சாஸனத்தின் அமைப்பு : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

பொதுவாக ஒரு ராஜசாஸனமிருந்தால் அதிலே மூன்று பகுதிகள் இருக்கும். முதல் பகுதிக்கு ‘ப்ரசஸ்தி’ என்று பேர். புகழ்மொழி என்று அர்த்தம். சாஸனத்தின் மூலம் ஏதோ ஒரு தானம் செய்து, அது நிரந்தரமாக இருக்கச் செய்கிற ராஜாவுடைய மூதாதையர்களின் பெருமை, அவனுடைய ஸொந்தப் பெருமை முதலானதுகள் ப்ரசஸ்தியில் கூறப்பட்டிருக்கும். அடுத்ததான மத்யப் பகுதிதான் தான விவரத்தைச் சொல்வது. இன்னாருக்கு, இன்ன ஸமயத்தில், இன்னதானம் செய்யப்படுகிறது என்று அதில் விவரித்திருக்கும். கடைசியில் ‘வ்யாஸ கீத ச்லோகங்கள்’ என்ற பகுதி. அதிலே தற்போது ஏற்படுத்தி வைத்த இந்த என்டோமெண்டை எந்நாளும் தர்மகர்த்தாக்கள் நேர்மையாக நடத்தி வைக்கவேண்டும் என்று உணர்த்துவதற்காக, ‘இந்த சாஸன ப்ராகாரம் நடத்திவைப்பவர்கள் இப்படியிப்படியான புண்யங்களை அடைவார்கள் என்றும், அதற்குக் குந்தகம் செய்பவர் இப்படியிப்படியான பாபங்களுக்கு ஆளாவார்கள்’ என்றும் சொல்லியிருக்கும். பொதுவாக, “கங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவம் ஸம்பவிக்கும்” என்று – இதுதான் பாபங்களுக்கெல்லாம் உச்சம் என்கிற கருத்தில் – சொல்லியிருக்கும். அதற்குப் பதிலாக கடிகை மஹாஜனங்களைக் கொலை செய்வதைச் சொல்லியிருப்பதிலிருந்தே அவர்களுக்கு இருந்த மஹா மதிப்பு மரியாதைகள் தெரிகின்றன.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is எட்டாம் நூற்றாண்டில்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஏழாயிரம் மாணவர்கள்
Next