ஏழாயிரம் மாணவர்கள் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இன்னொரு கல்வெட்டிலிருந்து ஒரு கடிகை எத்தனாம் பெரிசாக,ஒரு ஊர் மாதிரி, இருந்திருக்கிறது என்று தெரிகிறது. ஆச்சரியமாகக்கூட இருக்கிறது. ஏழாயிரம் பேர் ஒரே கடிகையில் படித்திருக்கிறார்கள்! வடார்க்காடு குடியாத்தத்துக்கு அருகில் திருவல்லம் கிராமத்தில் நீவா என்ற ஆற்றின் மத்தியிலுள்ள பாறையில் இந்தக் கல்வெட்டு இருக்கிறது. அது எட்டாம் நூற்றாண்டின் முன்பாதியைச் சேர்ந்ததென்று கண்டுபிடித்திருக்கிறார்கள். ‘ஸெளத் இண்டியன் இன்ஸ்க்ரிப்ஷன்ஸ்’, முதல் வால்யூம், முதல் பார்ட்டில் இது ப்ரசுரமாயிருக்கிறது. அநேகமாகக் கல்வெட்டுக்கள் எல்லாமே ஒருத்தன் செய்த தான தர்மத்தைத்தான் சொல்வதற்கிணங்க இதுவும் ஒரு தர்மத்தைச் சொல்லி, “இந்த தர்மத்துக்கு ஹானி உண்டாக்குபவன் கடிகையிலுள்ள ஏழாயிரம் பேரையும் கொன்ற பாபத்துக்கு ஆளாவான்” என்கிறது.

பிரஸித்தி உடையவையாக நந்திவர்ம பல்லவனின் “காசாகுடிச் செப்பேடுகள்” என்று உண்டு. நான் முன்னே சொன்ன புஸ்தகத்தின் இரண்டாவது வால்யூம், மூன்றாம் பார்ட்டில் போட்டிருக்கிற இந்த சாஸனங்களில் ஒன்றிலிருந்து ‘பூதேவர்’கள் எனப்படும் பிராமணர்களிடம் எத்தனை பக்தி விச்வாஸத்துடன் ‘க்ஷத்ர சூடாமணி’களாயிருந்த ராஜாக்கள் கடிகைகளைக் கட்டிக்கொடுத்திருக்கிறார்களென்று தெரிகிறது. கடிகா ஸ்தான ஆசார்யர்கள் தனியாக குருகுலம் நடத்தாவிட்டாலும், சதுர்வேத பண்டிதர்களாகவும், தர்ம கர்மங்களில் சிறந்தவர்களாகவும்,-‘தேவ த்விஜ’ என்று தெய்வத்தோடு சேர்த்துச் சொல்லி ஸத்காரம் செய்யத்தக்கவர்களாகவும் இருந்திருக்கிறார்களென்று இதிலிருந்து தெரிகிறது.

ஏழாயிரம் மாதிரியே, மூவாயிரம் பேர், ஓராயிரம் பேர் படித்த கடிகைகளைப் பற்றியும் தெரியவருகிறது. வடார்க்காடு செய்யாறு தாலூகாவில் ப்ரம்மதேசம் என்ற கிராமமிருக்கிறது. ப்ரம்மதேயம்’ என்றாலே பிராம்மணனுக்கு தானம் தந்தது என்றுதான் அர்த்தம். அந்த கிராமத்தில் சந்த்ர மௌளீச்வரர் ஆலயம் இருக்கிறது. அதன் கர்ப்பக்ருஹ வடவண்டைச் சுவரில் உள்ள கல்வெட்டில், “த்ரைராஜ்ய கடிகாமத்யஸ்த மூவாயிரவர்” என்று வருகிறது. “மூவாயிரவர்” என்ற தமிழ் வார்த்தை, அந்த கடிகையில் தொடர்ச்சியாக மூவாயிரம் பேர் படித்து, இவ்விஷயம் ஸர்வஜனங்களின் கவனத்தையும் கௌரவத்தையும் காட்டுகிறது. இதேபோல் இன்னொரு சாஸனத்தில் “கடிகை ஏழாயிரவர்” என்றம் தமிழில் வருகிறது. ஆயிரம் பேர் படித்த ஒரு கடிகையை “கடிகா ஸஹஸ்ரம்” என்று ஒரு இடத்தில் குறிப்பிட்டிருக்கிறது.

ஏழாயிரம், மூவாயிரம் என்பதெல்லாம் கொஞ்சம் மிகைபடக் கூறியது என்றும் சிலர் அபிப்ராயப்படுகிறார்கள். அப்படியே வைத்துக்கொண்டாலும் இதில் பாதியாவது இருந்திருந்தால்தானே இந்த அளவுக்கு மிகைப்படுத்தியிருக்கமுடியும்? இப்படி நிச்சயமாக ஆயிரம் பேருக்கு மேல் ஒரே இடத்தில் சேர்ந்து முக்யமாக வேத சாஸ்திரங்களைப் படித்தார்களென்றாலே பெரிய விஷயம்தானே?

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is சாஸனத்தின் அமைப்பு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஆந்திர, கர்நாடகங்களில்
Next