ஆகையினால் இப்போதே சொல்லிவிடுகிறேன்; இதெல்லாம் ரொம்ப ரொம்ம்ம்ப காலம் பிடிக்கிற ஸாதனைதான்: ரொம்ப ரொம்ப ஸ்லோவாகத்தான் முன்னேற முடியும். ஆகையினால், ‘முடியலையே, முடியலையே! நாம ஸரியாப் பண்ணலையோ? நமக்கு உய்வு கிடையவே கிடையாதோ?’ என்று யாரும் அழ வேண்டாம், அதைர்யப்பட வேண்டாம், அவநம்பிக்கைப் படவேண்டாம். ‘போறும் ஸாதனை! ஸாதனையுமாச்சு, இன்னூணுமாச்சு! நமக்கு அதெல்லாம் பலிக்காது’ என்று கைவிட்டுவிட வேண்டாம்.
“முயற்சியுடையார் இகழ்ச்சி யடையார்” மனஸு தளராமல், நம்மால் முடிந்த முயற்சியை விடாமல் பண்ணிக் கொண்டே போனால், எத்தனை காலமானாலும் ஸரி, முறையான முன்னேற்றம் காண ஆரம்பித்து முடிவிலே லட்சியத்தைச் சேர்ந்து விடலாம். நம்பிக்கை முக்கியம். ச்ரத்தை என்பது அதைத்தான். ‘ஸ்வாமி கைவிட மாட்டார். சாஸ்திரமும் குருவும் காட்டும் வழி வீணாய்ப் போகாது’ என்ற த்ருடமான நம்பிக்கைக்குத் தான் ச்ரத்தை, ச்ரத்தை என்று பெயர்.
நாம் பேச்சு வழக்கில் ‘ச்ரத்தையாக ஒன்றை ஒருத்தர் பண்ணினார்’ என்று சொல்லும்போது ‘ஸின்ஸியராக, மனப் பூர்வமாக’ என்ற அர்த்தத்திலேயே அந்த வார்த்தையை உபயோகிக்கிறோம், வாஸ்தவத்தில் அது ‘நம்பிக்கை’ என்பதைத்தான் முக்யமான அர்த்தமாகக் கொண்டது. ஆழ்ந்த நம்பிக்கையால் ஏற்படுகிற ‘ஸின்ஸிரிடி’யோடு ஒருத்தர் ஒன்றைப் பண்ணுவதே ‘ச்ரத்தையோடு பண்ணுவது’.
நேராக நமக்கு ப்ரூஃப் கிடைக்கும் விஷயங்களில் ‘நம்பிக்கை’ என்பது தேவையில்லை. ஆனால் மத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கும் அநேக விஷயங்களுக்கோ இப்படி ப்ரத்யக்ஷப்ரூஃப் இருக்காது; சிலது ப்ரத்யக்ஷத்திற்கு நேர்மாறாகக்கூடத் தோன்றும். ‘புண்யம் பண்ணினால் நல்லது கிடைக்கும் பாபம் பண்ணினால் கெட்டது கிடைக்கும்’ என்று எல்லா மதங்களிலும் இருக்கிறது. ஆநால் ப்ரத்யக்ஷத்தில் அநேக பாபங்கள் பண்ணுபவர்கள் நல்லபடி வாழ்வதையும், புண்ய கர்மாக்கள் பண்ணுபவர்கள் கஷ்டப்படுவதையும் பார்க்கிறோம். இப்படியிருக்கிறதே என்றால், அதற்கு நம் ஹிந்து சாஸ்திரத்தில், ‘ஒரு ஜன்மாவுக்குள்ளேயே பாப-புண்ய பலன்கள் தெரிந்தாக வேண்டுமென்றில்லை. அநேக ஜன்மாக்களில் பலன்கள் தொடரும். இன்றைக்கு ஒரு பாவி ஸுகப்படுகிறான், புண்யவான் கஷ்டப்படுகிறான் என்றால் ஜன்மாந்தரத்தில் இந்த பாவி புண்யம் பண்ணியிருக்கிறான், அந்தப் புண்யவான் பாவம் பண்ணியிருக்கிறான் என்று அர்த்தம்’ என்று சொல்லியிருக்கிறது. இதை நாம் ப்ரூவ் பண்ணிக் கொள்ள முடியாது. இங்கேதான் நம்பிக்கை – அதாவது ச்ரத்தை – தேவைப்படுகிறது. இதே மாதிரி இன்னும் அநேகம் ச்ரத்தையின் மேலேயே ஒப்புக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது.
