வாழ்க்கை முறையை நமது மதம் கற்றுக் கொடுக்கிறது

வாழ்க்கை முறையை நமது மதம் கற்றுக்கொடுக்கிறது !

மணியன் - இப்போது தொலைக்காட்சியிலும் இராமாயணம் தொடராக வந்து

கொண்டிருக்கிறது. அதில் ராவணனை ராமர் ஜெயிக்கும் போது பல்வேறு தெய்வீக

சக்திகள் ராமருக்குத் துணையாக இருந்து உதவுவது போலக் காட்டப்படுகிறது.

இவ்வாறு காட்டுவதால் ராவணனுடைய திறமையின் மீது குழந்தைகளுக்குப்

பிரமிப்பும், அவனுடைய நிலை மீது அனுதாபமும் கூட ஏற்படுவதை நான்

காண்கின்றேன். இது சரியா? வால்மீகி இராமாயணம் இப்படித்தான் ராமரைச்

சித்தரிக்கிறதா?

சுவாமிகள் - ராவணன் கடுந்தவம் செய்து பல்வேறு வரங்களை வாங்கிக்

கொண்டான். அதில் முக்கியமானது அவனுடைய முடிவைப் பற்றியது. தனக்கு

ஒரு சாதாரண மனிதனைத் தவிர வேறு யாராலும் சாவு ஏற்படக்கூடாது என்ற

அவன் வேண்டிக் கொண்டான். அப்படியே வரமும் அளிக்கப்பட்டது. அதனால்

நாராயணன் அவனை வதம் செய்ய, சாதாரண மனித உருவிலேயே அவதரித்தார்.

அவர் ராவணனிடம் போர் செய்யும்போது சாதாரணமான சுத்தவீரனைப் போலவே

போரிட்டார். ஆனால் அவருடையநோக்கம் ஒரு நல்லகாரியத்துக்காக என்ற

போது, தெய்வீகமான உதவிகள் அவருக்கு சேர்ந்தன. இராமாயணத்தின் சிறப்பே,

கடவுள் ஒரு சாதாரண மனிதனாக வந்து பிறந்து, மனிதன் வாழவேண்டிய நெறி

முறைகளை வாழ்ந்து காட்டி, அதையே எல்லோரும் பின்பற்றினால் நன்மைகள்

பெறலாம் என்று எடுத்துச் சொன்னதை விவரிக்கிறது என்பதுதான். நாராயணன்

ஒரு மனிதனாக அப்படிச் செய்துகாட்டி, அவருக்குத் தெய்விக சக்திகள் துணை

செய்தன என்று வெளிப்படுத்தினால்தான், ஒவ்வொருசாதாரண மனிதனுக்கும்

அப்படி தானும் நன்மை பெறமுடியும் என்ற நம்பிக்கை உண்டாகும். நல்ல

நோக்கத்துக்குத் தெய்வீக சக்திகள் நிச்சயமாகத் துணை செய்யும் என்ற நீதியும்

புலப்படும். நாராயணன் பத்து அவதாரங்கள் எடுத்திருக்கிறார். மீனாகவும்,

ஆமையாகவும், பன்றியாகவும் கூட அவதரித்து எல்லா உயிர்களிலும் அவர்

நிறைந்திருப்பதை உணர்த்தி இருக்கிறார். கிருஷ்ணாவதாரத்தில் அவர் தனது

தெய்வீக சக்தியைத் தானே காட்டியிருக்கிறார். குழந்தையாக இருக்கும்போதே,

தாய் யசோதை வாயில் அனைத்துலகமும் இருப்பதைக் காட்டியிருக்கிறார்.

பின்னால் விசுவரூபம் எடுத்துத் தன்னை அர்ஜுனனுக்கு உணர்த்தி இருக்கிறார்.

