ஸூர்யனும் விநாயகரும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ருக்மிணி கல்யாணம் ஆகி பகவான் த்வாரகையில் வாஸம் பண்ணிக்கொண்டிருந்த ஸமயம். த்வாரகையில் யாதவ குலத்தின் முக்ய புருஷர்களில் இருவராக ஸத்ராஜித், ப்ரஸேனன் என்று ஒரு அண்ணன் – தம்பி இருந்தனர்.

அண்ணாவான ஸத்ராஜித்துக்கு ஸூர்ய பகவானிடம் பக்தி.

தற்காலத்தில் ஸூர்யனைப் பரிவார தெய்வங்களில் ஒன்றாக மட்டும் வைத்து, ஏதோ சிறிது ஸூர்ய நமஸ்காரம் பண்ணுவது, ஆதித்ய ஹ்ருதயம் சொல்வது என்பதோடு மதாபிமானமுள்ளவர்கள்கூட நின்றுவிட்டாலும் பூர்வத்தில் ஸூர்ய பகவானையே முழு முதற் தெய்வமாக உபாஸித்தவர்கள் நிறைய இருந்திருக்கிறார்கள். நம்முடைய மதத்தில் ஆறு பிரிவுகள் – ஆறு உபாஸனா மூர்த்திகளைக் குறித்ததாக ஷண்மதம் என்று உண்டு. பிள்ளையார், ஸுப்ரஹ்மண்யர், அம்பாள், ஈச்வரன், மஹாவிஷ்ணு என்று இப்போதும் ஸுப்ரஸித்தமாக இருக்கிற ஐந்து மூர்த்திகளோடு ஆறாவதாக ஸூர்ய பகவானும் இவர்களில் இருக்கிறார். அவரையே பரமாத்ம ஸ்வரூபமாக வழிபடும் மதப்பிரிவுக்கு ‘ஸௌரம்’ என்று பெயர். வெளிநாட்டுக்காரர்கள் கூடப் பார்த்துப் பிரமிப்பதாக கோனார்க்கில் உள்ள ஆலயம் ஸூர்ய பகவானுக்கானதுதான். கோண- அர்க்கம் தான் கோனார்க். ‘ஸூர்யனுடைய பகுதி’ என்று அதற்கு அர்த்தம். ‘அர்க்கன்’ என்றால் ஸூர்யன். அர்க்கனுக்கான கோணம் ‘கோனார்க்’

‘அர்க்கன்’ என்றதும் ஒன்று ஞாபகம் வருகிறது. பிள்ளையார் தொடர்பாகத்தான். பேசிக்கொண்டே போவதில் இப்படித்தான், கேட்பவர்களுக்கு ப்ரயோஜனமிருக்கிறதோ இல்லையோ, அவர்களுக்கு ஸ்வாரஸ்யமாயிருக்கிறதோ இல்லையோ, ஒன்றிலிருந்து ஒன்றாகப் பல ஸப்ஜெக்ட்களுக்கு போகும்போது பேசுபவருக்கே புதிதாகச் சில ‘லிங்க்’கள் அகப்பட்டு ஆத்ம த்ருப்தியும், நூதனமாக ஒரு விஷய ஞானமும் உண்டாகின்றன. ஷண்மதம் என்று சொல்லி அதில் ஸுப்ரஸித்தமாயுள்ள ஐந்து மூர்த்திகள் என்று சொல்லும்போதே, ‘இந்த ஐந்திலே பிள்ளையார் போக, பாக்கியுள்ள ஈச்வரன். அம்பாள், ஸுப்ரஹ்மண்யர், விஷ்ணு ஆகிய நாலு பேருக்கும் பிள்ளையார் ஸம்பந்தம் காட்டிவிட்டோம்; ஆறாவதாக இருக்கிற ஸூர்யனுக்கும் அவருக்கும் ஸம்பந்தம் உண்டா?’ என்று உள்மனஸ் யோசிக்க ஆரம்பித்தது. ஏதோ தற்செயலாய் பேச்சு கோனார்க், அர்க்கன் என்று போனவுடன், ‘தேவலையே! ஸம்பந்தம் கிடைத்து விட்டதே’ என்று எனக்கே ஒரு ஸந்தோஷம், த்ருப்தி ஏற்பட்டிருக்கிறது.

‘அர்க்க’ ஸம்பந்தம் பிள்ளையாருக்கு இருக்கிறது. அவருக்கு அர்ச்சனை செய்ய, ஹாரம் சார்த்தி அலங்கரித்து அழகு பார்க்க எந்தப் புஷ்பம் ரொம்பவும் உகந்தது? எருக்கம் பூதானே? எருக்கம்பூவுக்கு அர்க்க புஷ்பம் என்றே பெயர். ‘அர்க்க’ தான் ‘எருக்கு’ என்றாகியிருக்கிறது. ஸூர்யன், எருக்கு இரண்டுமே அர்க்க நாமமுடையவையாயிருக்கின்றன. ஸூர்யனார் கோயிலில் எருக்குதான் ஸ்தலவிருக்ஷம். ராத்ரியில் மலரும் சில பூக்களைத் தவிர பாக்கி எல்லாப் புஷ்பங்களையும் மலர்த்துவிக்கிற ஸூர்யனேதான் எருக்கம்பூவில் விசேஷ ஸாந்நியத்தோடு இருந்து கொண்டு, பக்தர்கள் பிள்ளையாருக்கு அந்தப் பூவால் பண்ணும் ஒவ்வொரு அர்ச்சனையிலும் அவர் பாதத்தில் போய் விழுந்து நமஸ்காரம் பண்ணுகிறானென்று வைத்துக் கொள்ளலாம்.

இதனால் ஷண்மத தெய்வங்களில் பிள்ளையார் நீங்கலாக உள்ள ஐந்து பேருமே அவருடைய உத்கர்ஷத்தை ஒப்புக் கொண்டதாக ஏற்பட்டு விடுகிறது. இந்த விஷயம் இருக்கட்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஸ்யமந்தகத்தின் கதை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  தவத்தால் பெற்ற திவ்யமணி
Next