில் என்றால் குருவுக்கு அருகில். பூணூல் போட்டுப் பிள்ளையை அத்யயனத்திற்காக குருகுல வாஸத்தில் விட்டுவிட வேண்டுமென்பதால் அப்படிப் பேர். ‘உப’ நயனத்தில் ஒரு பையனுக்கு ‘உப’வீதத்தை [பூணூலை] ப் போட்டு, அவனுக்காகப் பொறுப்பெடுத்துக் கொள்ளும் குரு செய்வது ‘உப’தேசம். அந்த குருவையே பொதுவாக உபாத்யாயர் (‘உப’அத்யாயர்) என்றுதான் சொல்கிறோம். ஒரு குரு தரக்கூடிய உபதேசத்தில் உச்சமாக முடிவது எது என்றால் ‘உப’நிஷத்! இப்படி உயர்வு பொருந்திய எல்லாம் ‘உப’ ஸம்பந்தமுள்ளதாய் இருக்கிறது!

‘உபநிஷத்’ என்னும் போது ‘உப’ என்றால் ப்ரஹ்ம வித்யையை ஆச்ரயித்து; அதாவது அதனை ‘அடுத்து’, ‘அணுகி’, ‘ஸமீபித்து’ என்று ஆசார்யாள் கடோபநிஷத் பாஷ்யத்தை ஆரம்பிக்கும்போது சொல்லியிருக்கிறார். [‘உபநிஷத்’ என்பதில்] ‘உப’வுக்கு அப்புறம் வரும் ‘நி’ என்பதற்கு வித்யையில் ‘நிச்சய நிஷ்டை கூடி’ என்று அர்த்தம் என்றும், முடிவாக வரும் ‘ஸத்’ என்பது* அப்படிக் கூடுவதால் ஏற்படும் அஞ்ஞான அழிப்பைக் காட்டுவதாகவும் சொல்லியிருக்கிறார். ‘ஸத்’ என்பது ‘அழிப்பது’ என்று மட்டுமில்லாமல் ‘ஒன்றைச் சென்றடைவது’ என்றும் அர்த்தம் கொடுக்கும் என்று சொல்லி, அப்படிப் பொருள் கொண்டால் ‘வித்யையை ஆச்ரயித்து, நிஷ்டை கூடி ப்ரஹ்மத்தைச் சென்றடைவதே உப-நி-ஷத்’ என்று சொல்லியிருக்கிறார்.

ஆக, ‘உப’ என்பது ஒன்றின் கிட்டே போயிருப்பதைக் காட்டும். குருவின் ‘கிட்டே’ என்னும்போதே ஒரு நெருக்கம், ப்ரியம், ப்ரேமை உண்டாகிவிடுகிறது. பல தினுஸான மோக்ஷங்களில்கூட பகவானுக்கு ஸமீபத்தில் இருப்பதையே ‘ஸாமீப்ய மோக்ஷம்’ என்ற பெரிய ஆனந்த நிலையாகச் சொல்லியிருக்கிறது.

‘உபதேசம்’ என்னும்போது, குரு எதைச் செய்யச் சொல்கிறாரோ அதை சிஷ்யனே செய்யும்படி விட்டுவிடாமல், அவரும் கிட்டத்தில், பக்கத்தில் நின்று ஸஹாயம் பண்ணிச் செய்விக்கிறார் என்று தொனிக்கிறது.

அன்பினால் சிஷ்யன் ஹ்ருதயத்தில் குரு கிட்டேயிருந்து சொல்லிக் கொடுப்பது ‘உப’தேசம்.

அவர் ஒன்றைச் செய்யச் சொல்கிறார் என்றால் அந்த ஒன்று என்ன? அதுதான் முக்யமான விஷயம். அதைச் சொல்லாமல் எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறேன். வாழும் வழிதான் அவர் சொல்லித் தருவது. [சிரித்து] ‘வாழ்க்கைப் பாதையில் இன்ன டைரக்ஷனில் போ!’ என்பதுதான் அவர் கொடுக்கும் டைரக்ஷன்! உத்தம குரு கொடுக்கும் உபதேசம் இந்த லோகத்திற்கான அநித்யமான வாழ்க்கைப் பாதையோடு முடிந்து விடாது. இதைக் கொண்டே நித்ய வாழ்க்கையான ப்ரஹ்மாநுபவத்தில் சேர்வதில்தான் அவர் முடிப்பார். அதற்காக சிஷ்யன் செய்ய வேண்டியதைச் செய்யும்போது அவரும் ஸ்தூலமாகவோ ஸூக்ஷ்மமாகவோ கூடவேயிருந்து அவனுக்குப் பக்க பலம் கொடுத்துத் தாம் சொல்வதை ‘உப’தேசமாக்குவார்.

