ஆத்ம ஸாதனைக்கான யோக்யதாம்சம் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

ஒன்று மறக்கப்படாது. வாஸ்தவமாக, ஸீரியஸாக ஒருத்தன் ஆத்ம ஸாதனை க்ரமத்தை மேற்கொள்ள வேண்டியது மனஸின் அழுக்கும், தடுமாட்டமும் தீர்ந்த அப்புறந்தான் என்றே ஆசார்யாள் வைத்திருக்கிறார். அழுக்கையும், தடுமாற்றத்தையும் போக்கும் ஸாதனங்களான கர்ம, யோக, பக்தி யோகங்களில் தேர்ச்சி பெற்றவனுக்கே ஸாதன சதுஷ்டயம் கைகூடுகிறது என்று ஆசார்யாள் ‘க்ளியரா’கச் சொல்லியிருக்கிறார்:

ஸ்வ-வர்ணாச்ரம தர்மேண தபஸா ஹரிதோஷணாத்|
ஸாதநம் ப்ரபவேத் பும்ஸாம் வைராக்யாதி சதுஷ்டயம்|| 1

‘ஸ்வ வர்ணாச்ரம தர்மம்’ என்பதுதான் சாஸ்த்ரப்படி ஒருத்தனுக்கு ஏற்பட்ட கர்ம யோகம். ‘ஹரிதோஷணம்’ என்பது ஈச்வர ப்ரீதி. ‘ஈச்வர ப்ரீத்யர்த்தம்’ என்றே ஸகல கர்மத்தையும் பண்ணுகிறோம். தனியாகப் பூஜை என்றில்லாமல், கீதோபதேசப்படி ஸ்வதர்ம கர்மாவை அவனுக்கு அர்ப்பணிப்பதே பக்திதான். ‘ஸோபான பஞ்சகம்’ என்று ஆசார்யாள் முடிவாகப் பண்ணிய உபதேசத்திலும், ‘கர்மாவை நன்றாக அநுஷ்டித்து அதன் மூலமே ஈச்வர பூஜை பண்ணியதாக ஆக்கிக் கொள்ளுங்கள்’ என்றுதான் சொல்லியிருக்கிறார்2. ஆனாலும் அப்படி, செய்யும் கார்யமெல்லாம் ஈச்வராராதனை என்ற பாவத்தோடு செய்வது அவ்வளவு ஸுலபமில்லையாதலால் பக்தி என்று தனியாக அவனையே ப்ரேமையோடு நினைத்து உபாஸிப்பதையும் சொல்லியிருக்கிறார். சித்தத்தைத் துப்புரவு பண்ணக் கர்மா; அதை ஒருமுகப்படுத்த பக்தி என்று வைத்தார். பக்தியைதான் இங்கே ‘ஹரிதோஷணம்’ என்றது. ஹரி என்றால் விஷ்ணு ஒருத்தர்தான் என்ற அர்த்தமில்லை. ‘ஹரி: ஓம்’ என்றே சொல்வது வழக்கம்; இங்கே ஹரி என்றால் எல்லா தெய்வத்தையும் குறிக்கும் ஸகுண ப்ரஹ்மம். அப்படித்தான் இங்கேயும் அர்த்தம். ‘தோஷணம்’ என்றால் த்ருப்திபடுத்துவது, ப்ரீதி உண்டாக்குவது. நாம் பகவானிடம் அன்போடு பக்தி பண்ணினால் அவன், ‘குழந்தை நல்ல வழிக்கு வருகிறான்’ என்று த்ருப்தியும் ப்ரீதியும் அடைகிறான். ஆகையால் ‘ஹரி தோஷணம்’ என்றால் பக்தி யோகம். ஸ்வதர்மம், ஹரி தோஷணம் இவற்றோடு ‘தபஸா’ என்றும் சொல்லியிருக்கிறார். தபஸ் என்று மூன்றாவதான ஒன்றாக அதை எடுத்துக் கொள்ளவேண்டியதில்லை. ஸ்வதர்மம், ஹரி தோஷணம் இரண்டையுமே தபஸ் போல மெய்வருத்தம் பாராமல் நல்ல ஈடுபட்டோடு செய்ய வேண்டும் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்யும் மனிதர்களுக்குத்தான் “ஸாதநம் சதுஷ்டயம் ப்ரபவேத்”: “ஸாதன சதுஷ்டயம் என்பது கைகூடும்; ஏற்கத் தக்கது”. ஸ்கூல் படிப்பு முடித்தவனுக்குத்தான் காலேஜ் என்கிற மாதிரி, ‘முதலில் மனஸை சுத்தமாக்கிக் கொள்ளு; ஒரே லக்ஷயத்தில் நிற்கும்படியாக நிலைப்படுத்திக் கொள்ளு; அதில் முதலில் பாஸ் பண்ணிவிட்டு அப்புறம் என்னுடைய காலேஜூக்கு வா, அட்மிஷன் தருகிறேன். அப்போது [ஆத்ம] விசார மார்க்கத்தில் அடியெடுத்து வைக்கலாம். அதற்கும் அப்புறம் ஆழ்ந்து விசாரம் பண்ணலாம். விசாரம் அநுபவமாவது இன்னமும் அப்புறம். அதெல்லாம் காலேஜ் படிப்பை முடித்து எம்.ஏ.யிலிருந்து பி.ஹெச்.டி போய்தான். அதாவது ஸந்நியாஸம் வாங்கிக் கொண்ட பிறகுதான்’ என்றே ஆசார்யாள் சொல்கிறார்.