ஆஸ்திகர், நாஸ்திகர் என்ற இரண்டு பேர் பிரித்துச் சொல்கிறோமே, அதில் ஆஸ்திகர் என்றால் வெறுமனே ஸ்வாமி உண்டு என்று நினைக்கிறவர் மட்டுமில்லை. வெறுமனேக்காக, ஸகலத்துக்கும் காரண மூலசக்தியாக ஸ்வாமி என்று ஒருத்தர் இருக்கத்தான் வேண்டுமென்று நினைப்பதால் என்ன ப்ரயோஜனம்? அந்த ஸ்வாமி நம்முடைய கார்யங்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்து அதன்படி புண்ய-பாப பலன்களைக் கொடுக்கிறார்; அதோடு மாத்ரமில்லாமல் க்ருபா மூர்த்தியாக இருந்து கொண்டு நம்மை நல்லதிலேயே போகச் செய்வதற்காக ரிஷிகள் மூலம் சாஸ்திரங்களைக் கொடுத்திருக்கிறார்; போதாதென்று ஆசார்ய புருஷர்களை அனுப்பி வைத்தும், தானே அவதரித்தும் நல்லதற்கு வழி காட்டுகிறார்; ஆனபடியால் அவருடைய தீர்ப்புக்கு பயந்தும், சாஸ்த்ரப்படி ஆசார்யரின் உபதேசப்படி நடந்துகொண்டும் நாம் கடைத்தேற வேண்டும் என்ற நம்பிக்கை உறுதியாக இருந்து அந்தப்படி செய்தால்தான் ப்ரயோஜனமாகும். இந்த நம்பிக்கையைதான் ஆஸ்திகம் என்பது. அதாவது ச்ரத்தைதான் ஆஸ்திகம் என்பதே. சாந்தோக்ய உபநிஷத்தில் ச்ரத்தை இருக்கிறவன்தான் ஆத்ம சிந்தனை பண்ணுவான் என்ற மந்த்ரத்திற்கு1 ஆசார்யாள் பாஷ்யம் பண்ணும்போது ஒரே சின்ன வாக்யத்தில் “ஆஸ்திக்ய புத்தி:-ச்ரத்தா” என்று இரண்டையும் ஒன்றுபடுத்திச் சொல்லி முடித்திருக்கிறார்.
