உச்ச கட்ட ஸாதனை துறவிக்கே! : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

முமுக்ஷுத்வம் என்பதோடு இரண்டாவது ஸ்டேஜ் முடிகிறது. மனஸின் அழுக்கையும் தடுமாட்டத்தையும் குறிப்பிடத்தக்க அளவுக்குக் கர்மா-பக்திகளால் போக்கிக் கொள்வது முதல் ஸ்டேஜ். ஸாதனா சதுஷ்டயம் இரண்டாவது ஸ்டேஜ். இதில் பின்பற்றும் ஸாதனங்களால் அழுக்கும் ஆட்டமும் மேலும் நன்றாக எடுபட்டுப் போயிருக்கும். ஏதாவது அஞ்சு, பத்து பெர்ஸென்ட் மிஞ்சியிருக்கலாம்.

அப்படிப்பட்ட, ஸந்தர்ப்பத்தில் விடுபவதொன்றே கார்யம் என்று feel பண்ணும் முமுக்ஷுவானவன் வீடு, வாசலிலிருந்து விடுபட்டு, அதாவது ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டு மூன்றாவது ஸ்டேஜுக்கு – பி.எச்.டிக்கு போகிறான். அதாவது கடைசி கட்டத்தில் ஸந்நியாஸிதான் ஆத்ம ஸாக்ஷாத்கார ஸாதனைக்கு அதிகாரி என்பதே ஆசார்யாளின் ஸித்தாந்தம். மற்ற பாசம், பந்தம், லோக கார்யம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஸந்நியாஸியாகி ஆத்ம விசாரமே ஸதாகால ஸாதனையாக இருப்பவனுக்குத்தான் பெரியதிலெல்லாம் பெரியதான, பேரின்பம் பேரின்பம் என்கிற ப்ரஹ்மாநுபவம் ஸித்திக்கும் என்பதே ஆசார்யாள் கொள்கை — உபநிஷத்துக்களிலிருந்து எடுத்துச் சொன்ன கொள்கை.

ஆக, மூன்றாம் ஸ்டேஜில் குருமுகமாக ஸந்நியாஸம் வாங்கிக்கொண்டு, அவரிடம் ஜீவ ப்ரஹ்ம அபேத விஷயமாக மந்த்ரோபதேசம் பெற்றுக்கொண்டு, அதையே சிந்தனை பண்ணிக் கொண்டிருந்து, அப்புறம் சிந்தனையும் நின்று லக்ஷ்யத்தோடேயே ஐக்யமாகிவிடும் பெரிய அநுபவத்தை அடையவேண்டியது என்று வைத்திருக்கிறார்.

சில பேர் கேள்வி கேட்கிறார்கள்: “ஜீவ-ப்ரஹ்ம அபேதத்தைச் சொல்லும் மஹாவாக்ய உபதேசம் ஸந்நியாஸிக்கே ஆனது என்று ஆசார்யாள் சொல்லியிருக்கிறார். ஆனால் அதில் ஸாமவேத மஹாவாக்யமே நடுத்தர வயஸு ப்ரஹ்மச்சாரியான ச்வேதகேதுவுக்கு அவனுடைய தகப்பனார் உபதேசித்ததாகத்தானே வருகிறது?” என்று.

