பெயர் விளக்கம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

குமாரில பட்டரின் தந்த்ர வார்த்திகத்துக்கு பட்டஸோமேச்வரர் என்பவர் செய்திருக்கும் பாஷ்யத்தில்தான் இந்தக் காரணம் புரிந்தது. அதைத்தான் சொல்ல வந்தேன்.

‘கடிகா ஸ்தானம்’ என்பதை அவர் (பட்ட ஸோமேச்வரர்) இப்படி ‘எக்ஸ்ப்ளெயின்’ பண்ணியிருக்கிறார்.

“வேத கௌசல ஜிஜ்ஞாஸார்த்தம் தத்தத்
வேதபாக சிஹ்ந லேகயாநி கடிகாயாம் கும்பாக்
யாயாம் நிக்ஷிப்ய, தத்தத் வேதபாக பரீக்ஷாகாலே
தான்-யாக்ருஷ்ய, ஆக்ருஷ்ட லேக்ய சிஹ்நிதம்
வேதம் பட இத்-யத்யேதார: அநுயுஜ்யந்தே: இதி
கடிகா மார்க்க வர்த்திநோ அநுயோக:” என்கிறார்.

‘அநுயோகேஷு கடிகா மார்க்க வ்ருத்திஷு என்று குமாரிலபட்டரின் ‘தந்த்ரவார்த்திக’ மூல ச்லோகத்தில் வருகிறது. அது எதைக் குறிக்கிறது என்று இங்கே பாஷ்யம் செய்தவர் விவரித்துவிட்டு, இதுதான் ‘கடிகா மார்க்கவர்த்திநோ அநுயோக:’ என்று மூல வாசகத்தைக் காட்டி முடிக்கிறார்.

‘கடிகா மார்க்க வ்ருத்தி’ என்பது கடிகையின் கல்விமுறைப் போக்கு. அதைப் பின்பற்றுபவர்கள் கடிகா மார்க்கவர்த்திகள். ‘அநுயோகம்’ என்றால் அவர்கள் விஷயங்களை விசாரணை செய்வது :பரீக்ஷை நடத்துவது.

கடிகா ஸ்தானங்களில் வித்யார்த்திகளுக்கு எப்படிப் பரீக்ஷை வைக்கிறார்களென்பதை இங்கே ஸோமேச்வரர் விளக்குவதில் கடிகை என்ற பெயர் வந்த காரணமும் புரிந்துவிடுகிறது.

“கடிகாயாம் கும்பாக்யாயாம்” என்கிறார். கும்பம் என்றால் குடம், பானை என்று தெரிந்திருக்கும். கடிகை என்பது கும்பமாகிய பானை ஸம்பந்தமுள்ள பெயர்தான் என்று விவரிக்கிறார்.

கடிகைகளில் பானையை வைத்து நடந்த பரீக்ஷை முறையிலிருந்தே அதற்கு அந்தப் பெயர் ஏற்பட்டிருக்கிறது என்று தெளிவுபடுத்துகிறார்.

என்ன பரீக்ஷை முறை? அதிலே பானை எதற்கு வந்தது? வரட்டு நெட்டுருப் போட்டுப் பரீக்ஷை எழுதுவதை ‘கடம் அடித்தான்’ என்கிறார்களே, அதிலிருந்துதான் கடிகையா? இல்லை. பரிஹாஸப் பெயர் மதிப்புக்குரிய வேத வித்யா ஸ்தானத்துக்கு ஏற்பட்டிருக்க முடியாது என்று முன்னேயே சொன்னேனே!

வேதத்தில் எந்த மந்த்ரத்தைக் கேட்டாலும் அதை வித்யார்த்தி ஒப்பிக்கவேண்டும். அவன் ‘தரோ’வாக அத்யயனம் செய்திருக்கிறானென்று அப்போதுதான் ஏற்படும். இதற்காகவே பரீக்ஷை எப்படி நடத்தினார்களென்றால் :

‘அப்ஸ்ட்ராட்’ – ஆகச் சொல்லாமல் உதாரணம் காட்டிச் சொன்னால்தான் புரியும்.

