ஆந்திர, கர்நாடகங்களில் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

காஞ்சீபுரத்தில்தான் முக்யமாக கடிகை ரொம்பவும் உன்னதமுறையில் போஷித்து வளர்க்கப்பட்டிருக்கிறது என்றாலும், (கி.பி.) ஆறாம் நூற்றாண்டிலேயே வடக்கே, தெலுங்கு தேசத்தில் கோதாவரி ப்ராந்தியங்களிலும் ராஜாக்கள் கடிகைகள் ஸ்தாபித்ததாகத் தெரிகிறது. அங்கே துணி (Tuni) தாலுகாவில் சிக்குள்ள அக்ரஹாரம் என்ற இடத்தில் ஒரு குளம் வெட்டுகிறபோது ஒரு தாம்ரசாஸனம் (செப்பேடு என்பது) அகப்பட்டது. அது விஷ்ணு குண்டின வம்சத்தைச் சேர்ந்த இரண்டாவது விக்ரமேந்த்ரவர்மாவினுடையது, அவன் ‘முறைப்படி கடிகை ஸ்தாபித்து புண்யக் குவியலை ஸம்பாதித்துக் கொண்டான்’ என்று அதில் இருக்கிறது. யதாவிதி விநிர்மாபித கடிகாவாப்த புண்ய ஸஞ்சயஸ்ய.”

கர்நாடக தேசத்தில் பதினொன்றாம் பன்னிரண்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களிலே ‘கடிகை’ என்ற பெயரைச் சொல்லி, அந்தப் பெயருள்ள கல்விச்சாலைகள் அங்கேயிருந்ததைக் கூறியிருக்கிறது. ‘எபிக்ராஃபிகா கர்நாடகா’ வால்யூம்களைப் பார்த்தால் தெரியும்.

பன்னிரண்டாம் நூற்றாண்டின் பின்பாதியில் ஆட்சி நடத்திய த்ரிபுவன மல்லிதேவ சோள மஹாராஜன் என்பவனுடைய கல்வெட்டு தும்கூர் ஜில்லாவிலுள்ள காமகொண்டன ஹள்ளியில் ஹேமவதி தொட்டப்பா ஆலயத்தில் இருக்கிறது. இதில் ஹெஞ்சாரப்பட்டணம் என்ற இடத்திலிருந்த கடிகா ஸ்தானத்தில் ப்ரதிஷ்டையாகியிருந்த நொணம்பேச்வர ஸ்வாமி ஸந்நிதானத்தில் ஒரு கிராமதானம் நடந்ததாகக் கன்னட பாஷையில் சொல்லியிருக்கிறது. “ஸ்ரீமத் ஹெஞ்ஜாரப்பட்டணத மஹா கடிகா ஸ்தான ஸ்ரீ நொணம்பேச்வர தேவர ஸந்நிதானதல்லி” என்று சொல்லிக்கொண்டு போயிருக்கிறது.

மைஸுரில் மண்டயம் என்கிறோமே, அந்தப் பகுதியில் ஹளேகெரெ என்ற இடத்தில் சிவமாரமன் என்று பெயருடைய ஒரு ப்ருத்வி கொங்கணி வம்ச மஹாராஜாவின் சாஸனம் கிடைத்திருக்கிறது. அது, ஒரு நிலதானத்தைப் பற்றிச் சொல்லுகிறது. அதில் (தானம் யாரைக் குறித்துச் செய்யப்படுகிறதோ அந்த) doneeயின் பெயர் மாதவ் சர்மன் என்றும், அவன் ஹரிதஸ கோத்ரத்தைச் சேர்ந்தவன் என்றும் சொல்லி, இவற்றைச் சொல்வதற்கு முன்பாகவே அவனைப் பெருமைப்படுத்தும் விதத்தில் அவன் “கடிகையைச் சேர்ந்த ஆயிரம் பேரில் ஒருத்தன்” என்று குறிப்பிட்டிருக்கிறது: கடிகா ஸஹஸ்ராய ஹரிதஸ கோத்ராய மாதவ சர்மணே” (Ep. Kar-Mandya Taluk/ vol 111, p. 108)

சென்னராய பட்டணத்தைச் சேர்ந்த 1442-வது வருஷத்திய கல்வெட்டு ஒன்று, அதாவது பதினைந்தாம் நூற்றாண்டின் மத்திக்கு வந்துவிட்டோம். கி.பி. நாலாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கர்நாடகத்திலிருந்து காஞ்சீபுரம் கடிகைக்கு வந்த மயூரவர்மாவின் காலத்திலிருந்து ஆயிரத்து நூறு வருஷம் தள்ளி வந்துவிட்டோம். இப்போது கர்நாடகத்திலேயே அநேக கடிகைகள் ஏற்பட்டுவிட்டன. அவற்றிலொன்று, இந்த சிலாசாஸனத்தின் காலத்தை ஒட்டிய ஒரு துந்துபி வருஷ பாத்ரபத மாஸத்தில் ஸ்தாபிக்கப்பட்டதை அது தெரிவிக்கிறது. “கடிகா ஸ்தானம்” என்பதைவிட இன்னும் பக்தி மரியாதைகளுக்கு உகந்ததாக “கடிகா ()ச்ரமம்” என்று சொல்கிறது. அதாவது, ஒரு குரு மட்டும் தன் ஆச்ரமத்தில் ரொம்பவும் தூய்மையுடன் குருகுலம் நடத்திய மாதிரியே இங்கே பலபேர் ஒரு இடத்தில் சேர்ந்து நூற்றுக்கணக்கானவர்களுக்கு சிக்ஷையளித்தபோதும் அதை ஆச்ரமமாகப் பரிசுத்தத்தோடு நடத்தியிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஏழாயிரம் மாணவர்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  சோழநாட்டிலும்
Next