வேதத்தின் ஒவ்வொரு சாகையிலும் ஒரு உபநிஷத்தும் அதில் ‘மஹாவாக்யம்’ என்ற ஜீவ ப்ரஹ்ம அபேத வாசகமும் உண்டு. ‘ஆதியில் மொத்தம் ஆயிரத்துக்கு மேற்பட்ட சாகைகள் இருந்து, இப்போது கழுதை தேய்ந்து (அப்படிச் சொன்னால் மரியாதையாக இல்லை; ‘யானை தேய்ந்து’ என்று வைத்துக்கொள்ளலாம்!) கட்டெறும்பாக ஏழே சாகைகள்தான் ஏதோ முணுக்கு முணுக்கு என்று மங்கலாக ப்ரகாசித்துக்கொண்டிருக்கின்றன. ப்ரதி சாகைக்கும் ஒரு மஹா வாக்யமிருந்தாலும் முக்யமாக ஒவ்வொரு வேதத்துக்கு ஒன்றாக நாலு மஹா வாக்யங்களை ஸந்நியாஸத்தில் தீக்ஷோபதேசமாகக் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. அப்படி ரிக் வேதத்தில் ஐதரேய உபநிஷத்தில் வருவது இன்னார் இன்னாருக்கு உபதேசம் பண்ணியது என்று இல்லாமல், மஹீதாஸ ஐதரேயர் என்ற ரிஷி கொடுத்த அந்த உபநிஷத்தின் அநேக மந்த்ரங்களில் முடிவிலே வருகிறது: முடிவதற்கு முந்தின மந்த்ரத்தில் முடிகிற மந்த்ரத்தில் சொல்லியிருப்பதிலிருந்தும், இதற்கு முந்தின அத்யாயத்தில் கர்ப்பத்திலிருந்தபோதே ப்ரஹ்மஞானம் பெற்ற வாமதேவர் என்ற ரிஷியைச் சொல்லியிருப்பதிலிருந்தும் இந்த மஹாவாக்யம் அவருக்குத் தானாகவே ஈச்வராநுக்ரஹத்தில் ஸ்புரித்தது என்ற ஊஹம் பண்ணலாம். அதாவது ஒரு ப்ரஹ்ம ஞானிக்கு ஈச்வரனே உபதேசம் பண்ணியது என்று சொல்லலாம். அதனால் அதை உசந்த ஸத்பாத்ரமான நாலாவது ஆச்ரமிக்கே [ஸந்நியாஸிக்கே] உபதேசிக்க வேண்டும் என்று சொல்ல நியாயமிருக்கிறது.

யஜுர்வேத மஹாவாக்யம் ப்ருஹதாரண்யகோபநிஷத் [முதல் அத்யாயத்]தில் புருஷவித ப்ராஹ்மணம் என்பதில் வருகிறது. இங்கேயும், ‘இந்த மஹாவாக்யத்தில் சொன்னபடி எந்த தேவர்களும், ரிஷிகளும், மநுஷ்யர்களும் அநுபவத்தில் கண்டார்களோ அவர்கள் ப்ரஹ்மமாகவே ஆனார்கள்’ என்று சொல்லிவிட்டு, வாமதேவரை மாத்திரம் பெயர் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறது. ஆகையால் இந்த மஹாவாக்யத்தையும் ஈச்வரனே ஸூக்ஷ்ம குருவாகி ஞானியான வாமதேவருக்கு அந்தஃகரணத்துக்குள்ளே உபதேசித்தது என்று வைத்துக் கொண்டு, ஸந்நியாஸிகளே இதற்கு அதிகாரிகள் என்று சொல்ல இடமிருக்கிறது.

அதர்வ வேத மஹாவாக்யம் மாண்டூக்யோபநிஷத்தில் வருகிறது. மோக்ஷ நாட்டமுள்ள முமுக்ஷுக்கள் நிஜமாகவே மோக்ஷத்தில் சேருவதற்கு இந்த ஒரு உபநிஷத்தே போதுமென்று ராமர் ஹநுமாருக்கு உபேசித்ததாக இன்னொரு உபநிஷத்தில் இருக்கிறது1. [அந்த உபநிஷத்துக்கு முக்திகோபநிஷத் என்று பெயர்] அதனால் அதர்வத்தில் வரும் வாக்யமும் ஸந்நியாஸிகளுக்கே உபதேசிக்கத்தக்கதென்று சொல்லலாம்.