இப்படிச் சொன்னதால் ஒருத்தன் பூர்ணமாக சித்த சுத்தியும் ஐகாக்ரியமும் பெற்ற அப்புறந்தான் ஆத்ம வித்யையின் பக்கமே தலைவைத்துப் படுக்கலாமென்று அர்த்தம் பண்ணிக் கொண்டுவிடக்கூடாது. அவை மட்டும் பூர்ணமாக உண்டாகிவிட்டால் அப்புறம் ஸாதனை க்ரமம் என்று பெரிசாக எதுவுமே தேவைப்படாது; உடனேயே குரு உபதேசத்தில் மனஸு டகாலென்று நின்று, ஸாக்ஷாத்காரம் பளீரென்று ஸித்தித்துவிடும். ஸாதனை என்ற ஒன்றுக்கே ஜாஸ்தி இடமிருக்காது. அப்படிப்பட்டவனுக்கு ஆசார்யாள் பொழுதை மெனக்கெடுத்துக் கொண்டு ஸாதனை க்ரமம் என்று படி வரிசை போட்டுத் தர அவசியமே இல்லை. அதனால், ஆசார்யாளின் அபிப்ராயம் என்னவென்று நாம் ஸரியாகப் புரிந்து கொண்டால் ஓரளவு, கணிசமான அளவு, சித்த சுத்தி-ஐகாக்ரியங்கள் உண்டான அப்புறம் ஆத்ம சாஸ்திரங்களைப் படித்து, ஸாதனை என்று ஒரு வழிமுறையில் ப்ரவேசித்தால்தான் அதில் அந்தரங்கப் பிடிப்போடு சுத்தமாக முன்னேற முடியும்; இல்லாவிட்டால் ஏதோ மேம்புல் மேய்ந்துவிட்டு, அதனாலேயே எல்லாம் தெரிந்து கொண்ட மாதிரி நினைப்பதாக ஆகும் என்பதுதான்.

‘எல்லாருக்கும் வழியைத் திறந்து விட்டிருக்கிறோம்’ என்று பௌத்தர்கள் பண்ணியது எத்தனை கேலிக்கூத்தில் முடிந்தது என்பதைக் கண்ணுக்கு முன்னால் பார்த்திருந்தவர் ஆசார்யாள். அதனால் இன்ன யோக்யதாம்சம் உள்ளவர்தான் ஸின்ஸியராக முன்னேற முடியுமென்று அப்படியே [யோக்யதாம்சங்கள்] வைத்தார்.

