பிக்ஷாசா்யம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ரொம்பவும் உசந்த முறை, பண எண்ணமே இல்லாமல் நடக்கிற குருகுலக் கல்விதான். பரம த்யாகிகளாக, வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி வாழத் தயாராக, வித்யை ப்ரசாரம் ஆகவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் போதிக்கிறவர்கள் நடத்தும் குருகுலத்துக்கு எதுவும் ஈடாகாது. இப்படிப்பட்டவரின் அறிவு விசேஷத்துடன் மனஸ் விசேஷமும் சேர்வதால் அப்போதுதான் சிஷ்யர்களுக்கு மிகவும் உயர்ந்த வித்யாவிலாஸம் உண்டாகும். ஆனால், இவன் வயிற்றைக் கட்டிக்கொண்டாலும் சிஷ்யனாக இருக்கிற இள வயசுக்காரனின் வயிறு வாடப்படாதே! அத்யயனம் செய்த ப்ராமணன் என்றால் நிச்சயமாக அவனுக்கு மான்யமாக ஸொத்து இருக்கும் என்ற பழங்கால நிலை இப்போது இல்லையே! தனக்கே ‘ததிங்கிணதோம்’ போடுகிற வேத பண்டிதர் சிஷ்யனை வேறு எப்படிப் பராமரிப்பார்? இங்கேதான் சிஷ்யனின் பிஷாசா்யம் கைகொடுக்கிறது. அவன் பிக்ஷை எடுத்தே தன்னுடைய பாட்டைக் கவனித்துக் கொண்டுவிடவேண்டும். அதுமட்டுமில்லை. தனக்காக நாலு வீட்டுக்குப்போய் பிக்ஷை கேட்க வேண்டுமென்றால், வாத்யாருக்காக இன்னம் நாலு வீட்டுக்குப் போகவேண்டும். முன்னேயே சொன்னமாதிரி அவருக்குப் பக்வமான (சமைத்த) ஆஹாரம் பிக்ஷையாகக்கிடைக்கக் கூடாதாகையால், அவருக்கானதை அரிசி, பருப்பு, காய்கறி என்று வாங்கி வரவேண்டும்.

கல்வி அளிப்பது ஒன்றே நோக்கமாயிருக்கிற த்யாகி வாத்யாரைப்போல, கல்வி பெறுவது ஒன்றே நோக்கமாயிருக்கிற த்யாகி மாணவன்தான் இப்படி பிஷாசா்யம் செய்து குருகுலவாஸம் செய்வான்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is வித்யையும் வித்தமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  வாரச் சாப்பாடு
Next