ஸாமவேத மஹாவாக்யத்தைப் பற்றித்தான் கேள்வி. ஆக்ஷேபணைக்காரர்களும் அதை வைத்துத்தான் கேட்கிறார்கள். நான்கு முக்யமான மஹா வாக்யங்களில் நேராக ஒரு குரு ஒரு சிஷ்யனுக்கு உபதேசிப்பதாக இருப்பது இது ஒன்றுதான். அதனால் இதற்கு விசேஷ கௌரவம் கொடுத்திருக்கிறது. அப்படிப்பட்ட சிஷ்யன் யாரென்றால் நல்ல வாலிப தசையில் இருக்கப்பட்ட ஒரு ப்ரஹ்மசாரி. ஸந்நியாஸி இல்லை. அதை வைத்துத்தான் ஆக்ஷேபணை. “ஒரு இருபத்திநாலு வயஸுக்கார ப்ரஹ்மசாரிக்கே ஒரிஜனலாகத் தரப்பட்ட உபதேசத்தை ஸந்நியாஸிக்குத்தான் தரணும் என்றால் எப்படி?” என்று ஆக்ஷேபம்.

சின்ன வயசு, கிழ வயசு என்கிறது பாயின்ட் இல்லை. எது பாயின்ட் என்றால், ஞானப் பக்குவம் வந்திருக்க வேண்டும். பொதுவாக அந்தப் பக்குவம் வாழ்க்கையில் நன்றாக அடிபட்டுக் கர்ம யோகத்தைக் குறைவறப் பண்ணியவனுக்குத்தான் ஏற்படுமாதலால், ஆசார்யாள் பொது விதியாகச் சொல்லும்போது, ஸந்நியாஸாஸ்ரமம் கொடுக்கிறபோதே மஹா வாக்யோபதேசம் என்று வைத்தார். பொதுவாக இருக்கப்பட்ட அறிவு நிலையை வைத்துப் பதினாலோ, பதினைந்தோ ஏதோ ஒரு வயஸு வைத்து, அதற்கு மேலே ஆனவன்தான் எஸ்.எஸ்.எல்.ஸி. பரீக்ஷைக்கு உட்காரலாமென்ற விதி பண்ணியிருக்கிறார்கள். ஏழெட்டு வயஸிலேயே பி.ஏ.எம்.ஏ.காரர்களைவிட மேதையோடு யாரோ சில ‘ப்ராடிஜிக்கள்’இருக்கிறார்கள் என்பதால் பொது விதி தப்பு என்கலாமா? ஒரு விதி இருந்தால் அதற்கு விலக்கும் உண்டு — Every rule has its exception — என்று ஒப்புக்கொண்டு பரீக்ஷைக்கான வயஸு ரூலிலிருந்து அதிபுத்திசாலிக்கு exemption தருகிறார்களல்லவா? இந்த மாதிரி ப்ரஹ்மவித்யைக்கு ஸந்நியாஸியே அதிகாரி என்ற ரூலுக்கு exception-exemption -ல் வருகிறவன் தான் அந்த ஸாமவேதப் பையன் — ச்வேதகேது. முதலில் அப்பாவிடம் படித்துவிட்டு அப்புறம் பண்ணிரண்டு வருஷம் வேறு குருமார்களிடமும் படித்துவிட்டு, படிப்பில் தனக்கு நிகரில்லையென்று கர்வப்படுமளவுக்கு விஷயம் தெரிந்தவன். இப்படிப்பட்டவர்கள் கர்வ பங்கம் அடையும் போதுதான் ஒரேடியாக விநயம் வந்து பரிபூர்ண சரணாகத பாவம் வருவதும்! ஒரு நல்ல அறிவாளி தன்னுடைய அறிவத்தனையும் ப்ரயோஜனமில்லை என்று கண்டு கொண்டு தோற்றுப்போய் நிற்கிறபோது அநுபவத்துக்கு உள்ள உயர்வைப் புரிந்து கொண்டு அதற்காகத் தன்னை அப்படியே அர்ப்பணித்துக் கொள்ளுகிற மாதிரி மற்ற எவராலும் பண்ணமுடியாது. அந்த ஸாமவேத பையனுடைய கர்வத்தை அவனுடைய பிதாவே பங்கப்படுத்தி அவனை இந்த உசந்த மனோபாவத்துக்குத்தான் எழுப்பி, அந்த நிலையில்தான் மஹாவாக்யோபதேசம் பண்ணினார். ஆகையினால் அதை precedent [முன்னோடியாகக்] காட்டி எல்லோருக்கும் அந்த உபதேசம் கொடுக்கலாம் என்பது ஸரியில்லை.

