கோயில்களில் போதனை என்று சொன்னேன். இதைக் கொஞ்சம் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணவேண்டும்!
ஏறக்குறைய ஆயிரம் வருஷத்துக்கு முந்தி பல்லவ பாண்டியர்களுக்கு மேலாகப் பிற்காலச் சோழர்கள் எனப்படுபவர்களின் ஆதிக்கம் பரவிற்று. விஜயாலயன் என்பவன் இப்படி மறுபடி சோழர்களுக்குப் புது எழுச்சி தந்த பிற்பாடுதான் பராந்தகன், ராஜராஜன், ராஜேந்திரன் முதலானோர் அவன் வம்சத்திலே வந்து சோழ ஸாம்ராஜ்யத்தைப் பரப்பினார்கள். ஸாம்ராஜ்யம் என்று நீள அகலங்களில் அது பெருகியதைவிட அதிலே கலாசாரம் அதி உன்னதமாகப் பரவியதுதான் அதிகப் பெருமை. பல்லவர் காலத்தில் சிறிய அளவிலும், நடுத்தர அளவிலும் மட்டுமே கட்டப்பட்ட ஆலயங்கள் பெரிய அளவில் விஸ்தாரமாக்கப்பட்டது இந்தப் பீரியடில்தான். இதே ஸமயத்தில் கல்வி – கேள்வி, ஸாஹித்யம், ஸங்கீதம், நர்த்தனம் எல்லாமும் வ்ருத்தியாயின. இதிலே அழகு என்னவென்றால் ஆலயம் பாட்டுக்கு ஒரு பக்கத்தில் வ்ருத்தியாச்சு, கலாசாரம் இன்னொரு பக்கத்தில் அதுபாட்டுக்கு வ்ருத்தியாச்சு என்றில்லாமல் ஆண்டவனை மையமாக வைத்தே – ஸ்தூலமாக ஆலயத்தைக் கேந்திரமாக வைத்தே – கல்வி, கலாசாரங்களும் வளர்ந்தன.
நேராகக் கோயிலுக்குள்ளேயே கல்விக்கூடம் அமைப்பது என்று இப்போது ஏற்பட்டது. “வியாகரணதான மண்டபம்” என்று அநேக சிவாலயங்களில் இருப்பவை இலக்கண வகுப்பு நடத்துவதற்காக ஏற்பட்டவைதான். இப்போது கோயில் பெரிய பரப்பளவில் கட்டப்பட்டதால் அதற்குள்ளேயே காலேஜ் ஸ்தானத்திலிருந்த உயர்கல்வி நிலையங்களை அமைக்க வசதி ஏற்பட்டது. சிதம்பரம், தஞ்சாவூர் முதலான கோயில்களில் இப்போது பார்த்தாலும் தெரியும் – அவற்றை வெளி மதிலை ஒட்டினாற்போல கோயிலுக்கு உட்புறமாகவே இரட்டை மாடிக் கட்டுமானங்கள் நிறைய இருக்கும். இவை பத்தாம் நூற்றாண்டிலிருந்து பண்ணிரண்டாம் நூற்றாண்டுவரையில் சோழ ராஜாக்கள் “திருச்சுற்று மாளிகை” என்ற பெயரில் நிர்மாணித்தவை. இதிலேதான் வித்யாசாலைகள் நடந்தன. அதோடு லைப்ரரி மாதிரியான “ஸரஸ்வதி பாண்டாரம்” என்பவையும் திருச்சுற்று மாளிகையில் இடம் பெற்றன. அவற்றில் நூல் சுவடிகளை எல்லாம் சேகரித்து, ப்ரதிகள் எடுத்து, பத்ரமாகப் பாதுகாத்து, வித்யார்த்திகளுக்கும் ஆசிரியர்களுக்கும் கொடுத்து உபகரித்து வந்தார்கள். பாண்டாரம் என்றால் ‘ஸ்டோர்’ என்பதுபோல் பண்டங்களைச் சேர்த்து வைக்கிற இடம். தன பாண்டாரம், தான்ய பாண்டாரம் என்றே அக்கால ராஜாங்கத்தில் பதவிகள் உண்டு. கஜானாவுக்குப் பொறுப்பானவர் தன பாண்டாரம். உணவுப் பண்டஸப்ளைக்கு (இக்காலம் மாதிரி தினம் ஒரு புகார் கொடுக்க வேண்டியில்லாமல் நடந்த ஸப்ளை) பொறுப்பேற்றவர் தான்ய பாண்டாரம். ஸாக்ஷாத் வித்யைக்கு அதிதேவதையான ஸரஸ்வதிக்கு உரிய பண்டங்கள் நிறைந்த ஸ்டோர் ஒன்று உண்டு என்றால், அது நூல் நிலையமாக இன்றி வேறென்னவாக இருக்கமுடியும்? அதனால்தான் “ஸரஸ்வதி பாண்டாரம்” என்ற அழகான, தெய்வ ஸம்பந்தமுள்ள பெயர்!
கோயிலுக்குள் நடந்த வித்யாசாலைகள் என்பதால் அவற்றில் ஸமயக் கல்வி மட்டும்தான் போதிக்கப்பட்டதாக நினைக்கவேண்டாம். ‘க்ராமரு’க்கு என்றே தனி மண்டபம் கோயிலில் இருந்தது என்று சற்றுமுன் சொன்னேனே!ஸெக்யுலர் (உலகியல் சாஸ்த்ரங்கள் குறித்த) படிப்பு என்றாலும் அதையும்கூட ஈச்வரனையும் ஸமயாசாரங்களையும் மறந்து ப்ரயோஜனப் படுத்துவதற்கில்லையல்லவா? இந்த ப்ரக்ஞையை நன்றாக உண்டாக்குகிற ரீதியில்தான் ‘ஜெனரல் எஜுகேஷ’னுக்கு (பொதுக் கல்விக்கு) ஏற்பட்ட கலாசாலைகள் ஆலய எல்லைக்குள்ளேயே நடத்தப்பட்டன. அவற்றில் ஆயுர்வேதம் முதலானவையும் கற்பிக்கப்பட்டதற்குச் சான்றுகள் இருக்கின்றன – அக்கால மெடிகல் காலேஜ்!