உதாரணமாக :

ரிக்வேதத்தில் ஏதாவது ஒரு மந்த்ரம் பையனுக்குத் தெரிகிறதா என்று பார்க்கவேண்டுமென்று வைத்துக் கொள்ளுங்கள். அதன் முதல் வார்த்தையைக்கூட எடுத்துக் கொடுக்காமல் அவனைச் சொல்லப் பண்ணவேண்டும். அத்யயனம் என்பது நெட்டுருப் போடுவதே ஆகையால் முதல் வார்த்தையைச் சொல்லிவிட்டால் அவன் கிடுகிடு என்று சொல்லிக்கொண்டு போய்விடுவான். அதனால், அதைக்கூடச் சொல்லாமல் இன்ன மந்த்ரம் என்று ஒரு ஸங்கேதம் – நம்பர் – கொடுத்தே அவனை ஒப்பிக்கப் பண்ணவேண்டும்.

இந்த நம்பரை எப்படிக் கொடுத்தார்கள்?

ரிக்வேதத்தில் பதினாயிரத்துக்கு மேல் மந்த்ரம் இருக்கிறது. இவற்றுக்கு ஒன்றிலிருந்து பதினாயிரம் வரை நம்பர் கொடுப்பது என்பது பெரிய தலைவலியாயிருக்கும். ஆனால் நல்லவேளையாக அந்த வேதத்தைப் பல பாகமாக்கி, ஒவ்வொரு பாகத்தையும் பல பிரிவுகளாக்கி, ஒவ்வொரு பிரிவிலும் ஒரு ஸூக்தம், அந்த ஸூக்தத்தில் இத்தனை ரிக்குகள் என்று பிரித்துக் கொடுத்திருக்கிறது. ரிக் என்பது ச்லோகம் மாதிரி. ஒவ்வொரு ரிக்கும் ஒரு மந்த்ரம்.

இப்படிப் பிரித்திருப்பதில் இரண்டு விதம். பத்து மண்டலங்கள், ஒவ்வொரு மண்டலத்திலும் அநுவாகம் என்ற பிரிவுகள், ஒவ்வொரு அநுவாகத்திலும் ஸூக்தம் என்ற உட்பிரிவுகள் – என்பது ஒருவிதமான பிரிவினை. இன்னொன்று எட்டு அஷ்டகம் என்று முதலில் பிரித்து ஒவ்வொரு அஷ்டகத்திலும் அத்யாயம் என்ற உட்பிரிவு, அதிலே ஸூ்க்தம் என்று மேலும் உட்பிரிவு என்பது.

இப்போது பையனுக்கு ஸங்கேதமாக நம்பர் கொடுத்துப் பரீக்ஷிப்பது ஸுலபமாகி விடுகிறது. அதாவது 2-4-3-5 என்று ஏதோ ஒரு நம்பரை பரீக்ஷாதிகாரி கொடுக்கிறாரென்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த கடிகையில் மண்டலப் பிரிவினையைப் பின்பற்றுபவர்களானால், உடனே பையன் இரண்டாவது மண்டலத்தில் நாலாவது அநுவாகத்தில் வரும் மூன்றாவது ஸூக்தத்தின் ஐந்தாம் ரிக்கை ‘டக்’கென்று சொல்லவேண்டும். அஷ்டகப் பரிவினையை அநுஸரிப்பவர்களானால், இப்படியே இரண்டாவது அஷ்டகம், நாலாவது அத்யாயத்தில் வரும் மூன்றாம் ஸூக்தத்தின் ஐந்தாவது ரிக்கை ஒப்பிக்க வேண்டும்.

இதற்கும் கடத்துக்கும் என்ன ஸம்பந்தம்?

பரீக்ஷாதிகாரி வாயினால் இப்படி 2-4-3-5 என்று நம்பர்களைச் சொல்வதைவிட எழுத்திலே கொடுப்பதுதான் மாணவனுக்குத் தெளிவாகப் புரியும். நாலு நம்பர்களைச் சேர்ந்தாற்போல் வாயினால் சொல்லிக்கொண்டு போனால் ஸந்தேஹம் வந்துவிடலாம். எனவே இம்மாதிரி ஸங்கேத நம்பர்கள் பலவற்றை ஓலை நறுக்கில் எழுதி ஒரு கடத்தில் போட்டு வைத்தார்கள். இதில் இன்னொரு நன்மை – வாயால் சொன்னால் அது அப்போதே காற்றோடு போய்விடும். எழுத்தில் இருந்தால் எத்தனை பரீக்ஷைகளுக்கு வேண்டுமானாலும் திரும்பத் திரும்ப உபயோகித்துக் கொள்ளலாமே!அதனால் ஓலை நறுக்கில் எழுதி கடத்தில் போட்டு வைத்தார்கள். அதோடு எழுத்தில் எழுதினால் அது ஸாக்ஷி ப்ரமாணமுள்ள டாகுமெண்டும் ஆகிவிடுகிறது!.