ஆத்ம வித்யா அப்யாஸத்திற்கு பொது ரூல் – ‘ப்ரஹ்ம ஸூத்ரத்தில் கொடுத்திருக்கும் ரூல்- அது ஊர்த்வரேதஸ்களுக்கே உரியது என்பது2. அவர்கள் யாரென்றால் சக்தியைத் துளிக்கூட இந்த்ரியாநுபவத்தில் இறக்கி விரயம் பண்ணாமல் ஆத்மாபிவிருத்திக்கு ஸாதகமாகவே ஏற்றிக்கொண்டு போகிறவர்கள். அந்த மாதிரி காமத்தை அழித்துவிட்டவன் ஸந்நியாஸியாகத்தான் ஆவான். பால்யத்திலேயே கூட ஒருவன் நெருப்பு மாதிரி சுத்தமாயிருந்து கொண்டு அப்புறம் காமமே எழும்ப முடியாதபடி கொழுந்துவிட்டுக் கொண்டிருந்தால் அவனுக்கு ஸந்நியாஸமும் ஜீவ ப்ரஹ்ம அபேத வித்தையில் தீக்ஷையும் கொடுக்கலாம்தான். ஆசார்யாளே அப்படி எட்டே வயஸில் ஸந்நியாஸி ஆனவர்தானே? அவருடைய மடங்களிலும் இப்படி பால்ய, யௌவன ப்ரஹ்மசாரிகளுக்கு தீக்ஷை கொடுத்து ஸ்வாமிகளாக வைக்கிற ஸம்ப்ரதாயத்தை ஏற்படுத்தியிருக்கிறாரே! ஸ்ரீபலி என்ற ஊரில் அவரிடம் வெறும் ஜடம் மாதிரி ஒரு பிள்ளையான்டானைத் தகப்பன்காரன் அழைத்துக்கொண்டு வந்து உன்மாதத்தை தெளிவிக்கணுமென்று ப்ரார்த்தனை பண்ணினான். ஆசார்யாள் பார்வையிலோ அந்த உன்மாதத்துக்குள்ளே புதைந்திருக்கும் ஞானப் பக்குவம் தெரிந்துவிட்டது. அந்த பிள்ளைக்கு ஸந்நியாஸம் கொடுத்து தம்மோடேயே வைத்துக் கொண்டார். அவருடைய நான்கு ப்ரதான சிஷ்யர்களில் ஒருத்தரான ஹஸ்தாமலகராக ஆனது அந்தப் பிள்ளைதான். அப்புறம், நம்முடைய ஸாமவேத பையனைவிட வயஸில் ரொம்பச் சின்ன ஒரு ஏழு வயஸுக்குழந்தை அவனை விடவும் மஹா புத்தியோடு ஆசார்யாளிடமே எதிர் வாதம் பண்ணிற்று. இவன் மாதிரியே அதுவும் தோற்றுப் போயிற்று. யாரானாலும் ஆசார்யாளிடம் எதிர் வாதம் பண்ணினால் தோற்றுப் போகாமல் என்ன செய்வது? தோற்றுப் போச்சோ, இல்லையோ, நான் சொன்னாற்போல ஒரே விநயம், சரணாகத புத்தி வந்து அப்படியே ஆசார்யாள் சரணங்களில் அந்தக் குழந்தை விழுந்துவிட்டது. ஆசார்யாளும் பரம ஸந்தோஷமடைந்து அதற்கு ஸந்நியாஸம் தந்து ‘ஸர்வஜ்ஞாத்மா’ என்ற பேரும் கொடுத்தார்3. எல்லாருக்காகவும் சட்டம் போட்ட ஆசார்யாள், சட்டத்துக்கு மேற்பட்ட அபூர்வப் பிறவிகள் விஷயத்தில் அதைத் தளர்த்தவும் தயங்கவில்லை என்பதற்காகச் சொல்லுகிறேன். ஸாமவேதப் பையன் இருபத்துநாலு வயஸில் நல்ல யௌவனத்தோடு இருந்தாலும், மஹாவாக்ய உபதேசத்துக்குரிய பக்குவத்தைப் பெற்றிருந்ததாலேயே அப்பா ரிஷி அவனுக்கு உபதேசம் தந்தார்.

