கடிகைக்குக் கடிகாரத் தொடர்புண்டா? : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

கடிகையின் க்யாதி, ப்ரக்யாதிகள் தெரிகிறது. ஆனால் கடிகை என்று ஏன் பெயர் வந்தது? இதற்குப் பதில் சொல்லாமல் “நான் இத்தனை சாஸனங்களைப் பார்த்திருக்கிறேனாக்கும்” என்று பெருமைப் பட்டுக்கொண்டே போகிறேனே!இதை (பெயர் வந்த காரணத்தை) த் தெரிந்துகொண்ட பெருமையைச் சொல்லிக் கொள்ள வேண்டாமா? இந்தப் படலத்தை ஆரம்பிக்கிறேன்.

கடம் என்றால் பானை என்று எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அதிலேயே ரொம்பப் பெரிசாயில்லாமலிருப்பது கடிகை என்றேன். லதா – லதிகா, பத்ர – பத்ரிகா என்பது போல கட- கடிகா. ஆனால் பானைக்கும் பள்ளிக்கூடத்துக்கும் என்ன ஸம்பந்தம்?

‘கடிகை’ என்றால் ‘நாழிகை’ என்றும் அர்த்தம் சொன்னேன். ‘அம்ருத கடிகை’ என்பது போன்ற வார்த்தைகளில் இந்த அர்த்தத்தில்தான் அந்த வார்த்தை வருகிறது. ஒரு கடத்திலிருந்து சொட்டுச் சொட்டாக ஜலம் விழுவதைக் கொண்டே அந்தக் காலத்தில் நேரத்தைக் கணக்கிட்டதால் நாழிகைக்கு கடத்தின் பெயரை வைத்து ‘கடிகா’ என்றே இன்னொரு பெயர் சொன்னார்கள். அதுதான் இப்போது ‘கடிகாரம்’ என்பதில் வந்திருக்கிறது.

‘ஸரி, காலேஜ் மாதிரி இருந்த வித்யாசாலைக்கு ஏன் கடிகா என்று பேர்? எப்போது க்ளாஸ் முடியும் என்று கடிகாவைப் பார்த்துக் கொண்டேயிருந்திருப்பார்களா? அதனால் இந்தப் பேரா?’ என்று வேடிக்கையாகத் தோன்றுகிறது. ஆனால் ரொம்பவும் ஸீரியஸான அகாடெமி விஷயத்தில் – வேத சாஸ்த்ர ஸம்பந்தமான விஷயத்தில் – இப்படிக் குறும்புப் பேர் கொடுப்பது பொருந்தாது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is மஹாராஷ்டிரத்திலும் பெருமை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  கடிகாசலம், நான்மணிக்கடிகை
Next