கீதையில் 'சகலமும் நானே' என்று வெளிப்படையாகவே கூறி இருக்கிறார். அது

அந்த அவதாரத்தின் சிறப்பு. ஆனால் ராமாவதாரத்தின் சிறப்பு, அவர் நம்மைப்

போல் ஒருவராக இருந்து, தாய் - தந்தை - சகோதரன் - மனைவி - நண்பன் இப்படி

ஒவ்வொருவரிடமும் ஒருவன் எப்படிப் பழகவேண்டும் என்ற நெறிமுறையை

வாழ்ந்து காட்யடிதை எடுத்துச் செல்லுவதுதான். அதனால் வால்மீகி இராமாயணம்

நாரயணனை அப்படி எடுத்துக் காட்டிப் பெருமைப்படுத்தியது.

சுபாஷிணி - விபீஷணன் நல்லவர்களுக்குத் துணை போனான். அவன்

தர்மம் ஜெயிக்க வேண்டும் என்பதற்காகப் பழியையும் ஏற்றுக் கொண்டான்.

அவனை ராவணன் குலத்துரோகி என்று சொல்லுகிறான். பாமர மக்களில் சிலரும்

கூட விபீஷணனைப் பற்றி அவ்வாறு நினைக்கிறார்கள். இது சரியாகுமா?

சுவாமிகள் - ராவணன் - கும்பர்கர்ணன் ஆகியோரின் சிறப்பைப் பற்றி நாம்

சிந்தித்துப் பார்க்கவேண்டும். வைகுந்தத்தில் பகவானுக்கு காவலாக இருந்து சேவை

செய்யும் பேறு பெற்ற இவர்கள், சாபத்தின் காரணமாகப் பூமியில் வந்து

பிறந்தார்கள். மூன்று பிறவிகளில் இரணியன் - இரணியாட்சகனாகவும், ராவணன் -

கும்பகர்ணனாகவும், சிசுபாலன் - தந்தவக்கிரனாகவும் பிறந்த நாரயாணனை

நிந்தனை செய்து, நாராயணனாலேயே வதம் செய்யப்பட்டு மீண்டும்

வைகுந்தத்துக்குத் திரும்பி வந்தார்கள். அதனால் அவர்களுடைய பிறவி, செயல்,

முடிவு எல்லவாற்றுக்கும் ஒரு பின்னணியான காரணம் இருந்தது. அதனாலேயே

அவர்களுடைய எண்ணம், செயல் ஆகியவற்றிலும் ஒற்றுமையை நாம் பார்க்க

முடிகிறது. ஆனால் விபீஷணன் இப்படிப் பிறந்தவன் அல்ல. அவர்களுடன்

பிறந்திருந்தாலும் பண்புகளால் உயர்ந்தவன். அவன் பிரம்மபுத்திரன். அதனால்

அவன் நியாய வழியில் நல்ல பண்புகளுடனே வாழ்ந்தான். அவனால்

ராவணனுடைய தகாத செயலுக்குத் துணைபோக முடியவில்லை. ராமர்

நாராயணனுடைய அவதாரமே என்று அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

அதனால் அவரிடம் விபீஷணன் சரணாகதி அடைந்து நல்ல வழியில் சேர்ந்து

கொண்டான். இதில் நேர்மைக்கு முரணானது எதுவும் இல்லை.

மேலும், இந்த மூன்று சகோதரர்களும் மனிதனின் ¢ அடிப்படையான மூன்று

குணங்களை நமக்கு எடுத்துக் காட்டுகிறார்கள். ராவணன் பராக்ரமசாலியாக

வீரத்தையும் திறமையையுமே எண்ணிப் பெருமைப்படுகிறவனாக

ரஜோகுணத்துக்குச் சான்றாக விளங்குகிறான். கும்பகர்ணன் நிறைய சாப்பிடுவதும்,

மது அருந்துவதும், தூங்குவதுமாக, தமோ குணத்தை நமக்கு எடுத்துக்

காட்டுகிறான். விபீஷணனோ சாத்வீகமாக, நல்ல பண்புகளின் உருவமாக

சத்வகுணத்தை நமக்க எடுத்துக் காட்டுகிறான். மனிதனுக்கு வாய்க்கக் கூடிய மூன்று

பண்புகளை இந்த மூன்று பாத்திரங்களும் நமக்கு எடுத்துக் காட்டுகிறார்கள். சத்வ

குணத்தை வாழ்க்கையில் உணவு, சிந்தனை, செயல் ஆகிய ஒவ்வொன்றிலும்

கடைப்பிடிப்பதே உய்வடைவதற்கு வழி. அதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும்