‘எக்ஸெப்ஷன’லாக இருக்கிற சிலரைக் காட்டி ரூலை எடுக்கச் சொல்வது ஸரியில்லை. விதுரர் பிறந்த வழியை சாஸ்த்ரோக்தமாகப் பார்த்தால் ஞானத்துக்கு அவர் அர்ஹரில்லை [தகுதி பெற்றவரில்லை]. ஆனாலும் ஞானியாயிருந்தார். தர்மவ்யாதர் கசாப்புக் கடையே வைத்திருந்தார். ஆனாலும் ஞானம் பெற்றிருந்தார்! ஸூத்ர பாஷ்யத்தில் இவர்களுடைய எக்ஸாம்பிளை ஆசார்யாளே எடுத்துக்காட்டி4 அது அவர்களுடைய பூர்வ ஸம்ஸ்கார விசேஷத்தால் ஏற்பட்டது என்கிறார். ‘விட்ட குறை தொட்டக் குறை’ என்பது — ஜன்மாந்த்ரத்தில் பெருமளவு பக்குவம் பெற்று ஏதோ கொஞ்சம் தோஷமான கர்மாவும் பண்ணி அதனால் மறு ஜன்மா ஏற்படும்போது, விட்ட பக்குவஸ்திதி வந்து பிடித்துக் கொண்டு சுருக்க [சீக்கிரம்] அட்வான்ஸ்டான அத்யாத்ம நிலையில் சேர்த்துவிடும். அப்பேர்ப்பட்ட ஸம்ஸ்கார பலம் அபூர்வமாகச் சில பேருக்கே இருக்கும். அவர்களை அளவுகோலாக வைத்துப் பொதுச் சட்டம் பண்ண முடியாது.

ரொம்பவும் இரண்டுகெட்டான் ஸம்ஸ்காரமே பெற்றவர்களான ‘ஜெனரல் ரன்’னுக்குக் கர்ம யோகம்தான் பொதுச்சட்டம். அதை ஒழுங்காகப் பண்ணவே அவர்கள் சிரமந்தான் படுவார்கள். அப்படியிருக்கும்போது குருவி தலையில் பனங்காய் என்று அவர்களிடம் அஸாத்ய இந்திரிய நிக்ரஹம், மனோ நிக்ரஹம் தேவைப்படும் ஞான யோகத்தைக் கொடுப்பதால் என்ன ப்ரயோஜனம்?

