பல ஸித்தாந்த ஒப்புவுமை : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இதிலே ஒன்றுமட்டும் கொஞ்சம் புதிதாக அபிவ்ருத்தி செய்துகொள்ள வேண்டும். ‘கம்பேரடிவ் ஸ்டடீஸ்’ என்பதாக யூனிவர்ஸிடிகளில் ஒரு ஃபிலாஸபி ஸிஸ்டத்தை மட்டுமில்லாமல் பலவற்றைப் படித்து ஒன்றுக்கொன்று எப்படி மாறுபட்டுப் போகிறது, எப்படி எத்தனையோ இடங்களில் அவை ஒப்புதலாகவும் போகின்றன என்று அறாய்கிறார்கள். இது ச்லாகிக்கவேண்டிய ஆராய்ச்சி. ஸம்ப்ரதாய முறையிலும் இதர ஸம்ப்ரதாய அபிப்ராயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டித்தான் இருக்கிறது. ஏனென்றால் எந்த ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்த எந்த சாஸ்திரத்தை எடுத்தாலும் அதிலே மற்றவர்களின் கொள்கைகளைச் சொல்லி அவற்றைக் கண்டித்துத்தான் ஸ்வபக்ஷத்தை (தன் கட்சியை) நிர்த்தாரணம் செய்திருக்கும். பூர்வபக்ஷத்தில் (எதிராளியின் கட்சியில்) ஆரம்பித்து அவர்கள் கருத்தை டெவலப் செய்தபின்தான் ஸ்வபக்ஷத்தை நாட்டவேண்டுமென்பதே நம் சாஸ்திரக்காரகர்கள், முக்யமாக பகவத்பாதாள், கைக்கொண்ட முறை. ஆனால் தற்போது ஸம்ப்ரதாயப்படிப் படிப்பவர்கள், ஏற்கனவே சாஸ்திரக்காரர்கள் மற்ற ஸித்தாந்தங்களில் என்ன Quote செய்கிறார்களோ அதற்கு மேல் தாங்களாக அந்த சாஸ்திரங்களைப் பார்ப்பதில்லை. அவற்றை இன்னமும் ஊன்றிப் பார்க்கவேண்டும். பிற ஸித்தாந்தங்களை இன்னம் நன்றாக அறிய வேண்டும். கொஞ்சங்கூட ஸொந்த அபிப்ராயங்களினாலும் அபிமானங்களினாலும் prejudice ஆகாமல் ஸத்ய தத்வத்தை அறிவதற்கு இது உதவும். அவரவருடைய பக்வ ஸ்திதியைப் பொறுத்துத்தான் அறிவு வாதமும்கூட ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு முடிவைக் காட்டும், அறிவால் ஒரு விதமான முடிவுக்கு வந்தாலுங்கூட அவரவருக்கும் இதற்கு ஸம்பந்தமில்லாமல்கூட எது மனஸுக்குள்ளே நன்றாகத் தைக்கிறதோ அதைத்தான் ஒருத்தர் பின்பற்றுவார், கடைசியில் பார்த்தால் ஆத்மஸத்யம் என்பது அறிவு வாதங்களுக்கு அப்பாற்பட்டது – என்பதெல்லாம் நிஜந்தான். ஆனாலுங்கூட சாஸ்திரப் படிப்பு என்று ஒன்றை மேற்கொள்கிறபோது அதில் நல்ல தேர்ச்சியை ஸம்பாதித்துக் கொள்வதற்கு நான் சொன்னபடி அவரவரும் தங்களுக்குப் பிடித்த ஸம்ப்ரதாயத்தைத் “தரோ”வாகத் தெரிந்து கொள்வதோடு, மற்றவற்றையும் அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் ஒரளவு நன்றாகவே தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் முடிவாக ஒப்புக்கொள்ள முடியாத ஸித்தாந்தங்களிலும் அறிவிலே பெரியவர்களாக வந்திருப்பவர்களின் பெருமையைத் தெரிந்துகொள்ள முடியும். “நம்முடையதுதான் அப்படியே உசத்தி, மற்றது ஒன்றும் இல்லாதது” என்ற குறுகல் பார்வை அறிவுலகத்தில் கூடாதாகையால் சொல்கிறேன்.

பழைய முறையில் அமைக்கிற கலாசாலைகளில், நல்ல இங்கிலீஷ் ஞானமுள்ள சிலர் நம் தேச ஃபிலாஸஃபிகளை மட்டுமில்லாமல், மற்ற தேச ஃபிலாஸஃபிகளையும்கூட இப்படிச் சேர்த்துப் படித்து ஆராய்ச்சி செய்து, புஸ்தகம் போட்டு, அவற்றின் ஸாரத்தையாவது இக் கலாசாலை வித்யார்த்திகளுக்கு தெரிவிக்கும்படியும் செய்யலாம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is வேத பாஷ்யம், வேதாங்கம் வேதாந்தம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  புராணம்
Next