கல்வியை உண்மையான கல்வியாக்கும் ஈச்வர பக்தியில் ஒரு அங்கம்தான் குருவிடம் பக்தியில் விநயமாயிருப்பது. விநயப் பத்தியம் இல்லாவிட்டால் வித்யை மருந்து பலிக்கவே பலிக்காது என்பதால்தான் க்ருஷ்ண பரமாத்மாவிலிருந்து ஆரம்பித்து எல்லோரும் “வித்யா விநயஸம்பன்ன” என்று இரண்டையும் பின்னி வைத்தார்கள். சம்பளத்தை நினைக்காமல் சிஷ்யனுக்கு வாத்யார் சோறு போட்டுத் தன் வீட்டில் வைத்து ரக்ஷிக்கிற குருகுலத்தில்தான் இப்படிப்பட்ட விநயம் உண்டாகும். இந்த விநயம் பூர்த்தியாவதற்கே முழுச் சோறும் அவனே போடாமல் சிஷ்யனை வெளி வீடுகளில் போய் பிக்ஷை வாங்கி வரச் சொல்வது – பிச்சைக்காரனாகப் போய் நின்றால் தன்னால் செருக்கு அறுபட்டுப் பணிவு உண்டாகிவிடும்.
ஈச்வர பக்தியாகட்டும், குருவிடம் விநயமாகட்டும் இவை எதற்கு என்றால் படிக்கிறவனின் அஹங்காரத்தை அடக்குவதற்குத்தான். அஹங்காரம் போகாத வெறும் படிப்பு ஆபத்தைத்தான் உண்டாக்கும். மதாநுஷ்டானம், ஈச்வர பக்தி, குருஸேவை ஆகியவற்றுடன் கூடிய ஸரியான கல்வி ஒருத்தனுக்கு இயற்கையாக உள்ள அஹங்காரத்தை தேய்த்து அகற்றி சுத்தப்படுத்தும். மாறாக இவை இல்லாவிட்டாலோ அதே கல்வி, “நான் எவ்வளவு படிச்சிருக்கேன் பார்த்தியா?” என்று அஹங்காரத்தைத் தலைக்கேற்றி விடுகிறது. வித்யாகர்வம் என்றே சொல்வார்கள்.
வெளிப்பார்வைக்கு அநுஷ்டானம், பக்தி, குருஸேவை நன்றாயிருந்தால் போதாது. “பக்திமானாக, அநுஷ்டாதாவாக இருந்தும், ‘தான் வித்வான்’ என்கிற தாட்பூட் இருக்கிறதே” என்று பிறர் சொல்லும்படி இருப்பவர்களுண்டு. அநேக பண்டிதர்கள் இப்படித்தான் ஆஸ்திகராகப் பார்வைக்கு இருந்துகொண்டும், தான் அறிவாளி, படிப்பாளி என்பதில் அஹங்கரித்தவர்களாயிருக்கிறார்கள். இவர்கள் நிலையில் தம்மை வைத்துக்கொண்டுதான் தாயுமான ஸ்வாமிகள்.
கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்
என்று ஒரு தரத்துக்கு இரண்டு தரமாகச் சொல்லி,
கற்றும் அறிவில்லாத என் கன்மத்தை என் சொல்கேன்? என்று புலம்பி வைத்துவிட்டுப் போயிருக்கிறார். வெளி மட்டத்தில் மட்டுமில்லாமல் உண்மையான உள்ளூறிய பக்தியோடு, ஸமய ஆசரணையோடு, குரு விச்வாஸத்தோடு கல்வி பயின்றால் இப்படி இருக்காது. கல்லாதபேர் பொதுவாக ஒரளவுக்கு நல்லவர்களாயிருக்கிறார்களென்றால், இப்படி உண்மையான அர்த்தத்தில் கற்றவர்களோ மஹா உத்தமர்களாகவே இருப்பார்கள்.
கல்லாத காட்டுவாஸியைவிடப் படித்தவர் அதிகம் தப்பில் போவதற்குக் காரணம் படிப்புமுறை அஹங்காரத்தை அதிகமாக்குவதாயிருப்பதுதான்.