வேத பாஷ்யம், வேதாங்கம், வேதாந்தம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

எத்தனை வித்யைகள் இருந்தாலும் முடிவாக ப்ரஹ்ம வித்யையில்தான் சேர்க்க வேண்டும். பகவான், “நான் வேதத்தில் ஸாமம், மலைகளில் மேரு, மரங்களில் அரசமரம், மிருகங்களில் சிங்கம், பக்ஷிகளில் கருடன். மாதங்களில் மார்கழி” என்றெல்லாம் கீதையின் விபூதியோகத்தில் சொல்லிக்கொண்டு போகும்போது, “வித்யைகளில் நான் ஆத்ம வித்யையான ப்ரஹ்ம வித்யை” என்று சொல்லியிருக்கிறார்.

அத்யாத்ம வித்யா வித்யாநாம்“.

மடம் ஏற்பட்டிருப்பதும் முடிவாக அதற்குத்தான். அதனால் வேத அத்யயனம் மட்டுமில்லாமல், அதன் அர்த்தத்தை அறிவதான வேத பாஷ்யம், அதற்கு அவயவமாகச் சேர்ந்து வரும் வேதாங்கங்கள், முடிவான ஆத்மவித்யையேயான உபநிஷத்துக்கள் (அதாவது வேதாந்தம்) ஆகியவற்றின் ப்ரசாரத்திலேயே மடம் குறிப்பாக அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறது. இன்னமும் நிறைய எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது செய்திருப்பது போதவே போதாது.

எனக்கு ஆசை, இப்போது பாடசாலைகள் என்பதாக வேத அத்யயனத்துக்கு என்று ஏற்பட்டிருக்கும் எல்லாவற்றிலுமாவது வேதம் ஸம்பந்தப்பட்ட மற்ற வித்யைகளையும் சாஸ்திரங்களையும் சொல்லிக்கொடுத்து ப்ரசாரம் செய்ய வேண்டும் என்பது. இப்படி மேலும் அநேக பாடசாலைகளும் புதிதாக வைக்க வேண்டும்.

சென்ற சில தலைமுறைகளில் வேதவித்யை முழுதுமே மங்கிக்கொண்டு வந்திருப்பதில் ரொம்பவும் மங்கிப் போய் விட்ட ஒரு பிரிவு உண்டு. அதாவது வேதத்தில் அத்யயனம் சொல்லிவைக்கவாவது (வேத ஸம்ஹிதைகளின் டெக்ஸ்ட்டை மாத்திரம் உருப்போட்டு மனப்பாடம் பண்ணிவைக்கவாவது) ஏதோ சில பாடசாலைகள் இருக்கின்றன; ஆனால் அவற்றின் அர்த்தத்தைச் சொல்லிக்கொடுக்கும் பாடசாலைகள் மிகமிக அபூர்வமாகிவிட்டன. கனபாடிகளிலேயே பலருக்குக்கூட வேதத்தைச் சொல்லத்தான் தெரிகிறதே ஒழிய, அதற்கு அர்த்தம் சொல்லத் தெரியாமலிருக்கிறது. இதற்காகத்தான் வேதம் படித்தபின் வேதபாஷ்யமும் படித்துப் பரீக்ஷை கொடுக்க ஏற்பாடுகள் செய்துவருகிறது. இதில் எல்லாருடைய ஒத்துழைப்பும் தேவை.

இது நேராக வேதத்தைப் பற்றியது. வேத அங்கங்களையும் மறுபடி நல்ல ப்ரசாரத்துக்குக் கொண்டுவர முயல வேண்டும். குறிப்பாக வேதாங்கங்களில் வ்யாகரணம், வேதாங்க ஜ்யோதிஷத்தின் வளர்ச்சியாகப் பிற்பாடு அபிவிருத்தி கண்ட வான சாஸ்திர, கணித சாஸ்திரங்கள் ஆகியவற்றை இப்படி ப்ரகாசப்படுத்தவேண்டும்.

வேத உபாங்கங்களான நாலில் மீமாம்ஸை என்பதில் உத்தரபாகமாக “வேதாந்தம்” என்பது வந்துவிடுகிறது. சங்கர மதம், ராமாநுஜ மதம், மத்வ மதம் எல்லாமே வேதாந்தத்தின்கீழ் வருபவைதான். இந்த மடத்தைப் பொருத்தமட்டில் அத்வைத வேதாந்தத்தைப் போஷிப்பது முக்ய கார்யமாக இருப்பதால் அதற்கென்று ஸதஸ்கள் நடத்துகிறோம். சென்ற நூற்றாண்டுக் கடைசியிலிருந்தே அத்வைத ஸபா என்பது மடத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஸம்ப்ரதாயத்துக்கான புஸ்தகங்கள் போடுவதற்கும் ஆதரவு தருகிறோம். இப்படியே ராமாநுஜ, மத்வ மடத்தினர் விசிஷ்டாத்வைத, த்வைத வேதாந்தங்களை ரக்ஷித்து ப்ரசாரம் செய்துவருகிறார்கள். (நான் உண்மையைச் சொல்லவேண்டுமானால் ஸ்மார்த்தர்களுக்கு அத்வைத ஸம்பரதாயத்திலும் அதையொட்டியுள்ள ஸமயாசாரத்திலும் இருப்பதைவிட மாத்வ, வைஷ்ணவர்களுக்கு அவர்களுடையதில் பிடிமானம் மிகவும் அதிகம்.)

