வெளியிலே எத்தனை கூத்தடித்தாலும், ஜார சோர சிகாமணி என்னும்படியாக வெண்ணெயைத் திருடுவது, கோபஸ்த்ரீகளோடு ராஸலீலை பண்ணுவது, பதினாறாயிரம் பத்னிகளோடு குடும்பம் நடத்துவது என்றெல்லாம் பண்ணினாலும், உள்ளுற ஒன்றிலும் ஒட்டாமல், ஆசாபாசமேயில்லாமலிருந்த பரமஞானி, பரப்ரஹ்ம வஸ்து கிருஷ்ண பரமாத்மா, கம்ஸனை வதம் பண்ணினவுடன் அவர் தமக்கே ராஜ்ய பட்டாபிஷேகம் செய்து கொண்டிருக்க எல்லா நியாயமும் உண்டு. அவரிடம் அப்படியே மோஹித்துப் போயிருந்த மதுரா ஜனங்களும் அவர் தங்களுக்கு ராஜாவாகிறாரென்றால் ரொம்ப ஆனந்தப்பட்டுத்தானிருப்பார்கள். ஆனாலும் ராஜ்யாதிகாரத்தில் ஆசையில்லாத அவர் கம்ஸனின் தகப்பனாரான உக்ரஸேனனைத்தான் ராஜாவாக்கினார். உக்ரஸேனன் இவருக்கும் தாய்வழிப் பாட்டனார். சொந்தப் பாட்டனார் இல்லை. அம்மா தேவகிக்குச் சிற்றப்பா. கம்ஸவதம் ஆன அப்புறம் பகவான் மதுராவை விட்டுவந்து சின்ன ராஜ்யமாக த்வாரகா நிர்மாணம் பண்ணிக்கொண்டு ‘த்வாரகாதீசன்’ என்னும் படியாக வாழ்ந்தபோதுங்கூட, தம்மை அதற்கு ‘ஸாவரின்’ என்னும் தனி ராஜாவாக ப்ரகடனம் பண்ணிக்கொள்ளவில்லை. அண்ணா பலராமருக்கு த்வாரகையில் உயர்ந்த ஸ்தானம் கொடுத்துத் தாம் இரண்டாவதாகவே இடம் எடுத்துக் கொண்டார். பூர்ணாவதாரமாயிருந்தும் இப்படி அடக்கமாகவும், பொருளாசையற்ற வைராக்யத்துடனும் க்ருஷ்ணர் வாழ்ந்து காட்டினார்.
அம்ருதம் கடைந்து மஹாலக்ஷ்மி உத்பவித்து மஹாவிஷ்ணுவைப் பதியாக வரித்த இடத்திலேயே இப்படித்தான் (பாகவதத்தில்) மஹாவிஷ்ணுவைப் பற்றிச் சொல்லியிருக்கிறது. அவர் மண்ணாசை பொன்னாசை மாதிரியே பெண்ணாசையும் கொஞ்சங்கூட இல்லாதவர். பாக்கி எல்லா தேவர்களும் லக்ஷ்மி தனக்கு மாலைபோட மாட்டாளா, தனக்கு மாலை போடமாட்டாளா என்று தவித்துக் கொண்டிருந்தபோது மஹாவிஷ்ணு மட்டும் பரம வைராக்யமாக அவர் பாட்டுக்கு ஒதுங்கி உட்கார்ந்து கொண்டிருந்தாராம். அதனாலேயே ‘இத்தனை த்ருடமனஸ் உள்ளவரைப் பதியாய் அடைந்து அவருடைய ப்ரேமையையும் பெறும்படியாக நாம் வாழ்ந்து காட்டினால்தானே நமக்குப் பெருமை?’ என்று லக்ஷ்மி நினைத்து அவருக்கே மாலை போட்டாளாம். அவருக்கு எத்தனைக்கெத்தனை வைராக்யமுண்டோ அத்தனைக்கத்தனை கருணையும் உண்டாதலால் உடனே அவளைத் தூக்கி மார்பிலேயே வைத்துக் கொண்டுவிட்டார்!
க்ருஷ்ணர் ஆசையேயில்லாதவரென்று சொல்லவந்தேன். தானாகவே அவரைத் தேடிக்கொண்டு எல்லா ஐச்வர்யங்களும் வந்தன. மஹாவிஷ்ணுவின் சங்கு சக்ரம் கருடன் எல்லாம்கூட அவரிடம் அவ்வப்போது வந்ததாகப் பார்க்கிறோம். ராமர்கிட்டே இப்படி எதுவாவது வந்ததோ? இதேபோல மஹாவிஷ்ணு தரித்துக் கொண்டிருக்கும் கௌஸ்துப மணியும் க்ருஷ்ணர்கிட்டேதான் வந்தது. ‘கஸ்தூரி திலகம் லலாட பலகே வக்ஷஸ்தலே கௌஸ்துபம்‘ என்று பாடுகிறோம். அப்பேர்ப்பட்ட திவ்ய கௌஸ்துபத்தைப் போட்டுக் கொண்டிருப்பவருக்கு ஸ்யமந்தகத்திடம் எதற்கு ஆசை வரப்போகிறது?
