உதிரி உதிரியாக இப்படி அங்கங்கே சில பேர் சேர்ந்து செய்கிறது எடுபடாமல், சாச்வதமாய் நிற்காமல் உதிர்ந்து போய்விடக்கூடிய ஆபத்து இருக்கிறது. அதனால் எல்லார் உபகரிக்கக்கூடியதையும் ‘ஸென்ட்ரலைஸ்’ செய்து (மையப்படுத்தி) நிர்வாஹம் பண்ணவேண்டிய அவச்யம் உண்டாகிறது. இதற்காகத்தான் மடத்தின் ஆதரவிலேயே வேத ரக்ஷணத்துக்காகப் பலவித திட்டங்கள் போட்டு டிரஸ்ட்கள் வைத்திருக்கின்றன. வேதரக்ஷண நிதிக்காரர்களைக்* கேட்டால் விவரங்கள் தருவார்கள். அவற்றுக்கு த்ரவ்ய உபகாரம் செய்து வேத சாஸ்த்ர வித்யை வளர, அதுவும் ப்ராசீன முறையிலேயே வளரச் செய்வது உங்கள் கடமை. இந்த தேசத்தில் பிறந்துவிட்டீர்களோல்லியோ! பிடித்தாலும். பிடிக்காவிட்டாலும் இதன் சீதோஷ்ணாதிகளால் ஒரு ஸமயம் நடுங்கி விரைத்துக்கொண்டும் இன்னொரு ஸமயம் வியர்த்துக் கொட்டிக்கொண்டும் அவதிப்படுகிறீர்களோல்லியோ? அப்படி ஒரு அவதியாக நினைத்துக்கொண்டாவது இதையும் படுங்கள். என்னை குரு என்று சொன்னால் என் மிரட்டல் உருட்டலைக் கேட்டுத்தான் ஆகணும். (பெரிதாகச் சிரிக்கிறார்.)
இந்த ‘ஸ்கீம்’களின் பொதுவான நோக்கம், வாத்யார்கள் வயிற்றுப்பாட்டைப் பற்றி நிர்விசாரமாக இருக்கும்படி அவர்களுக்கு நன்றாக ஸம்பாவனை செய்வது. ‘நன்றாக’ என்றால் அவர்கள் கார் வைத்துக்கொண்டு பங்களா வாஸம் செய்ய வேண்டுமென்று அர்த்தமில்லை. ஆனாலும் அதற்காக சுஷ்கம் பண்ணக்கூடாது. இப்போது நிரந்தர அம்சமாகவே ஆகிவிட்ட ‘இன்ஃப்ளேஷ’னில், ப்யூன்கூட (அந்தப் பேரைச் சொன்னாலே கோபித்துக் கொள்வார்களோ, என்னவோ? எனக்கு வேறே பேர் தெரியவில்லை) நானூறு ஐநூறு என்று சம்பளம் வாங்குகிற காலத்தில் வேத பண்டிதர்கள் டாம்பீகமில்லாவிட்டாலும் கௌரவமாக வாழ்க்கை நடத்தும்படி ஸம்பாவனை பண்ணவேண்டும். இரண்டு மணி பாடிவிட்டுப் போகிறவரைக் கலைஞர் என்று கொண்டாடி ஐநூறு, ஆயிரம் கொடுக்கிறீர்களோ இல்லியோ?
சிஷ்யர்கள் இல்லாமல் வாத்யார் ஏது? ஆனதால், நமது வேதம், சாஸ்திரம், கலாசாரம் என்றால் அவற்றின் பக்கமே வர பயப்படும் இன்றைய ஹீனஸ்திதியில், இவற்றுக்கும் பசங்களை இழுக்கும்படியாக அவர்கள் படிக்க ஆரம்பிப்பதிலிருந்தே அவர்களுக்கு attractive-ஆன கணிசமான ஸ்டைபென்ட்கள் தரவேண்டும். படிப்பு முடிந்து போகிற போதும், ஆயுஸ் பூராவும் ஒரு கஞ்சி காய்ச்சிக் குடிப்பதற்காவது தேவைப்பட்ட ஒரு தொகையை அவன் பேரில் “ஃபிக்ஸ’டில் (Fixed Deposit – ல்) போட்டுவிட வேண்டும். மூலத்தை அவன் கையாண்டு ஆழும் பாழும் செய்ய இடம் தராமல், வட்டி மாத்திரமே அவனுக்குக் கிடைத்துவரும்படிச் செய்ய வேண்டும். இப்படியெல்லாம் இப்போதே கொஞ்சம் நடத்தி வருகிறோம். அவனுடைய காலத்துக்கு அப்புறமும் தொகை ட்ரஸ்டைச் சேர்வது என்றில்லாமல் அவன் தலைமுறைக்கு இந்த வட்டி சேருமாறு ஏற்பாடு பண்ணியிருக்கிறது. அப்போதுதான், இப்படி ஒரு பிதுரார்ஜிதம் கிடைப்பதில் வருங்காலத் தலைமுறைகளை மனஸ்ஸாக்ஷி கொஞ்சம் கிளறிவிட்டு, “நாமும் அப்பா, தாத்தா வழியிலேயே வித்யைக்கு வாழ்க்கையை அர்ப்பணம் பண்ணுவோம்” என்று நினைக்கப் பண்ணும். எதிர்காலத்திலும் வேத சாஸ்த்ரக் கல்வி அதற்குரிய முறையில் தொடர்ந்து நடக்கக் கொஞ்சமாவது இடமேற்படும்.
*வேதரக்ஷண நிதி ட்ரஸ்ட், “ச்ரேயஸ்”, 2, ஆறாவது மெயின் ரோடு, நங்கநல்லூர், சென்னை – 600 061.