“[அத்வைத ஸாதனைக்கு] எல்லாருமே அதிகாரிகள்தான். யோக்யதாம்சம் என்று எதுவுமே வேண்டாம். தனக்கே ரொம்ப ரொம்ப சொந்தமான தன்னையே, தன் உண்மை நிலையையேதானே தெரிந்து கொள்ளப் போகிறான்? தான் தானாவதற்கு என்ன யோக்யதாம்சம் வேணும்? தன்னைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நிஜமான தாபம் ஒன்றே போதும். அதன் வேகத்தில் மனஸை நானில்லை என்று பண்ணிக் கொண்டு விட்டால், அவ்வளவுதான், யாரானாலும் ஸாக்ஷாத்காரம் பெற்று விடலாம். Self-realisation ஒவ்வொருத்தருக்கும் birth-right [ஆத்ம ஸாக்ஷாத்காரம் ஒவ்வொருவருக்கும் பிறப்புரிமை] அதற்கு ‘க்வாலிஃபிகேஷன்’ நிர்ணயிக்கவே படாது” என்று சொல்கிறவர்களும் உண்டு. இவர்களில் சில பேர் நிஜமாகவே அப்படித் தெரிந்துகொண்ட ஞானிகளாகவும் இருக்கலாம். அவர்களை ஆச்ரயித்தவர்களிலும் சிறு வயசில், க்ருஹஸ்தாச்ரமத்தில், பிஸினஸ் மாதிரிக் கார்யத்தில் இருந்த வெள்ளைக்காரர்கள் முதலான இரண்டொருத்தர்கூட ஒரே தாபத்தோடு, ஒரு முனைப்பாக ஆத்ம விசாரம் பண்ணி ஞானத் தெளிவு அடைந்தும் இருக்கலாம். ஆனாலும் இப்படிச் சொல்கிறவர்களிலும், கேட்கிறவர்களிலும் இந்த மாதிரி நிஜமாகவே ஸித்தி அடைந்தவர் நூற்றுக்கு ஒன்றிரண்டுதான் இருக்கும் — சொல்கிறவர்களில் இன்னம் கொஞ்சம் ஜாஸ்தி இருக்குமோ என்னவோ? கேட்கிறவர்களில் இன்னமுங்கூட [ஒன்றிரண்டு சதவிகிதம் என்பதை விடவுங்கூட] ரொம்பக் குறைச்சலாகத்தானிருக்கும். வேதாந்த விஷயமாக நிறையப் படித்ததாலும், நல்ல புத்திசக்தியுள்ளதாலும் ஞானத்தைப் பற்றி, ஆத்மாவைப் பற்றி நன்றாகச் சிந்தனையைப் படரவிட்டு அநேகம் கருத்துக்களை அழகாக நிர்மாணித்து எழுதலாம்; பேசலாம்; பேப்பர் ப்ரெஸன்ட் பண்ணுவது, தீஸிஸ் ஸப்மிட் பண்ணுவது எல்லாம் செய்யலாம். அவர்கள் சொல்கிற ஸமாசாரங்களையும், சொல்லியிருக்கும் விதத்தையும் பார்த்தால் மற்றவர்களுக்கு ப்ரமிப்பாக, அவர்கள் ஸாக்ஷாத்காரமே பெற்றவர்கள் என்று நினைக்கும்படிதான் இருக்கும். ஆனாலும் வாஸ்தவத்தில் அப்படி எழுதி, பேசிப் பண்ணுவர்களில் ஆயிரத்தில் ஒருத்தர்தான் கண்டவராக இருப்பார். அந்தக் கண்டவரையோ பொதுவாக “விண்டிலர்” என்கிறார்கள்! அதாவது ஒன்றும் சொல்லாமல் தக்ஷிணாமூர்த்தியாக இருப்பார்களென்று சொல்கிறார்கள்! லோகாநுக்ரஹத்திற்காக ஈச்வரனே தூண்டிவிட்டுத்தான் ‘கண்டவர்’களில் சிலர் — நம் ஆசார்யாள் மாதிரி சிலர் — ஆத்ம வித்யை பற்றி எழுதி, பேசியும் இருக்கிறார்கள்… சொல்ல வந்த விஷயம் என்னவென்றால் — நிறையக் கர்மாநுஷ்டானம், பக்தி உபாஸனை பண்ணி அப்புறம் ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டுதான் அத்யாத்ம வித்யையை அப்யஸிப்பது என்றில்லாமல், சில பேர் நேராகவே அந்த வழியில் போய் ஸித்தியடைந்து, ஆனபடியால் எவரும் அப்படிப் பண்ணலாம் என்று சொல்வதைப் பற்றித்தான். இப்படி ஸுலபமாக ஸித்தி அடைகிற அந்தச் சில பேர் விசேஷமான பிறவிகள்; அதாவது, உயர்ந்த பூர்வ ஸம்ஸ்கார பலமுள்ளவர்களாக ஜன்மாந்தரத்திலேயே கர்மா, பக்தி பண்ணி சித்த சித்தி, ஐகாக்ரியம் பெருமளவுக்குப் பெற்றவர்களாக இருப்பார்கள். இந்த ஜன்மாவில் அவர்களுக்கு ஈச்வராநுக்ரஹமும் விசேஷமாகக் கிடைத்து சட்டென்று ஸித்தி கூடியிருக்கும். இவர்கள் ‘ஆர்டினரி ரன்’னை (ஸாமானிய வகையறாவை)ச் சேராதவர்கள். இப்படிப் பட்டவர்கள் ஆசார்யாளிடம் தனியாகப் போனால், அவரும் அவர்களுக்குத் தனிவழிதான் சொல்லிக் கொடுத்திருப்பார். ஆனால் ஜகத்குருவாக அவர் ஜகத்துக்குப் பொதுவாக எழுதி வைத்தபோது ஸாதாரண, ஸாமானிய நிலையை வைத்தே ஸாதனை சொன்னதால் கர்ம யோகம், ஞான யோகம் என்று பிரித்தே யோக்யதாம்சம் வைத்தார்.