‘உபகாரம்’ என்ற இடத்தில் ‘உப’ என்பது அன்பையும் அக்கறையையும், தான் கஷ்டப்பட்டாவது இன்னொருவருக்கு நல்லது செய்யும் குணத்தையும் காட்டுகிறது. ‘உபசாரம்’ என்கிறபோதோ பக்தியையும் மரியாதையுணர்ச்சியையும் தெரிவிப்பதாக ‘உப’ இருக்கிறது. குரு உபதேசம் செய்யும்போது சிஷ்யனிடம் அன்பையும் அக்கறையையும் காட்டி, தன்னுடைய ச்ரமத்தைப் பார்க்காமல் அவனுக்கு எடுத்துச் சொல்லி விளக்கி உபகாரம் செய்கிறார். அதே ஸமயம் தாம் சொல்லிக் கொடுக்கும் வித்யையிடம் மரியாதையுடன், பக்தியுடன் இருந்து போதனையையே வித்யாதிதேவதைக்கு ஒரு உபசாரமாகவும் பண்ணுகிறார்.

நான் இப்போது பேசுவதை ‘உபந்யாஸம்’ என்கிறீர்கள். இதில் ‘உப’ என்றால் என்ன, ‘ந்யாஸம்’ என்றால் என்ன? ‘ந்யாஸ’த்திற்கு அநேக அர்த்தங்கள் உண்டு. ‘வைப்பது’, ‘பதிந்து வைப்பது’ என்று ஒரு அர்த்தம். ‘விட்டு விடுவது’ என்று ஒரு அர்த்தம். ‘ஸந்-ந்யாஸம்’ என்றால் நன்றாக விட்டுவிடுவது, துறவு பூணுவது. ‘கொடுப்பது’ என்றும் இன்னொரு அர்த்தம். ‘விஷயங்களை நன்றாகக் கொடுப்பது’ என்ற அர்த்தத்திலேயே ‘உபந்யாஸம்’ என்கிறோம். வாய்ப் பேச்சால் கொடுப்பதை ‘உபந்யாஸம்’ என்று வடக்கத்திக்காரர்கள் சொல்வதில்லை; எழுத்திலே எழுதிக் கொடுப்பதையே அப்படிச் சொல்கிறார்கள். நாமோ எழுத்தில் இருக்கும் வ்யாஸத்தை, கட்டுரையை அப்படிச் சொல்லாமல் வாய்ப் பேச்சையே ‘உபந்யாஸம்’ என்கிறோம். எதுவானாலும் சரி, ‘ந்யாஸ’த்திற்குக் கீழ் ஸ்தானமாக ‘உபந்யாஸம்’ இல்லை. ஸாதாரணமாகக் கொடுக்கும் ‘ந்யாஸ’த்தை இன்னம் உயர்ந்த முறையில் செய்வதே ‘உபந்யாஸம்’ – அதாவது அதைவிட இது மேல் ஸ்தானம்.

உபதேசம் என்பதும் இவ்வாறே ‘இப்படிச் செய்’ என்று கட்டளையிட்டு வழிகாட்டுவதை உயர்ந்த முறையில் செய்வது என்று சொல்லலாம்.

இப்படி உபதேசம் பண்ணுபவரை உபதேசகர் என்று சொல்கிறோம். உபந்யாஸம் செய்பவர் உபந்யாஸகர் என்பது போல உபதேசம் செய்பவர் உபதேசகர்.


* ‘உபநிஷத்’ என்பதன் முடிவில் வரும் ‘ஷத்’ என்பது இலக்கண விதியின்படி ‘ஸத்’ பெறும் உருவமேயாகும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is தேசம், உபதேசம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  இரு பொருளிலும் ' தேசிகர் '
Next