வேதாந்தம் – ஸித்தாந்தம் என்று பிரித்துச் சொல்வது வழக்கமானாலும் சைவஸித்தாந்தமும் வைதிக மதமாக, வேதாந்த அடிப்படையின் மேல் உருவானதுதான். அதை ஆதீனகர்த்தர்கள் போஷித்து வருகிறார்கள். இன்னம் இப்படியே சைதன்யர், நிம்பார்க்கர், வல்லபர் முதலானவர்களின் ஸம்பரதாயங்களும் அவற்றின் மடாலயங்களால் ரக்ஷிக்கப்பட்டு வருகின்றன.

யூனிவர்ஸிடிகளில் “ஃபிலாஸஃபி” என்று இருப்பது முக்கியமாக வேதாந்த ஸம்ப்ரதாயங்களைப் பற்றியதுதான். லோகம் முழுதிலுமே, ஸமய ஆசரணையைவிட தத்வ விசாரம் முக்யமுள்ளதால் வேதாந்தம்தான் நாளுக்கு நாள் பிரபலமடைந்து வருகின்றது. வேதாந்த ஸம்ப்ரதாயங்களிலுங்கூட ‘தீயிஸம்’ (தெய்வக் கொள்கை, வழிபாட்டு முறை) முதலியவை இல்லாத சுத்த தத்வ விசாரமாயுள்ள அத்வைதந்தான் அகில உலக ரீதியில் ப்ரஸித்தமாயிருக்கிறது. இப்படி வேதாந்தம் என்றாலே அத்வைதம்தான் என்று நினைக்கப்படுகிறதே என்று மற்ற ஸம்ப்ரதாயக்காரர்கள் வருத்தம், கோபங்கூட படுகிறார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும். யூனிவர்ஸிடிகளின் புண்யத்தில் மற்ற சாஸ்திரங்களைவிட வேதாந்தம் சற்று ஜீவசக்தியோடு இருக்கிறது என்று சொல்ல வந்தேன்.

ஆனால் இதிலும்கூட ஆசார அநுஷ்டானத்துக்கு இடமேயில்லாமலும், ரிஸர்ச் என்ற பெயரில் பூர்விகர்களின் அபிப்ராயத்துக்கும் நம்பிக்கைக்கும் மாறான அநேக அபிப்ராயங்களைச் சொல்வதாகவும், திறந்த மனஸோடு ஸயின்டிஃபிக்காக ஆராய்வதாகச் சொன்னாலும், இந்த ரிஸர்ச்காரர்களிலும் சிலர் biased -ஆகத்தான் தங்கள் தியரிகளை உருவாக்குவதாகவும் இருப்பதால் யூனிவர்ஸிடிகள் செய்கிற வேதாந்த ப்ரசாரத்தில் பூர்ண த்ருப்திப்படுவதற்கில்லாமலிருக்கிறது.

அத்வைதத்திலும்கூட pure metaphysics -ஐ (சுத்த தத்வத்தை) மற்ற தேசத்துக்காரர்கள் மெச்சி, தங்களால் முடிந்தவரை அப்யஸித்துப் பார்க்கட்டும். இதிலே ஜன்மாந்தர விசேஷமுள்ள அபூர்வமான சிலர் வேண்டுமானால் ஸித்தியும் பெறக்கூடும். ஏனென்றால், ஏதோ ஜன்மாந்தர விசேஷந்தானே அந்த விதேசிகளை இதிலே இழுத்திருக்கிறது? ஆனால் நம்மவரைப் பொறுத்தமட்டில் வைதிக ஆசாரமில்லாமல், கர்மாநுஷ்டானமில்லாமல் ‘அத்வைதா’, ‘அத்வைதா’ என்று ரிஸர்ச்சாகவும், லெக்சராகவும், புஸ்தகமெழுதுவதாகவும் எத்தனைதான் பண்ணினாலும் வாஸ்தவத்தில் அந்த அநுபவத்தின் கிட்டேயே போகாமல் அறிவுமட்டத்தில் அலசியதாக மாத்திரந்தான் விஷயம் முடியும். அத்வைதத்தை ஸ்தாபித்த ஆசார்யாள் கர்மாநுஷ்டானத்தாலும், ஈச்வரோபாஸனையாலும் (இன்ன மூர்த்திதான் என்று மற்ற ஸம்ப்ரதாயஸ்தர்களைப் போல ஒன்றை மட்டும் கொள்ளாமல், எல்லாவற்றுக்கும் மூலமான பரமாத்மாவை ஏதோ ஒரு ரூபத்தில் செய்கிற உபாஸனையாலும்) தான் ஒருத்தன் சுத்தியாகி தத்வ விசாரத்துக்கு வரவேண்டும் என்று தீர்மானமாக விதித்திருக்கிறார். இவற்றுக்கு யூனிவர்ஸிடிப் படிப்பில் எங்கே இடம்? ஆனபடியால் வேதாந்த சாஸ்திரங்களிலும் ஸம்ப்ரதாய வித்வான்களை ஆதரித்து, அவர்களிடமிருந்து ஸம்ப்ரதாய பூர்வமாக சிஷ்யர்கள் சிக்ஷை பெற ஏற்பாடு செய்யவேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is அவர்கள் தியாகமும் நமது தியாகமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  பல ஸித்தாந்த ஒப்புவுமை
Next