அதன்படி, ஒரளவுக்கு சித்த சுத்தி-ஐகாக்ரதைகள் பெற்றவனே அத்வைத சாஸ்திரங்களை அநுஸரித்து எது நித்யம் எது அநித்யம் என்று அலசிப்பார்த்து, கொள்ள வேண்டியதைக் கொண்டு, தள்ள வேண்டியதைத் தள்ளும் விவேகத்திலிருந்து ஆரம்பித்து அந்த நித்யத்தை அடைந்தே தீர்வது என்ற ஒரே மூச்சான – ‘முமுக்ஷுதா’ என்ற – ஆர்வத்தை பெறுகிற நிலைவரை போவான் என்று அதற்கான படிவரிசையை ‘ஸாதன சதுஷ்டயம்’ என்று ஆசார்யாள் போட்டுக் கொடுத்தார்.

இதோடு [ஸாதனை க்ரமம்] முடிந்துவிடவில்லை. இதுவும் காலேஜில் பி.ஏ., எம்.ஏ. படிக்கிற மாதிரிதான். இதற்கும் மேலேதான் பி.எச்.டி – முமுக்ஷுதை என்ற முக்தி நாட்டம் அஸல் முக்தியேயான ஆத்ம ஸாக்ஷாத்காரத்தில் ஒருவனைக் கொண்டு சேர்த்து ஃபுல் ஸ்டாப் வைப்பது!


1 அபரோக்ஷாநுபூதி — ச்லோ 3.

2 முதல் ச்லோகம். ‘ஸோபான பஞ்சக’ த்தை உபதேச பஞ்சகம் என்றும் கூறுவர்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is சிரத்தை (நம்பிக்கை) அவசியம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  உச்ச கட்ட ஸாதனை துறிவக்கே !
Next