அந்த உபதேசகரைத்தான் ‘தேசிகர்’ என்றும் சொல்வது. குரு என்றும் ஆசார்யர் என்றும் சொல்லப்படுகிறவருக்கு இப்படியும் ஒரு பெயர். அவர் வழிசொல்லிக் கொடுத்துக் கட்டளையிடுவதற்கு ‘தேசம்’ என்ற பெயரைத் தராமல் ‘உப’ சேர்த்தே சொன்னாலும், அவரைக் குறிப்பிடும்போதோ ‘உபதேசகர்’ என்பது போலவே, ‘உப’ போடாமல் ‘தேசகர்’ என்றும் வார்த்தை உண்டு. ஆனால் அதைவிடப் பிரபலமான பேர் ‘தேசிகர்’ என்பதே.
இடத்தை வைத்து ஏற்பட்ட தேசம் (நாடு) விஷயமாகவும் தேசிகர் என்று வார்த்தை உண்டு. அப்போது தேசிகர் என்பதற்கு ஸ்வதேசி, ஒரு தேசத்தை தமது பிறப்பிடமாகக் கொண்டவர், native என்று அர்த்தம். ஒரு தேசத்தின் நானா இடங்களையும் அறிந்திருந்து வழி சொல்லக்கூடிய guide-க்கும் தேசிகர் என்று பெயருண்டு.
ஆனாலும் ஆத்ம வாழ்க்கைக்கு guide-ஆக உள்ள உபதேசகரான குருவையே முக்யமாக அந்த வார்த்தையால் குறிப்பிடுகிறோம். ‘திச்’ என்ற வினைச் சொல்லின் அடிப்படையில் கற்றுக் கொடுத்துக் கட்டளை பண்ணுவதால் தேசிகராக இருப்பவர் வாழ்க்கைப் பயணத்தில் எந்த திசையில் எந்த வழியில் போக வேண்டும் என்றும் guide பண்ணுவதால் ‘திச்’சைப் பெயர்ச் சொல்லாகக் கொண்டு உண்டான தேசிகராகவும் இருக்கிறார்!
கூடவே வந்து வழி காட்டும் guide என்பதால், ‘உப’ சேர்க்காமல் தேசிகர் என்றே சொன்னாலுங்கூட கிட்டக்கவே இருப்பவர் என்றாகிவிடுகிறது! மரியாதை ஸ்தானத்தால் நாம் மேலே பட்டுவிடாமல் விலகி நிற்க வேண்டியவர்; ஆனாலும் ப்ரியத்தினால் கிட்டவே இருக்கிறார்!