விபீஷணனும் அவ்வாறே வாழ்ந்து காட்டுகிறான். இதை நாம் போற்றவேண்டியது

தான் முறை. அண்ணனைத் தம்பி காட்டிக் கொடுத்து விட்டான் என்று சொல்வதும்,

'குலத்துரோகி'என்று குறிப்பிடுவதும் நம்முடைய சிந்தனையிலுள்ள குழப்பத்தையே

காட்டுகிறது. ராமர் இதைப்பற்றி மிகத் தெளிவாக இருப்பதனால்தான் அவனை

ஏற்றுக் கொள்கிறார். பரம்பரையாக அவனே இலங்கையை ஆளத் தகுதி உள்ளவன்

என்று கருதி அவனுக்கு அரசபதவியை அளித்து முடிசூட்டுகிறார்.

பாலச்சந்திரன் - தாங்கள் இந்தியா முழுவதும் புனித யாத்திரை போய்

வந்திருக்கிறீர்கள். அப்படிப் போன போது பலவகையான மக்களையும்

சந்தித்திருக்கிறீர்கள். இன்றைய இந்தியாவைப் பற்றித் தங்கள் கருத்தென்ன?

அவர்கள் நல்ல எதிர்காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்களா?

அவர்களுடைய சிந்தனை, நோக்கம் ஆகியவற்றில் தெளிவு இருக்கிறதா?

சுவாமிகள்- இந்தியாவில் பலதரப்பட்ட மக்களும் என்னைச் சந்தித்திருக்கிறார்கள்.

அவர்களில் பல பெயர் பலவிதமான குறைகளை என்னிடம் சொல்லி

இருக்கிறார்கள். பலவிதமான சூழ்நிலைகளையும் என்னால் கணிப்பு செய்ய

முடிந்திருக்கிறது. இந்தப் பாரத தேசத்துக்கு நல்ல எதிர்காலம் நிச்சயமாக உண்டு.

ஆனால் அதன் மக்கள் நல்ல முறையில் வாழ முற்பட்டால் நிச்சயமாக பெருமை

பெறுவார்கள். அவர்களுடைய அறிவு, திறமை ஆகியவற்றில் குறையே இல்லை.

ஆனால் சுயநலம் குறுக்கிடுவதால் அதனால் கிடைக்கக் கூடிய பொது நன்மைகள்

தடைபட்டுப் போகின்றன, சுயநலம் இல்லாமல் பொதுவாகச் சமுதாயம் முன்னேற

வேண்டும் என்ற குறிக்கோளை நாம் ஒவ்வொரு வரும் எடுத்துக்

கொண்டோமேயானால், நிச்சயமாக நாட்டுக்கு நன்மை கிடைக்கும்.

எஸ்.எல்.எஸ் - சைவத்தைப் பின்பற்றும் சுவாமிகள் பலரும் 'நாராயணா'

என்று சொல்லுகிறார்கள். வைணவத்தைப் பின்பற்றும் சுவாமிகள் பலரும்

'நாராயணா' என்று சொல்லுகிறார்கள். வைணவத்தைப் பின்பற்றும் சுவாமிகள்

யாருமே 'நமச்சிவாயா' என்று சொல்லுவதில்லையே....? ஏன்?

