எட்டாம் நூற்றாண்டில் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

கடிகா ஸ்தானம் பற்றி உள்ள இன்னொரு கல்வெட்டு எட்டாம் நூற்றாண்டிலும் அது சீர்சிறப்புடன் இருந்ததைக் காட்டுகிறது. ‘ஸெளத் இண்டியன் இன்ஸ்க்ரிப்ஷன்ஸ்’ நாலாவது வால்யூமில் ப்ரசுரமாயுள்ள கல்வெட்டு.) இந்தக் கல்வெட்டு காஞ்சீபுரம் வைகுண்டப் பெருமாள் கோயிலில் இருப்பது.

ஒரு ஸமயம் பல்லவர்களில் ஸிம்ஹாஸனம் ஏறிய மத்யப் பிரிவினரின் வம்சம் ஸந்ததி இல்லாமல் முடிந்துபோய்விட்டது. காஞ்சீபுரத்தில் ராஜா இல்லாமல் அராஜகம் ஏற்பட்டுவிட இருந்தது. அப்போது கிளை வம்சத்தில் ஹிரண்யவர்மா என்று ஒரு குறுநில மன்னன் இருந்தான். காஞ்சீபுரத்தின் ப்ரமுகர்கள் ஒன்று சேர்ந்து அவனிடம் போய் அவனுடைய பிள்ளை பரமேச்வர வர்மாவைக் காஞ்சியில் பட்டாபிஷேகம் செய்துகொண்டு ராஜாவாக இருப்பதற்கு அனுப்பிவைக்க வேண்டுமென்று விஞ்ஞாபித்துக் கொண்டார்கள். அவன் அப்படியே அனுப்பிவைத்தான். அப்புறம் வைதிக ச்ரேஷ்டர்கள் காஞ்சீபுரத்தில் பரமேச்வரவர்மாவுக்கு ராஜ்யாபிஷேகம் செய்துவைத்து நந்திவர்ம பல்லவன் என்ற பட்டத்தைக் கொடுத்தார்கள். இதைச் சொல்லும் அந்தக் கல்வெட்டு, முதலில் ஹிரண்யவர்மாவிடம் தூதுபோன ப்ரமுகர் கோஷ்டி, பிற்பாடு பரமேச்வர வர்மாவுக்குப் பட்டாபிஷேகம் செய்த வேத ப்ராமண கோஷ்டி ஆகிய இரண்டிலுமே காஞ்சியிலிருந்த கடிகையின் ஆசிரியர்கள் இருந்ததாகச் சொல்கிறது. இதிலிருந்து கடிகாஸ்தானத்தின் உசந்த ஸ்தானமும் அதன் அத்யாபர்களுக்கு இருந்த மதிப்பும் தெரிகிறது.

‘விக்ரமாதித்யன்’, ‘ஸத்யாச்ரயன்’ என்ற பட்டப் பெயர்களை பாதாமி (வாதாபி) யிலிருந்து ஆட்சி செய்த சாளுக்கியர்கள் வைத்துக்கொள்வார்கள். இவர்களுக்கும் பல்லவர்களுக்கும் யுத்தங்கள் நடந்ததுண்டு. ஜயாபஜயங்கள் மாறிமாறி வரும். விக்ரமாதித்ய ஸத்யாச்ரயன் என்ற பெயருடைய ஒருவன் பண்ணிய தர்மத்தைப் பற்றிய கல்வெட்டு காஞ்சி கைலாஸநாதர் கோயில் மஹா மண்டபத்துக்கு மேற்கே உள்ள தூண் வரிசைகளில் வடக்கேயுள்ள ஸ்தம்பத்தில் இருக்கிறது. அதிலே காஞ்சீபுரத்து கடிகையில் இருப்பவர்களை “மஹா” ஜனங்கள் என்று மரியாதையாகச் சொல்லி, “இந்த தர்மத்துக்கு ஹானி செய்கிறவர்கள் கடிகை மஹா ஜனங்களை ஹத்தி செய்யும் பாபத்துக்கு ஆளாவார்கள்” என்று (ஸம்ஸ்க்ருதத்தில்) சொல்லியிருக்கிறது*.


*எபிக்ராஃபிகா இண்டிகா – மூன்றாம் பகுதி, பக். 360.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is கோயிலும் கடிகையும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  சாஸனத்தின் அமைப்பு
Next