பெருமையும் சிறுமையும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இத்தனை கதையும் நம் பூர்விகர்களின் மிக உயர்ந்த கல்விப் பெருமையைக் காட்டுகிறது. இந்தக் கதையில் எத்தனையோ விஷயங்கள் நான் தேடிப் பார்த்து, ஆராய்ச்சி செய்து, ஒன்றுக்கொன்று இசைத்து முடிவுகளுக்கு வரமுடிந்திருக்கிறது. புஸ்தகம் படித்தும், சாஸனங்கள் பார்த்தும், வேறு தினுஸிலேயும் ஸமாசாரங்கள் தெரிந்தன. ‘நமக்கா தெரிந்தது?’ என்று எனக்கே மலைப்புத் தட்டுகிற அவ்வளவு ஸமாசாரங்கள்!

எல்லோராவில் பெரிய குன்றுகளை அப்படியே போட்டுக் குடைந்து ஆச்சர்யப்படும்படி சிற்ப வேலைப்பாடுகளோடு கோவில்கள் கட்டியிருப்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அவற்றுக்குள்ளும் ரொம்பவும் சிறப்பு வாய்ந்தது கைலாஸநாதர் ஆலயம். “என்னமாக இப்படிக் கட்டியிருக்கிறார்கள்?” என்று பார்க்கிறவர்கள் ப்ரமிக்கிறார்கள். பார்க்கிறவர் மட்டுமில்லை. இத்தனை வேலைக்கும் ஒரு தலைமைச் சிற்பி இருந்திருக்கிறானே, அவனுக்கே இந்தக் கைலாஸக் கோயிலைக் கட்டின பிற்பாடு அதேமாதிரி இன்னும் கோயில்கள் கட்டவேண்டுமென்று ஆரம்பித்துப் பிரயாஸைப்பட்டபோது இப்படி ப்ரமிப்புத் தட்டிற்று. எத்தனை ப்ரயாஸை எடுத்துக் கொண்டு இந்தத் தரத்துக்கு ஈடாக அவனால் இன்னொன்று கட்ட முடியவில்லை. அப்போதுதான் அவனுக்கே சட்டென்று ஒரு ப்ரமிப்பு ஏற்பட்டு “என்ன ஆச்சர்யம் இப்படி ஒண்ணு என்னாலே எப்படிப் பண்ண முடிஞ்சுது? நான்தான் பண்ணினேனா, எனக்குள்ளே எதுவோ பூந்துண்டு பண்ணுவிச்சுதா?” என்று சொன்னானாம்.

இப்படி அந்தக் கைலாஸநாதர் கோயில் சிற்பி அதே மாதிரி இன்னொன்று நிர்மாணிக்க முடியாமல் போய் அப்புறம், அதை மட்டும் தானா பண்ணினோமென்று ஆச்சரியப்பட்ட விஷயம் ச்லோக ரூபத்திலேயே ஒரு செப்பேட்டில் இருக்கிறது. (கி.பி.) எட்டாம் நூற்றாண்டில் அந்தக் கோயிலைக் கட்டிய ராஷ்ட்ரகூட அரசனான க்ருஷ்ண ராஜனைப் பற்றியுள்ள “பரோடா காப்பர் பிளேட்”களிலொன்றில்* அந்த ச்லோகம் இருக்கிறது.

பூயஸ் – ததாவித – க்ருதௌ வ்யவஸாய ஹாநே:

ஏதந் – மயா கதம் அஹோ க்ருதம் இத் – யகஸ்மாத்

கர்த்தாமி யஸ்ய கலு விஸ்மயம் ஆப சில்பீ

அந்த சில்பி மாதிரிதான் எனக்கும் நாம்தானா இத்தனை ஆராய்ச்சி பண்ணி கடிகா ஸ்தான ஸமாசாரங்கள் கண்டு பிடித்தது என்று இருக்கிறது.

இப்படி நான் பெருமை அடித்துக்கொள்வதிலேயே சிறுமையும் தெரிகிறது. நம் தேசத்தில் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டு வரையில்கூட – அதாவது இரண்டாயிர வருஷ காலம் – விஸ்தாரமாக இருந்து வந்திருக்கிற வேத வித்யா ஸ்தானங்கள் பற்றி இந்த மதத்துக்கு குரு என்றிருக்கிற எனக்கு இத்தனை வருஷம் தெரியாத சிறுமைதான்!அதுமட்டுமில்லாமல் வித்வத் ஸமூஹத்தில் நான் இதைப் பற்றிக் கேட்டு யாருக்கும் எதுவும் சொல்லத் தெரியாதது நமக்கு நம்முடைய புராதன கலாசார விஷயத்தில் உள்ள ஞானக் குறைவையும் அச்ரத்தையையும் காட்டுகிறது. அந்த அளவுக்கு நம்முடைய ஸ்வதேச சாஸ்திரக் கல்வி கீழே போயிருக்கிறது! பதினைந்தாம் நூற்றாண்டு வரை கொடிகட்டிப் பறந்த கடிகாஸ்தானங்களும் அந்தப் பெயரில்லாமலே நடந்துவந்த வேத சாஸ்த்ர வித்யா ஸ்தானங்களும் அதற்கு அப்புறம் இந்த ஐந்து நூற்றாண்டுகளில் இருந்த இடம் தெரியாமல் பெயரே மறந்து, அர்த்தம் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு நசித்துப் போயிருக்கின்றன என்றால் இது நமக்கு ரொம்பவும் குறைவு.

போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில் ஆயிரம் இரண்டாயிரம் மைல் ப்ரயாணம் பண்ணி தேசத்தின் நானா பாக வித்யார்த்திகளும் ஆயிரம் இரண்டாயிரம் பேர்கூடி இரண்டாயிர வருஷ காலம் வளர்த்து வந்திருக்கிற வித்யா ஸ்தானங்களைப்போல, எத்தனையோ வசதி படைத்த நம் காலத்தில் – வேண்டாததற்கெல்லாம் வெளிநாட்டு ட்ரிப், ட்ரெய்னிங் என்று போய்க்கொண்டிருக்கிற இந்தக் காலத்தில் – ஒன்றுகூட இல்லை என்றால் தலைகுனிவாகத்தானிருக்கிறது. தொண்ணூறு தொண்ணூற்றைந்து பேர் வேண்டுமானாலும் நவீன ஸயன்ஸ்கள், பிஸினெஸ் கோர்ஸ்கள் என்றிப்படிப் போனாலும் போகட்டும், ஐந்து பெர்ஸெண்டாவது நமக்கு என்றே ஏற்பட்ட எத்தனையோ ஸ்வதேச சாஸ்த்ரங்கள் ஆத்மிகமாகவும், ஸமய ஸித்தாந்தமாகவும், வ்யாகரணமாகவும்(grammar),தர்க்கமாகவும்(logic), வைத்ய விஷயமாகவும், இன்னும் இப்போதுள்ள ஃபிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி, பயாலஜி, அஸ்ட்ரானமி, எஞ்ஜினீயரிங் ஸம்பந்தமாகவும்கூட இருக்கின்றனவே, இவற்றில் எதையாவது கற்றறிந்து ஆராய்வதில் ஈடுபடக் கூடாதா என்று இருக்கிறது.


* The Indian Antiquary Vol.XII p.p.228-230

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஆலயமும் வித்யையும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஸ்வதேச வித்யைகளுக்கு 'திட்டம்'
Next