ஏன் சாத்யமில்லை? : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இத்தனை பயனுள்ளதான குருகுலவாஸத்தை ‘இந்த நாளில் ஸாத்யமில்லை’ என்று சடக்கென்று சொல்லித் தூக்கி எறிந்துவிடக்கூடாது. ஏன் ஸாத்யமில்லாமல்? போன தலைமுறை, ஏன் இந்தத் தலைமுறையின் ஆரம்பம் வரையும் கூட சில சாஸ்திரங்களும் கலைகளும் குருகுல வாஸத்தாலேயே வளர்ந்து வந்திருக்கின்றன. அந்த வித்யைகளின் அப்யாஸம் நடக்கவேண்டிய அளவுக்கு ரொம்ப குறைச்சலாகவே நடந்தாலும், எந்த அளவுக்கு நடந்திருக்கிறதோ அது குருகுலக் கல்வியாகத்தான் இருந்திருக்கிறது.

பரத சாஸ்த்ரம், சிலப்பதிகாரம் முதலான நூல்களில் சொன்ன புராதனமான நம் ஸங்கீத மரபில் துருஷ்க ஆட்சியோடு வந்த அவர்களுடைய ஸங்கீத முறைகளும் சேர்ந்து வடக்கே ஹிந்துஸ்தானி ஸங்கீதம் என்றும், தெற்கே நம்முடையதான பூர்வீக பத்ததியே வேறுவிதத்தில் மெருகேறிக் கர்நாடக ஸங்கீதம் என்றும் ஆகியிருக்கின்றன. நானூறு ஐநூறு வருஷங்களாக இந்த இரண்டு பத்ததிகளுமே நன்றாக அபிவ்ருத்தி அடைந்து இன்றைக்கு நமக்கு லோகம் பூராவும் மதிப்புத் தரும் கலாசாரச் செல்வங்களாகியிருக்கின்றன. தலைமுறைக்குத் தலைமுறை இரண்டு பத்தததியிலும் ஏகப்பட்ட மஹாவித்வான்கள், உஸ்தாத்கள் வந்திருக்கிறார்கள். இத்தனையும் ஸ்கூல் என்று, காலேஜ் என்று பெரிசாக நடத்தாமல் குருகுலக் கல்வியாகவே இருந்து ஏற்பட்ட அபிவ்ருத்திதானே? ஸங்கீதத்துக்கு காலேஜ் என்பது நாற்பது, ஐம்பது வருஷத்துக்குட்பட்ட ஸமாசாரம் தானே?

தஞ்சாவூர்ப் படம், பழுக்கா வேலை, நெட்டிவேலை, பத்தமடைப் பாய் என்றெல்லாம், இங்கிலாண்டில் நடக்கிற ராஜகுடும்பக் கல்யாணம், பட்டாபிஷேகம் ஆகியவற்றில் முதற்கொண்டு நம்முடைய பரிசாகப் பெருமையுடன் கொடுக்கிறோமே, இதெல்லாம் எந்த ஸ்கூலில் காலேஜில் கற்றுக்கொடுத்து இந்தத் தலைமுறை வரைக்கும் வந்திருக்கின்றன? இன்டிவிஜுவல் கலைஞர்கள் தங்கள் வீட்டோடு வைத்துக்கொண்ட சீஷப் பிள்ளைகளுக்கு (சொந்தப் பிள்ளைகளையே சீஷப்பிள்ளையும் ஆக்கிக்கொண்டு) கற்றுக் கொடுத்துத்தானே இவை மறையாமல் வந்திருக்கின்றன?

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is அஹம் அடிபடவே குருகுலம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  பொதுமக்களின் பொறுப்பு
Next