இங்கே நம்மைவிட வெள்ளைக்காரர்கள் ஒரு படி மேலே போயிருக்கிறார்கள் என்று சொல்லத் தோன்றுகிறது. எப்படியென்றால் – நாம் ‘மதம்’ என்று சொல்கிறோமே அதற்கு அர்த்தம் ‘மதியினால் பெறப்பட்டது’ என்பது. மதி நன்றாக ஆய்ந்து ஓய்ந்து பார்த்து ப்ரூவ் பண்ணி முடிவு கண்ட கொள்கையும் மதம்தான்; அது, ‘நம்மால் ப்ரூவ் பண்ணிப் பார்த்துக் கொள்ள முடியாவிட்டாலும் சாஸ்திரங்களும் பெரியவர்களும் சொல்வதால் ஒன்று ஸரியாகத்தான் இருக்க வேண்டும்’ என்று நம்புவதும் மதம்தான். இருந்தாலும், மதி, அதாவது ஒரு மனித புத்தி, தானே சிந்தித்துப் பார்த்து கன்வின்ஸ் ஆகிற கொள்கை என்பதுதான் மதம் என்பதற்கு முக்யமான அர்த்தம். பிறத்தியார் வார்த்தையில் நம்பிக்கையால் இல்லை. அதற்குத்தான் ச்ரத்தை என்ற தனி வார்த்தை இருப்பது. ஆனால் இங்கிலீஷ்காரர்களோ ‘Religion’ என்பதையே ‘ Faith’ என்றும் சொல்கிறார்கள்! நம்பிக்கைக்கு அத்தனை முக்யத்வம் மத விஷயத்தில் கொடுத்திருக்கிறார்கள்! பிற்காலத்தில் அவர்கள்தான் மதத்திலும் ‘ரீஸ’னுக்கு [பகுத்தறிவுக்கு] ரொம்பவும் இடம் கொடுத்து நம்மவர்களையும் அப்படி இழுத்துவிட்டவர்களென்றாலும் பூர்வத்தில் அவர்கள் சாஸ்திர நம்பிக்கையே மதம் என்று நினைத்துத்தான் அதை faith என்று சொல்லியிருக்க வேண்டும்.
ச்ரத்தை அத்யாவசியம். இந்த ஸமாசாரத்தை அப்புறம் இன்னம் கொஞ்சம் எடுத்துச் சொல்கிறேன். ‘எப்புறம்’ என்றால், அத்வைத ஸாதனை க்ரமத்திலேயே ஒரு உச்ச கட்டத்தில் ச்ரத்தை என்பது வரும்; அப்போது இன்னம் கொஞ்சம் அதைப்பற்றி சொல்கிறேன். அங்கே ஆழ வேர்விட்டுக் கொண்டு பெரிய மரமாக நிற்க வேண்டிய ச்ரத்தைக்கு ஆரம்பமாக ஒரு சின்னப் பதியன் போடுகிற மாதிரிதான் இப்போது நான் சொன்ன ச்ரத்தை! ஆனால் இது இருந்தால்தான் அது வரும்; இந்தப் பதியன் தான் அந்த மரமாக வளர வேண்டியது. ஸமுத்ரத்தில் கரையோரமாகக் கொஞ்ச நாழி மூச்சைப் பிடித்துக் கொண்டு நீச்சலடிப்பதில்தான் ஆரம்பிக்க வேண்டும். அதுதான் அப்புறம் பலப்பட்டுக் கொண்டு, பலப்பட்டுக் கொண்டு போய் நல்ல ஆழத்தில் அடிவாரத்தில் ரொம்ப நாழி மூச்சைப் பிடித்துக் கொண்டிருந்து முத்துச் சிப்பிகளை சேகரம் பண்ணும் ஸாமர்த்தியத்தை உண்டாக்கும். கரையோர நீச்சல் மாதிரி இப்போது சொன்ன அடிப்படை ச்ரத்தை. முத்துக் குளிப்பு முழுக்கு மாதிரி அப்புறம் வரப்போகும் ச்ரத்தை.
முத்து என்று சொன்னதில் தன்னையறியாமல் ஒரு பொருத்தம் தெரிகிறது. ‘முக்தம்’ என்ற வார்த்தைதான் அப்படி ஆனது. ‘முக்தம்’ என்றால் விடுபடுவது. சிப்பியிலிருந்து தெறித்து விடுபட்டு வருகிற மணியே ‘முக்தம்’ என்கிற முத்து. ஸம்ஸாரத்திலிருந்து தெறித்து விடுபடுவது முக்தி. முக்தரைத் தமிழில் முத்தர் என்றே சொல்வது வழக்கம். முக்தி பற்றிக் கதைபேச உட்கார்ந்த இடத்தில் முத்து உபமானம் வந்துவிட்டது….
