ஸத்ராஜித் ஸூர்ய பகவானிடம் பக்தியுள்ளவனென்று சொல்லிக் கொண்டிருந்தேன். அவன் ஸமுத்ரக் கரையில் தன் இஷ்டமூர்த்தியைக் குறித்துக் கடுமையான தபஸ் பண்ணினான். ஸூர்ய பகவான் ப்ரஸன்னமானார். “என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார்.
அவர் கழுத்தில் பளபளவென்று ஒரு மணி போட்டுக் கொண்டிருந்தார். அதற்குத்தான் ‘ஸ்யமந்தகம்’ என்று பெயர். அது பார்க்க ஒரே ஜ்வலிப்பாயிருப்பதோடு, பரம ச்ரேயஸ்கரமானது, ஐச்வர்ய ப்ரதானமானது (ஐச்வர்யத்தைக் கொடுக்கவல்லது) என்று ஸத்ராஜித்துக்குத் தெரியும்.
அதனால், என்ன வரம் வேணும் என்று கேட்டவுடன் அவன், “நீங்கள் போட்டுக்கொண்டிருக்கிற ஸ்யமந்தக மணியை எனக்கு அநுக்ரஹிக்கணும்” என்று ப்ரார்த்தித்துக் கொண்டான்.
தெய்வங்கள் ‘வரம் தருகிறேன்’ என்று சொல்லிவிட்டால், அப்புறம் பக்தன் எதைக் கேட்டாலும், ‘ஆஹா’ என்று கொடுத்துவிடும். ஸூர்ய பகவான் தன் கழுத்திலிருந்த ஸ்யமந்தக மணியை உடனே கழற்றித் தாமே ஸத்ராஜித்தின் கழுத்தில் போட்டுவிட்டார்.
“என்னுடைய இன்னொரு ரூபம் மாதிரியே ப்ரகாசமாயிருக்கும் இந்த மணி இருக்கிற இடத்தில் வ்யாதி, வ்யஸனம் எதுவும் இருக்காது. அதோடு, இது இருக்கும் க்ருஹத்தில் எட்டு பாரம் ஸ்வர்ணம் உண்டாகும். ஆனால் இத்தனை ஸம்பத்துக்களைப் பெறுவதற்குப் பாத்ரனாக இதை தரித்துக் கொண்டிருப்பவன் உள்ளும் புறமும் பரிசுத்தமாயிருக்க வேண்டும். ஆசௌசம் (மடித்தப்பு) ஏற்பட விடக்கூடாது. சுத்தம் தப்பினால் பெரிய ஹானி உண்டாகும்” என்று எச்சரிக்கை செய்துவிட்டு, மறைந்துபோய் விட்டார்.
பளபளவென்று ஜ்வலிக்கிற ஸ்யமந்தக மணியைப் போட்டுக்கொண்டு ஸத்ராஜித் ஊருக்குத் திரும்பி வந்தான். த்வாரகை ஜனங்களுக்கு அதனுடைய பெரிய Glare-ல் அதைப் போட்டுக்கொண்டிருக்கிற ஆசாமியே கண்ணுக்குத் தெரியவில்லை. ஜ்யோதி ப்ரகாசம் மட்டுந்தான் தெரிந்தது. தெருவோடு இப்படி ஒரு ஜ்யோதிஸ் போகிறதை ஆச்சர்யத்துடன் பார்த்து, ஸூர்ய பகவானேதான் க்ருஷ்ண பரமாத்மாவை தரிசிப்பதற்காக வருகிறார் போலிருக்கிறது என்று நினைத்தார்கள். அப்புறம் ரொம்பக் கிட்டத்தில் பார்த்தபின்தான் ஸத்ராஜித்தை அடையாளம் கண்டுகொண்டு, அவனிடம் பேசி, ஸூர்ய ப்ரஸாதமாக அவனுக்கு ஸ்யமந்தக மணி கிடைத்திருப்பதைத் தெரிந்து கொண்டார்கள்.
க்ருஷ்ணர் ரஸிகரானதால் அந்த மணியின் அழகை ரொம்பவும் ச்லாகித்தார். அவர் புகழ்ந்ததைக் கேட்ட ஸத்ராஜித்துக்கு, அந்த மணி தனக்கே வேண்டுமென்று பகவானக்கு ஆசை வந்துவிட்டது என்று தோன்றிவிட்டது.