பரீக்ஷை ஸமயத்தில் பையன் கடத்தில் கையை விட்டு எந்த நறுக்கு கையில் வருகிறதோ அதிலிருக்கிற ஸங்கேத நம்பருக்கான ரிக்கைச் சொல்ல வேண்டும். தனி ரிக்காக இல்லாமல் அவற்றைவிடப் பெரிய ஸூக்தம், யஜுர் வேதமானால் பஞ்சாதி என்றும் இப்படியே நம்பர் கொடுத்து, கடத்திலிருந்து ஓலை நறுக்கு எடுத்துப் பார்த்துச் சொல்ல வைத்துப் பரீக்ஷை நடத்தினார்கள்.

இதைப் பின்பற்றித்தான் பிற்காலத் தமிழரசர்கள் குடவோலைத் தேர்தல் முறை என்று நகராட்சி முறையில் அமலாக்கியருக்கிறார்கள்*. குடவோலைத் தேர்தலில் ஒன்றும் தெரியாத ஒரு குழந்தை ஓலையை எடுத்ததாகச் சொல்லியிருக்கிறது. கடிகைப் பரீக்ஷையில் மாணவனே எடுத்திருக்கலாம், அல்லது ஆசிரியர் எடுத்திருக்கலாம். இருவருமில்லாமல் எவரேனும் மத்யஸ்தர் எடுத்தாலும் எடுத்திருக்கக்கூடும். சொல்லிக் கொடுத்தவரை பரீக்ஷாதிகாரியாகப் போடாமல் வேறு மூன்றாம் மனுஷரைப் போட்டு அவரை விட்டே (ஓலை நறுக்கை) எடுக்கச் செய்துமிருக்கலாம்.

சொல்லிக்கொடுத்த வாத்யாரானாலும் ஸரி, அசலார் என்று நினைக்கும் மத்யஸ்தரானாலும் ஸரி எவருமே ஒரு மாணவனுக்கு முன்கூட்டியே கேள்வியைச் சொல்லிக் கொடுப்பது முதலான ஒழுங்குத் தப்புக்குக் கொஞ்சங்கூட இடம் கொடுக்கப்படாதென்றுதான் இப்படி ஏகப்பட்ட கேள்விகளை (ஓலை நறுக்கில் உள்ள நம்பர் ஒவ்வொன்றும் ஒரு கேள்வி மாதிரிதானே?) ஒரு கடத்திலே போட்டு வைத்து, அதிலே தற்செயலாக எதெது வருகிறதோ அததுகளுக்கு ‘ஆன்ஸர்’ பண்ணவேண்டுமென்று கொஞ்சமும் சங்கைக்கு இடமில்லாத முறையில் பரீக்ஷை நடத்தியிருக்கிறார்கள்.

அந்த கடத்தை வைத்துத்தான் வித்யாசாலைக்கே “கடிகை” என்று பெயர் வந்ததென்று பட்ட ஸோமேச்வரரின் ‘எக்ஸ்ப்ளனேஷ’னிலிருந்து தெரிந்தது. பெயர் புரியவந்ததில் ஒரு புதையல் கிடைத்த ஸந்தோஷம்!


* இதே பகுதியில் ‘பொது வாழ்க்கை’ என்னும் பிரிவில் ‘உத்தர மேரூர் உத்தமத் தேர்தல் முறை’ என்ற உரையில் ‘தேர்தல் நடந்த விதம்’ எனும் பிரிவு பார்க்க.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலேயே : ப்ரயாகையிலும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  சிறிது ஸம்ஸ்க்ருத பாடம்
Next