சுவாமிகள் - துறவறம் பூணும் யாரும் அந்தநிலையில் நாராயணனின்

சொரூபம் என்றே கொள்ளப்படுகிறது. அதற்குண்டான சடங்குகளைச்

செய்யும்போதும் நாராயணா என்றே சொல்லுவார்கள். அதனால் பின்னால்

சந்நியாசிகள் யாருமே நாராயணா என்றே சொல்லுவது அடிப்படையாக

ஆகிவிடுகிறது. துறவிகள் இறைவனை உணர்ந்தவர்கள். அவர்கள் பேதம்

பார்ப்பதில்லை. அவர்களைப் பின்ப்பற்றுபவர்கள்தாம் பேதம் பார்த்துப் பூசலை

வளர்க்கிறார்கள்.

சிவராமன் - சைவ - வைஷ்ணவ பேதம் இன்ற நமது மதத்தில் பரவலாக

எங்குமே இருக்கிறதே? இதனால் வழிபாட்டிலும், வாழ்க்கை முறையிலும்

வித்தியாசங்கள் ஏற்பட்டு, நமது மதத்தின் ஒற்றுமை பிரிந்து குலைந்து போகிறதே?

இதைச் சரிப்படுத்த வேண்டாமா?

சுவாமிகள் - இந்த வித்தியாசம் பாமர மக்களிடம் இல்லை.

படித்தவர்களிடம் தான் இருக்கிறது. அவர்கள்தாம் நுட்பமாகப் பேதம் பிரித்து-

வித்தியாசம் பாராட்டுகிறார்கள். பாமரர்கள் ஒற்றுமை உணர்வுடன்தான்

வாழ்கிறார்கள். நெற்றியில் திருமண் அணிந்திருப்பார்கள். ஆனால் பிள்ளயார்

கோவிலில், சிவன் கோவிலில் வழிபட வருவார்கள். அவர்களுக்கூட கடவுள்

நம்பிக்கைதான் முக்கியம். நமது மதம் ஏதாவது ஒரு சுவாமியை தேர்ந்து கொண்டு,

இஷ்டதெய்வமாக வைத்துக் கொண்டு வழிபடு என்றுதான் சொல்லுகிறது. அதை

நம்பிக்கையுடன் சிரத்தையுடன் செய்தால் போதும். போகப் போக இத்தனை

வடிவங்களும் ஒரே தெய்வத்தின் அம்சங்களே என்பது புரிந்து விடும். ஒரே

மின்சாரம் பல்பாக எரிகிறது. குளிர் சாதனப் பெட்டியாக குளிர்ச்சியைக்

கொடுக்கிறது. மின்விசிறியாகக் காற்றைக் கொடுக்கிறது. அவை எல்லாவற்றுக்கும்

அடிப்படை ஒன்றுதான் என்பது விஞ்ஞானம் படித்தவர்களுக்குத் தெரியும்.

மெய்ஞான விஷயமும் அப்படித்தான். அனுபவம் ஏற்பட, ஓர் உருவம் - ஒரு

நாமம் ஒன்று மில்லாது எலலாவற்றிலும் நீக்கமற நிறைந்து நிற்பவரே பரம்பொருள்

என்பது புரிந்து விடும். அப்புறம் வித்தியாசத்துக்கே இடமில்லை.

வெங்கட்ராமன் - நமது மதத்தில் பலவிதமான சடங்குகள் இருக்கின்றன.

அவற்றைப் பல்வேறு பெரியவர்கள் ஒவ்வொரு விதமாகக் கருத்து சொல்லி

விளக்குகிறார்கள். இதனால் குழப்பமும் ஏற்படுகிறது. குறிப்பாக இளைய தலை

முறையினர் இதை ஏற்றுக் கொள்வதில்லை. இவற்றுக்கு ஒரு விஞ்ஞான ரீதியான,

தர்க்கரீதியான பின்னணியை எடுத்துச் சொல்லிப் புரியவைப்பதால் நல்லது என்று

கொள்ள வேண்டிய இருக்கிறது. அப்படிப் பாகுபாடு செய்து கொடுக்க முடியுமா?

