ஆகம சாஸ்திரம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இதெல்லாம் போக, மந்த்ர சாஸ்த்ரம் என்பது அதுபாட்டுக்கு ஒரு ஸமுத்ரமாக விரிந்து கிடக்கிறது. (அதில் ‘மந்த்ர மஹோததி’ என்றே ஒரு புஸ்தகத்துக்குப் பெயர். மஹோததி என்றால் மஹா ஸமுத்ரம்.)

மந்த்ர சாஸ்திரத்தோடேயே ஆகம சாஸ்திரம் வருகிறது. மந்த்ர பூர்வமாக தெய்வ ஸாந்நித்யத்தை உண்டாக்கித் தரவே ஏற்பட்ட ஆலயங்களைப் பற்றிய விஷயங்கள் ஆகம சாஸ்த்ரத்திலிருப்பவைதான். ஆலயம் எப்படிக் கட்டுவது, மூர்த்திகளை எப்படி ப்ரதிஷ்டை செய்வது, பூஜை எப்படி, எந்தெந்த மூர்த்திக்கு எப்படியெப்படி வழிபாடு என்றெல்லாம் நிறைய்…ய ஸமாசாரங்கள் ஏராளமான ஆகமங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. அத்தனை பொதுஜனங்களையும் பரமாத்மாவோடு சேர்த்து வைப்பது ஆலயம்தான். அதனாலேயே இந்த சாஸ்த்ரத்தை விசேஷமாக விளங்கச் செய்யவேண்டுமென்பதில் எனக்கு ரொம்பவும் அக்கறையும் கவலையும் இருக்கின்றன. அதனால்தான் தற்போது இருக்கப்பட்ட விஷயஜ்ஞர்களான சிவாசார்யார்கள், பட்டர்கள் ஆகியவர்களைத் தருவித்து ஆகமத்துக்கு ப்ராதான்யம் கொடுத்துச் சில வருஷங்களாக பெரிய ஸதஸ்கள் நடத்துவது. அரசாங்கத்திலும் ஆகமக் கலாசாலைகள் வைத்து ஊக்கம் தந்திருக்கிறார்கள். ஆனால் சாஸ்திரப்படிப் போக வேண்டுமென்பதைவிட, தற்போது ஸம்பந்தா ஸம்பந்தாமில்லாமல் எதையெடுத்தாலும் அதில் ஜாதி ஸமத்வத்தையும் தாய் பாஷையையும் நிலைநாட்டவேண்டுமென்பதே அரசியல்காரர்களுக்கு முக்யமாயிருப்பதால் இது எந்த அளவுக்கு, எத்தனை காலம் சாஸ்திரோக்தமாக நடக்குமென்று சொல்லமுடியவில்லை. இந்த சாஸ்திரங்களிலும் குருகுல முறையில் ஒரு பட்டரிடமோ, சிவாசாரியாரிடமோ நாலு பசங்கள் படிக்கும் ரீதியில் ஏற்பாடு செய்தால் ஆகம சாஸ்த்ரங்கள் அவற்றின் ஒரிஜினல் ஸ்பிரிட்டோடு) (அதுதான் அவற்றின் நிஜ ஸ்பிரிட்டும்!) ப்ரகாசிக்கும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is புராணம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  வாஸ்து சாஸ்த்ரம்
Next