அதனால்தான் ஸகல கர்மக் கடமைகளையும் உதறிவிட்டு, ஞான விசாரத்திற்கு என்று தன்னை அர்ப்பணித்து கொள்ளக்கூடிய நாலாவது ஆச்ரமக்காரனுக்கு மாத்ரம் [அத்வைத] ஸாதனையில் மூன்றாவதும் கடைசியுமான ஸ்டேஜை வைத்தது. வெளியில் நடக்கும் வீட்டுக் கார்யம், வயிற்றுப்பாட்டுக்கான கார்யம் முதலானவற்றின் பாரத்தைத் தள்ளிவிட்டு, உறவுப் பாசம், பணம்-பதவிப் பாசம் முதலானவைகளை உதறிவிட்டு ஸந்நியாஸியாக ஆத்ம விசாரமே ஹோல் டைம் கார்யம் என்று உட்கார்ந்தால்தான் கொஞ்சம் கொஞ்சமாக மனஸின் உள்கார்யமான எண்ணங்களையும் தள்ள முடியும்; உள்ளே ஏற்கெனவே பிடித்திருக்கும் பாசப் பாசியையும் உதற முடியும். ஒரு ஸ்டேஜ் வரை ஸத் கர்மா, ஸ்வதர்மம், கடைமைக் கார்யம் என்பதைச் செய்வதேதான் பழைய தப்புக் கர்ம அழுக்கைத் தேய்த்துக் கழுவ அவசியமாயிருக்கிறதென்றாலும், அப்புறம் அதுவும் ஒரு அழுக்காகி, மனஸை எண்ணம் நின்று போன சாந்தத்தில் கரைய விடாமல் பிடித்துக் கொள்ளும்; பிசுக்கு மாதிரி. அழுக்குப் போவதற்காகப் புளி, மண்ணு போட்டுப் பாத்திரத்தைத் தேய்க்கிறோம் என்பதால் அந்தப் புளியையும் மண்ணையும் அப்படியே அதில் ஈஷி வைத்து விடுவதில்லையல்லவா? அதுகளையுந்தானே அப்புறம் அலம்பிக் கொட்டிவிடுகிறோம். அப்போதுதான் பாத்திரம் பளிச்சென்று சுத்தமாக ஆகிறது. அப்படி, கர்மா எல்லாம் ஜாடாகப் போனால்தான் அந்தஃகரணம் சுத்தமாவது, பளிச்சென்று ஆவது. இதற்கு வெளிக்கார்யத்திலிருந்து முதலில் விடுபட வேண்டும். அதுதான் ஸந்நியாஸம். ஸந்நியாஸியான பிறகு உள் கார்யத்தையும் நிறுத்தி முக்தனாக வேண்டும். கார்யம் என்பதால் அசாந்திகள் எதுவுமில்லாமல் பரம சாந்தமான ஒரு ஆனந்த ஸாகரத்தில் அப்படியே கரைந்து போய் ப்ரஹ்மமாக இருந்து கொண்டிருக்க வேண்டும். மாறாத சாந்த நிலை அது. நிரந்தரமான சாந்தி. ஸதா தத்தளித்துக் கொண்டிருக்கும் நமக்கும் அப்படிப்பட்ட நிலை கிடைக்க முடியுமென்றால் அதை அடைய நாம் மாக்ஸிமம் ப்ரயாஸை பண்ணுவது கடமையல்லவா? இல்லாவிட்டால் நாம் இந்த லோக வாழ்க்கையில் என்ன படித்திருந்தாலும், என்ன பதவியில் இருந்தாலும், எந்தத் துறையில் கொடிகட்டிப் பறந்தாலும் அசடு என்றுதான் ஆகும்.


1 மாண்டூக்யமேவாலம் முமுக்ஷுணாம் விமுக்தயே

2 III.4.17

3 ஆச்சார்யாளுக்கு பிற்காலத்தில் ஸர்வஜ்ஞாத்மரே ஸுரேச்வரரின் மேற்பார்வையில் ஸ்ரீ காஞ்சி மடத்தின் அதிபரானார்.

4 I.3.38

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is ஆத்ம ஸாதனைக்கான யோக்யதாம்சம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  ஸந்நியாஸிக்கானதை ஸகலருக்கும் சொல்வானேன் ?
Next