சுவாமிகள் - இந்துமதம் ஒருஜாதி, ஒரு வகுப்பினருக்காக ஏற்பட்டதல்ல.

அவரவருடைய தகுதிக்கேற்ப ஒவ்வொரு தொழிலை எடுத்துக் கொள்ளுகிறார்கள்.

அதை அவர்கள் பெரியார் சொன்னபடி செவ்வனே செய்து வருகிறார்கள். அந்தந்த

தொழிலுக்கு அவரவருக்குத் தகுதி இருக்கிறது. அதை அடிப்படையாக வைத்துச்

செய்தால் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள்.இதுவே இந்துமதத்தின் அடிப்படை.

இதைக் கற்றுக் கொண்டு செய்ய ஆரம்பிக்கும் நாம் மூன்றாம் வகுப்பு படிக்கிற

பையன் மாதிரி. அவன் அந்த வயதில், அறஞ் செய விரும்பு, ஆறுவது சினம்

என்று படிக்கிறான். அப்போது அதன் முழுப்பொருளும், அனுபவ உணர்வும்

அவனக்குப் புரிவதில்லை, புரியவேண்டிய அவசியமும் இல்லை. ஆனால் முப்பது

வயதான பிறகு, வாழ்க்கையில் அவற்றைக் கடைப்பிடித்த அனுபவத்தைக்

கொண்டு அதன் நன்மைகளைப் புரிந்து கொள்ளுகிறான். பெரியோர் அமைத்துக்

கொடுத்த முறைகளும், சடங்குகளும் நம்மைப் பக்தி மார்க்கத்தில் படிப்படியாக

ஈடுபடுத்துவதற்காகத்தான். அதற்கு அர்த்தம் தெரியவேண்டும் என்ற அவசியம்

இல்லை. காலப்போக்கில் அவற்றின் தத்துவப் பின்னணி நமக்குப் புரியும்.

அதற்கேற்றபடி மனப்பக்குவமும் வந்துவிடும். வாழ்க்கையில் ஒவ்வொவன்றையும்

நாம் அர்த்தம் தெரிந்து கொண்டு செய்வதில்லை. ஆனால் பிறகு அனுபவத்தில்

புரிந்து கொள்கிறோம். நம்முடைய வாழ்க்கை முறையை, தர்மத்தை நமது மதம்

கற்றுக் கொடுக்கிறது. அதன்படி வாழக் கற்றக் கொண்டால் போதும், நிச்சயமாக

வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும்.

வெங்கட்ராமன் - மனுசாஸ்திரம் என்பது பல நூற்றாண்டுகளுக்கு முன்னால்

எழுதி வைக்கப்பட்டது. அப்போது இருந்த வாழ்க்கை முறை வேறு. இப்போது

உள்ள வாழ்க்கை முறை வேறு. ஆகையால், மனுசாஸ்திரத்தை அப்படியே

பின்பற்றவேண்டியது அவசியமா? இன்றைய நிலைக்கு ஏற்ப மாற்றிக்

கொள்ளலாமா? அதற்குத் தங்களைப் போன்றவர்கள் வழிகாட்ட முடியுமா?

சுவாமிகள் - மனுசாஸ்திரம் தனிநபருக்காகவோ, சூழ்நிலைக்காகவோ

செய்யப்பட்டது அல்ல அன்றைய நிலைக்கு ஏற்ப அமைக்கப்பட்ட அவசரச்

சட்டமும் அல்ல. உலகம் உள்ள வரையில் மனிதகுலம் உள்ளவரையில் அவர்கள்

எப்படி நல்ல முறையில் வாழ்க்கை நடத்த வேண்டும் என்று கற்றுக்

கொடுப்பதற்காக அமைக்கப்பட்டது. நல்லவர்கள் நல்ல முறையில் வாழ்வது

என்பது நிலையாக உள்ளது. ஆகையால் மனுசாஸ்திரத்தின் விதிகளும்

நிலையானதுதான். அதை மாற்ற முயலக்கூடாது.