ஸ்யமந்தகத்தை ஸத்ராஜித் தந்தால் தரட்டுமே என்று த்வனிக்கும்படியாக அவர் கொஞ்சம் பேசியிருந்தால் கூட, உக்ரஸேன மஹாராஜாவுக்கு அதை அவன் தரலாமே என்ற அபிப்ராயத்தில்தான் சொன்னாரே தவிர, தமக்காகச் சொல்லிக் கொள்ளவில்லை. அதுவுங்கூட தேசம் முழுவதன் க்ஷேமத்தை உத்தேசித்துத்தான் இப்படி Hint பண்ணினாரே தவிர, பாட்டனாரிடமிருந்த ப்ரியத்துக்காக அல்ல. ஸத்ராஜித் ஒரு தனி ப்ரஜை. ஆனபடியால், ஸ்யமந்தகம் அவனிடமிருந்தால் அது அளிக்கக்கூடிய மங்களங்கள் – ஆரோக்யம், எட்டு பாரம் தங்கம் முதலானதுகள் – அவன் குடும்பத்துக்கு மட்டுந்தான் போகும். அதுவே ராஜாவிடமிருந்தால் இந்த நன்மைகள் தேசம் பூராவுக்கும் சேருமே என்பதால்தான் சொன்னார்.
அர்த்த சாஸ்த்ரபடி, ஒரு தனி ஆஸாமியிடம் ராஜாவுக்கு இல்லாத ஒரு பெரிய ஸொத்து இருந்தால் அவன் ராஜாவுக்கு மேற்பட்டவன் என்கிற எண்ணத்தை ஜனங்களுக்குக் கொடுத்து அவர்களை அராஜகத்தில் தூண்டக்கூடுமென்பதால் இதை அநுமதிக்கவில்லை. விலைமதிப்பிட முடியாத ரத்னங்கள் ராஜாவை சேர்ந்தவைதான் என்பது அர்த்தசாஸ்த்ரத்தின் முடிவு. “ராஜா ரத்நஹாரி” என்று வசனம்.
இந்த அபிப்ராயத்தில் பகவான் ஏதோ ஸூசனையாகச் சொல்லப் போகத்தான் ஸத்ராஜித், ‘ராஜாவுமாச்சு, மந்த்ரியுமாச்சு? இவன் பார்த்து வைத்த ராஜாதானே? தாத்தா வேறே! அவன் பேரைச் சொல்லி இவனே தட்டிக் கொண்டுபோகப் பார்க்கிறான்’ என்று நினைத்துவிட்டான்.
பொருளாசை எப்படியெல்லாம் புத்தியை பேதகமாக நினைக்க வைக்கும் என்பதுதான் இந்த உபாக்யானத்தின் ‘மாரல்’ (நீதி).
க்ருஷ்ணரைத் தப்பாக நினைத்ததோடு மட்டுமில்லாமல் அவரிடம் ஸத்ராஜித் பயப்படவும் செய்தான். ‘மஹாமல்லர்களான சாணூரன், முஷ்டிகன் முதலானவர்களை பால்யத்திலேயே கொன்றவன்; கம்ஸனை த்வம்ஸம் பண்ணினவன்; மஹாபராக்ரமசாலியான ஜராசந்தனை பதினேழு தடவை அடித்துத் துரத்தியவன். அதோடு எல்லாக் கபடமும் செய்யக்கூடிய மாயாவி. இப்படிப்பட்டவனின் விரோதத்தை ஸம்பாதித்துக்கொண்டால் எப்படி ஈடுகொடுக்க முடியும்?’ என்று பயப்பட்டான்.
ஸ்யமந்தகத்தை விடவும் மனஸில்லாமல், வைத்துக் கொள்ளவும் தைர்யமில்லாமல் அவஸ்தைப்பட்டான்.
பொருள் என்ன பாடுபடுத்தும் என்று நமக்கெல்லாம் காட்டும் கதை.
அப்போதைக்கு மணியைத் தம்பி ப்ரஸேனனிடம் கொடுத்து வைத்துக் கொஞ்சம் நிம்மதிப்படுத்திக் கொண்டான். அவன் இவனைவிட புத்திசாலி; பலிஷ்டனுங்கூட, அதனால் உபத்ரவத்தை அவனிடந்தான் கொஞ்சம் தள்ளி விடுவோமே என்று தள்ளிவிட்டான்.
தம்பி ப்ரஸேனன் ஸந்தோஷமாக அந்த ஸ்யமந்தகத்தைப் போட்டு கொண்டு வேட்டைக்குப் புறப்பட்டான். (கிருஷ்ணனோடேயேதான் அவன் வேட்டைக்குப் போனானென்று ஸ்காந்தக் கதை. இங்கே சொல்வது பாகவதத்தையும், விஷ்ணு புராணத்தையும் அநுஸரித்தது.)
ஸ்யமந்தகத்தைப் போட்டுக் கொண்டிருப்பவன் உள்ளும் புறமும் சுத்தமாயிருக்கவேண்டுமென்று நிபந்தனை அல்லவா? ஆனால் இவன் காட்டுக்குப் போன இடத்தில் ஒரு அசுசி ஏற்பட்டது. அப்புறம், பக்கத்தில் எங்கேயும் ஜலாசயம் இல்லாததால், இவன் கை, கால் அலம்பிக்கொள்ள முடியவில்லை. இப்படி சரீர பரிசுத்தி கெட்டுப்போயிருந்த ஸமயம் பார்த்து ஒரு சிங்கம் வந்து அவனை அடித்துப் போட்டுத் தின்று விட்டது. குட்டி ஸூர்யனைப்போல இருந்த ஸ்யமந்தகம் சிங்கத்தையும் வசீகரப்படுத்தியது.
இருட்டு மூடின காட்டைப் பட்டப் பகலாக்குகிற அந்த ரத்னத்தை கவ்விக்கொண்டு சிங்கம் போய்க் கொண்டிருந்தது.