ஸ்யமந்தகத்தின் கதை : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

‘ஸ்யமந்தகமணி உபாக்யானம்’ என்று பாகவதத்தில் ஒரு கதை இருப்பதாகத் தெரிந்திருக்கலாம். அந்தக் கதை என்ன என்று தெரியாவிட்டாலும், ‘ஸ்யமந்தகமணி உபாக்யானம்’ என்ற பெயரையாவது கேட்டிருக்கலாம்.

ஆக்யானம் என்றால் கதை என்று அர்த்தம். உபஆக்யானம் – உபாக்யானம் என்றால் கிளைக்கதை. பெரிசாக ஒரு கதையை ஒரு இதிஹாசமோ, புராணமோ சொல்லிக் கொண்டு போகும்போது அதில் கிளைக்கதையாக வருவதே உபாக்யானம். ‘மெயின்’ கதையின் பாத்ரங்கள் ஸம்பந்தப்படாமல் முழுக்க வேறு பாத்ரங்களைப் பற்றியே உபாக்யானங்கள் வருவதுமுண்டு. மஹாபாரதத்தில் இப்படித்தான் பஞ்சபாண்டவர் ஸம்பந்தமேயில்லாத நளோபாக்யானம் முதலான பல கிளைக்கதைகள் வருகின்றன. இப்படியில்லாமல் ‘மெயின்’ கதையின் பாத்ரங்களுடைய ஸம்பந்தமுடையதாக மெயின் கதையிலிருந்து எடுக்கமுடியாத அதன் ஒரு பிரிவாகவே, அங்கமாகவே, ஆனாலும் ஒரு தனிக் கதாம்சமுள்ளதாக, அதாவது கழித்துக் கட்டமுடியாத கிளைகளாக உள்ள உபாக்யானங்களும் உண்டு.

ஸ்யமந்தகமணி உபாக்யானம் பாகவதத்தில் இப்படித்தான் part and parcel – ஆக இருக்கிறது. ஸ்யமந்தகம் என்ற தெய்விகமான மணியை மையமாக வைத்து ஸாக்ஷாத் ஸ்ரீ க்ருஷ்ண பரமாத்மாவுக்கே ஏற்பட்ட பெரிய அபவாதம், அதைப் போக்கிக்கொள்ள அவர் பாடுபட்டது இவற்றை இந்தக் கதை சொல்கிறது.

இதே கதை விஷ்ணு புராணத்திலும் வருகிறது. கொஞ்சம் மாறுதலோடு ஸ்காந்தத்திலும் வருகிறது; அதில் நந்திகேச்வரருக்கும் ஸநத்குமாரருக்கும் நடந்த ஸம்வாத ரூபமாக (ஸம்பாஷணை உருவில்) வருகிறது. இந்த ஸ்காந்தக் கதையில்தான் விக்நேச்வரர் ஸமாசாரம் வருகிறது. நான் சொல்லப் போவது ஸநத்கமாரருக்கு நந்திகேச்வரர் சொன்ன இந்தக் கதைதான். அங்கங்கே பாகவதம், விஷ்ணு புராணம் ஆகியவற்றின் version-களையும் கொஞ்சம் அவியல் பண்ணிக் கொள்வேன்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ராமபிரானும் விநாயகரும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஸுர்யனும் விநாயகரும்
Next