ஜயப்பன் - தசாவதாரத்தில் புத்தர் என்று ஒர் அவதாரம் உண்டு என்று

சொல்லுகிறார்கள். அது நம் சரித்திரப் புத்தகததில் வரும் கௌதம புத்தரா?

அப்படியானால் அவருடைய மதம் வேறாக இருப்பது ஏன்?

சுவாமிகள் - இந்து மதத்தைப்போல பௌத்த மதத்திலும் மறுபிறவிக்

கொள்கையில் தீவிரமான நம்பிக்கை உண்டு. புத்தஜாதகக்கதைகள் என்ற

அவர்களுடைய மதநூலில் பல புத்தர்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

நம்மைப் பொறுத்தவரையில் புத்தர் என்று ஒரு மகான் இருந்ததாகச்

சொல்லப்படுவது மட்டுமே தெரியும். புத்தர் என்ற அவதார புருஷர் இருந்ததை

இந்துமதம் அவதார வடிவமாகக் குறிப்பிடுகிறது. இதைச் சரித்திரத்துடன் சேர்த்துப்

பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

மோகன் - நம்முள்ளே ஜீவாத்மா இருக்கிறது. அது பரமாத்மாவின் அம்சம்

என்று சொல்லுகிறார்கள். நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் ஜீவாத்மாவையும்,

அதன் மூலம் பரமாத்மாவையும் பாதிக்கிறதா? இதன் தத்துவம் என்ன?

சுவாமிகள் - இது மிகப் பெரிய தத்துவம். இதை இப்படிக் குறுகிய நேரத்தில்

விளக்கிச் சொல்லிவிட முடியாது. இருந்தாலும் குறிப்பாகச் சொல்லுகிறேன். நமது

மதத்தில் வழிபாட்டு முறைகளையும், அதன் மூலம் கிடைக்கும் உணர்வையும்

மூன்று படிகளாகச் சொல்லுகிறார்கள். முதலாவது சடங்குகள் இதில் சூர்யன்,

சந்திரன், இந்திரன் போன்ற தேவதைகளை வழிபடுகிறோம். அடுத்தது மதம். இதில்

முறைப்படி சிவன், விஷ்ணு, பிள்ளையார், முருகன், சக்தி போன்ற தெய்வ

வடிவங்களை வழிபடுகிறோம். மூன்றாவது வேதாந்த உணர்வு. ஜீவாத்மா

நம்முள்ளே இருக்கிறது. ஆனால் ஜீவன் செய்வது எதுவுமே அதற்குப் போய்ச்

சேராது. அதன் அனுபவங்களை ஜீவாத்மா சாட்சியாக இருந்து பார்த்துக்

கொண்டிருக்கிறது. அவ்வளவுதான். பஞ்சமாபாதங்கள் என்று சொல்வார்கள்.

தங்கத்தைத் திருடுவது, பிராமணனைக் கொலை செய்வது. குருவின் மனைவியை

இச்சிப்பது, கள் குடிப்பது என்ற நான்கு பாதகமான செயல்களைச் சொல்லிவிட்டு,

ஐந்தாவதாக இப்படிச் செய்பவருடன் கூட இருந்தாலே பாவம்தான் என்று

சொல்லுகிறார்கள். ஆகையால் ஜீவாத்மா கூட இருப்பதால், ஜீவனும் சுத்தமான

எண்ணங்களுடைய, சுத்தமான வாழ்க்கை நடத்தவேண்டும். அதவே முறையான

நெறியுடன் அமைந்த வாழ்க்கை, ஜீவன் செய்யும் பாவங்களின் பலனை அதுவே

அனுபவித்தாக வேண்டும். அது பரமாத்மாவுக்கு போய்ச் சேரவே சேராது.

கடவுளின் தொழிலாகப் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்றைத்தான்

சொல்லுகிறோம். இவற்றை ஒட்டிய அறிவைத்தான் கடவுள் நமக்குக் கொடுப்பார்.

