இப்படிப்பட்ட த்யாகத்துக்கு நாம் செய்யக் கூடியது எதுவுமில்லை. நாம் ஏதாவது செய்துவிட்டால், அதாவது குரு சிஷ்யர்கள் நாம் செய்கிற உபகாரம் எதையோ ஏற்றுக் கொண்டுவிட்டால் அப்புறம் அவர்கள் எப்படி த்யாகிகளாக முடியும்? ஆகவே இப்படிப்பட்ட ஐடியலை நானோ நீங்களோ சொல்லிச் சொல்லி ஒரு ஊக்கம் உண்டாக்குவதைத் தவிர இதில் நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை.
அடுத்தப்படியாகத்தான் நான் சொன்ன ‘ஸ்கீம்’கள், அதாவது மூலதனம் வைத்து ஸம்பாவனை, ஸ்காலர்ஷிப் முதலானதுகள் கொடுத்து போஷிப்பது. இங்கேதான் நாம் ஏதோ கொஞ்சம் த்யாகம் செய்ய இடமேற்படுகிறது. த்ரவ்ய ரூபத்தில் (பொருளுருவில்) த்யாகம், நம்முடைய நேரத்தை த்யாகம் செய்து இதைப் பற்றிச் சிந்திப்பது, கார்ய ரூப த்யாகம் ஆகியவை கொஞ்சமாவது செய்து, வேதம் மங்கிப் போகாமல் ரக்ஷித்து, ஈச்வராநுக்ரஹத்தைப் பெறுவதற்கான ‘ஸ்கீம்’கள்.
பிக்ஷாசார்யம் ஒரு பையனுக்கு அளிக்கிற பணிவையும், அந்தப் பணிவின் வழியாய் அவனுக்கு ஏற்படும் மற்ற பண்புகளையும் நான் ரொம்பவும் முக்யமாய் நினைப்பதால், இந்த ஸ்கீம்களிலேயே ‘நியமாத்யயனத் திட்டம்’ (பண்டைய ப்ரம்மசர்ய, பிக்ஷாசர்ய நியமங்களோடு மாணவன் கல்வி கற்கிற திட்டம்) என்பது போலவும் சிலது வைத்து, இவ்வழியில் படிக்கிறவனுக்கு அதிகப்படி ஸம்பாவனைகள் செய்கிறோம்.
ஏதோ ஒரு தினுஸிலாவது “குருகுலவாஸம்” என்ற பெயரும், அதன் உசந்த லக்ஷ்யமும் ஒட்டிக் கொண்டிருக்கும் படியாக ஒரு இன்டிவிஜுவல் குருவுடனேயே பத்துப் பசங்கள் சேர்ந்து வாழும்படியாகத் திட்டங்களே போட்டு நடத்தி வருகிறோம். “றோம்” என்று உங்களிடமிருந்து பிரிந்து நாங்கள் யாரோ இருக்கிறாற்போலச் சொன்னது ஸரியில்லை. நீங்கள் எல்லாரும் நடத்தி வைக்கவேண்டிய உங்கள் திட்டம்தான் இவையெல்லாம். ரொம்பவும் ‘ஓஹோ’ என்று ஆதரவு கிடைக்காவிட்டாலும், வேதாப்யாஸம் வேர் பிடித்துக் கொள்ளும் என்று நம்பிக்கை தருகிற அளவுக்காவது ‘ரெஸ்பான்ஸ்’ கிடைத்திருக்கிறது. இதை ‘ஓஹோ’ என்றே செய்யவேண்டியது உங்கள் பொறுப்பு*. இதைவிட ஜன்மா எடுத்ததற்கு ப்ரயோஜனமாக நீங்கள் செய்யக்கூடிய தொண்டு இல்லை.
இப்போது அத்யயனம் செய்த ப்ராம்மணர்கள் எங்கேயோ சில இடங்களில்தான் இருக்கிறார்கள். அவர்களிடம், “யாருக்காவது நீங்கள் சொல்லிவைக்கக்கூடாதா?” என்றால், “யாருக்காவது என்றால் யார் வருகிறார்கள்? ‘தட்டு தூக்கினாலும் தூக்குவோம், இதற்கு வரமாட்டோம். இதில் கால் வயிற்றுக் கூழுக்குக்கூட வழியில்லை என்று நன்றாகத் தெரிந்துகொண்டுள்ள நீங்களே எங்களைக் கூப்பிடுகிறீர்களே!’ என்று கேட்கிறார்கள். இனிமேல் யாராவது வந்தால் சொல்லிக் கொடுப்பதற்கு எங்களுக்கே ஞாபகமிருக்குமா என்று ஸந்தேஹம்” என்று பதில் சொல்கிறார்கள்! இவர்கள் தங்கள் வித்யையை அபிவ்ருத்தி செய்துகொள்ள வசதி செய்து தராமல், வாஸ்தவமாகவே அடியோடு மறந்து போகவிட்டால் அதைக்காட்டிலும் நமக்கு அபகீர்த்தி இல்லை.
* இது தொடர்பாக, இரண்டாம் பகுதியில் “வேதம்” என்ற பேருரையில் கடைசி ஐந்து உட்பிரிவுகள் பார்க்க.