கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலேயே; ப்ரயாகையிலும் ! : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

பூர்வ மீமாம்ஸகர்களில் ஒரு முக்ய புருஷரான குமாரிலபட்டர் “தந்த்ர வார்த்திகம்” என்று ஒரு க்ரந்தம் செய்திருக்கிறார். அதில் “கல்பஸூத்ராதிகரணம்” என்ற பகுதியில் ஒரு ச்லோகம் வருகிறது (1-3-6) . ச்லோகத்தின் விஷயம் நமக்கு அவச்யமில்லை. அதிலே கடிகா மார்க்க வ்ருத்திஷு என்ற வார்த்தை வருவதுதான் நமக்கு முக்யம்.

கி.பி. நாலாம் நூற்றாண்டிலிருந்து அதற்கப்புறம் ஆயிரம் வருஷத்துக்கு மேலாக கடிகைகள் இருந்திருப்பதற்கு ‘எவிடென்ஸ்’ (சான்று) இருக்கிறது என்று பெருமையாக ராஜ சாஸனங்களை ஸாக்ஷி காட்டினேன் அல்லவா? இப்போதோ ஆசார்யாளுக்கு ஸமகாலத்தவரான குமாரில பட்டரே ராஜ சாஸனத்துக்கு மேலாக, தம்முடைய சாஸ்திர வாசகமாக, கடிகையைச் சொல்கிறாரென்பதால் கி.பி. நாலாம் நூற்றாண்டுக்கும் கிட்டத்தட்ட ஆயிரம் வருஷத்துக்கு முந்திய கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலேயே இப்படிப்பட்ட கலாசாலைகள் இருந்ததாகறிது*.

அதாவது, இரண்டாயிரம் வருஷகாலம் ‘கடிகை’ என்ற பெயரில் வித்யாசாலைகள் கொடிகட்டிப் பறந்திருக்கின்றன. ஹிந்து மதத்தில் ஆசார்யாள்தான் முதலில் இன்ஸ்டிட்யூஷன் ஏற்படுத்தினாரென்றாலும், மதச்சார்புள்ள அதன் கல்வி முறையில் அவர் காலத்திலேயே இன்ஸ்டிட்யூஷனலைஸ் செய்த கடிகைகள் இருந்திருக்கின்றனவென்று இதிலிருந்து தெரிகிறது. பெளத்தர்கள் புத்திமான்களிடம் செல்வாக்குப் பெறத் தொடங்கியதை எதிர்த்துத் தார்க்கிகர்களும் மீமாம்ஸகர்களும் கண்டனம் ஆரம்பித்தவுடனேயே வைதிக வித்யைகளில் பிடிப்புள்ளவர்கள் பண்டிதர்களை ஒன்றுதிரட்டி இப்படிக் கடிகைகளை ஆரம்பித்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. அப்படி ஆரம்பித்ததுதான் போகப் போக நன்றாக அபிவ்ருத்தியாகியிருக்கிறது.

காலத்தில் இத்தனை முற்பட்டிருந்ததோடு, குமாரில பட்டர் சொல்வதால் கடிகாஸ்தானத்தின் எல்லை எதுவரை போயிருந்ததென்றும் தெரிகிறது. அவர் தற்போது அலாஹாபாத் என்று சொல்லும் ப்ரயாகையில் இருந்தவர். அவர் கல்விமான்களுக்கெல்லாம் ஸஹஜமாகத் தெரிந்த ஒன்றாக, “கடிகா மார்க்க வ்ருத்திஷு” என்பதால் வடக்கே அலாஹாபாத்திலிருந்து தெற்கே சோணாட்டு வேப்பத்தூர் வரை “கடிகா ஸ்தானம்” என்ற பெயரிலான வித்யாசாலைகள் இருந்ததாக ஆகிறது.

‘ஆரிஜின்’ (தோற்றுவாய்) , கால ஸமாசாரம், எல்லை எல்லாமிருக்கட்டும். நாமகரணத்துக்குக் காரணமென்ன என்றல்லவா குடைந்து கொண்டிருந்தோம்?


* சங்கரரின் காலம் கி.மு. 508-476 என்ற கருத்தைத் தழுவிக் கூறியது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is கடிகாசலம், நான்மணிக்கடிகை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  பெயர் விளக்கம்
Next