அதைச்சரியாகப் பயன்படுத்துவது நம்முடைய கடமை. கடவுள் அதில் குறுக்கிட

மாட்டார்.

பாலச்சந்திரன் - ஜாதகப் பொருத்தம் பார்த்துக் கல்யாணம் செய்து

கொடுக்கிறார்கள். அதுபல தடவைகளில் சரியாக அமையாமல் போய்விடுகிறது.

அப்படிப் பொருத்தம் பார்க்க வேண்டியது அவசியந்தானா? மனப்பொருத்தம்

இருந்தால் போதாதா?

சுவாமிகள் - மனப்பொருத்தம் அவசியந்தான். ஆனால் அது மட்டும்

இருந்தால் போதாது. மனப்பொருத்தம் சிலகாலம் பழகி நாமே தீர்மானிப்பது. அது

நம்முடைய வாழ்க்கை முழுவதற்கும் அளவுகோல் என்று எடுத்துக் கொள்ள

முடியாது. மனப்பொருத்தம் பார்த்து மணந்து கொள்ளும் வெளிநாட்டினர்

பலருடைய வாழ்க்கை சரிவர அமையாமல் விவாகரத்தில் முடிவதில்லையா?

ஜாதகப்படி இருவருடைய வாழ்க்கையும் சேர்ந்து நல்லமுறையில் அமைகிறதா

என்று பார்க்க வேண்டியது மிகமுக்கியம். அப்படிச் சேர்ந்தாலும் மூலம், ஆயில்யம்

என்ற நட்சத்திரங்களைவைத்து தள்ளிவிடுகிறார்கள். அப்படித் தள்ளவேண்டிய

தில்லை. உரிய பிராயச்சித்தம் செய்து கொண்டாலே போதும். ஆனால் கோத்திரம்

முக்கியமாகப் பார்க்கவேண்டும். அது ஒரு குறிப்பிட்ட மகரிஷியின் வழிவந்த

வம்சத்தைக் காட்டுவது. அப்படியே ஒரே கோத்திரத்தில் இருப்பவர்கள் விவாக

சம்பந்தம் செய்து கொள்வது கூடாது.

லட்சுமி - வரதட்சிணை வாங்கிக் கொண்டு கல்யாணம் செய்கிறார்களே? அது

நியாயாமா? அது சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா?

சுவாமிகள் - வரதட்சிணை வாங்குவது என்பது சமூகப் பழக்கத்தில்

ஏற்பட்டதுதான். இது சாஸ்தரத்தில் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை.

பிள்ளைகளைப் பெற்றவர்கள் ஒருக்காலும் வரதட்சிணை வாங்குவதில்லை என்று

தீர்மானம் செய்து கொள்ளவேண்டும். மற்ற விஷயங்கள் திருப்தியாக இருந்தால்

கல்யாணாத்தை முடிக்க முன்வர வேண்டும். வரதட்சணைப் பழக்கமும்,

கல்யாணங்களை டாம்பீகமாக நடத்துகிற வழக்கமும் போகவேண்டும். நம் இந்த

இரண்டிலும் இன்று பெண்குழந்தைகள் பல குடும்பங்களில் கல்யாணம் செய்து

கொள்ள முடியாமல் மனக்குறையுடன் நிற்கிறார்கள். பணக்காரர்கள் தங்கள் ஏழை

பந்துக்களின் குழந்தைகள் விவாகத்துக்குத் தாராளமாகத் திரவிய உதவி செய்ய

வேண்டும். உரியகாலத்தில் பெண் குழந்தைகள் கல்யாணம் செய்து கொண்டு,

பெண்களுக்குரிய தர்மதத்தையும், சமூகத்தையும் பாதுகாக்கவேண்டும். இதுவே

என் ஆசை.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is நம்புங்கள் நல்லவை நடக்கும்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is  மங்கை பத்திரிகைக்கு அளித்த பேட்டி
Next