அம்பாளுடைய சிரிப்பை ஒரு கவி பார்த்தாராம். வெள்ளை வெளேரன்று அவளுடைய தந்த காந்தி பரவுவதைப் பார்த்து சுப்ரமாயிருக்கிற சங்கின் ப்ரகாசம் மாதிரி இருக்கிறது என்று உவமை சொன்னாராம். உடனே இன்னொரு கவி அவரிடம் சண்டைக்கு போனாராம். “எப்படிங்காணும் சங்கையும் அம்பாளுடைய மந்த ஸ்மிதத்தையும் [புன்னகையையும] ஒன்றாகச் சொல்வீர்? சங்கு முக்தங்களைத் தூரத் தள்ளி விடுகிறது. அம்பாளின் மந்தஸ்மிதமோ முக்தர்களுக்குப் பரமப் பிரீதியை உண்டு பண்ணுகிறது. அதற்கும் இதற்கும் எப்படி ஒப்பு’? என்று கவி பாடினாராம்:
முக்தாநாம் பரிமோசநம் விதததஸ்-தத் ப்ரீதி நிஷ்பாதிநீ 2
முத்து எடுப்பது போல முக்தியைப் பிடிக்கும் கட்டத்திற்கு முன்னால் ஸாதனைக் கிரமத்தில் ச்ரத்தையைச் சொல்லியிருந்தாலும் நான் ஸகலத்திற்கும் ஆரம்பத்திலிருக்க வேண்டிய ச்ரத்தையைப் பற்றித்தான் இப்போது சொல்லிக் கொண்டிருந்தது.
ச்ரத்தையோடு இன்றைக்கே ஒரு பிள்ளையார் சுழி போட்டு ஆத்ம வழியில் போக ஆரம்பித்தால், என்றைக்கோ ஒருநாள் லட்சியத்திற்குப் போய் சேரலாம். ‘என்றைக்கானாலும் சரி, வேத உபநிஷத்துக்கள் முதலில் சொல்லி அப்புறம் க்ருஷ்ண பரமாத்மாவும் கீதையில் ‘கன்ஃபர்ம்’ பண்ணி, பிற்பாடு நம்முடைய பகவத்பாதாள் ஸாங்கோபாங்கமாக வகுத்துத் தந்துள்ள வழியானதால் நிச்சயமாக ஒரு நாள் நாமே பரப்ரஹ்மமாகிற பெரிய அநுபவம் நமக்கும் வாய்க்கும்’ என்ற ச்ரத்தையுடன் ஸாதனையைப் பின்பற்ற வேண்டும்.
கர்ம, பக்தியில் ஆரம்பித்து ஞானத்துக்குப் போக வேண்டும். அழுக்கேறிப் போன ஒரு கண்ணாடி நிலைப்படாமல் ஆடிக்கொண்டேயிருக்கிற மாதிரி நம் மனஸ் இருக்கிறது. அதனால் இப்போது இதில் ஞானத்துக்கான விஷயங்கள் ப்ரதிபலிக்காமலே இருக்கின்றன. கர்மா பண்ணிப் பண்ணி அழுக்கைத் துடைக்க வேண்டும். பக்தி பண்ணி பண்ணி அது ஆடுகிறதை நிறுத்தி நிலை கொள்ள செய்ய வேண்டும் — ‘நிலைக் கண்ணாடி’ என்ற பெயர் பொருந்தும்படிச் செய்ய வேண்டும். அப்படி மனஸ் நிர்மலமாக, ஒன்றிலேயே ஸ்திரமாக நிற்பதாக ஆனால் அப்புறம் ஞான விஷயங்கள் அதில் ஸ்வச்சமாக ‘ரிஃப்ளெக்ட்’ ஆகும். [சிரித்து] நாமும் ஆத்மாவைப் பற்றி ‘ரிஃப்ளெக்ட்’ பண்ண லாயக்காவோம்.
1 vii. 19
2 “மூக பஞ்சஷதீ”யில் ‘மந்தஸ்மித சதகம்’ 65-ம் ச்லோகத்திலுள்ள கருத்தை ஸ்ரீசரணர்கள் குட்டிக் கதையாக்கியிருக்கிறார்கள்.