வேதத்திலும் ஜனநாயக அம்சம்* : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

பழைய காலத்து ஆட்சி முறையைப் பற்றிப் பொதுவாக நமக்கு என்ன அபிப்ராயமென்றால், அதிலே பொது ஜனங்களுக்குக் கொஞ்சங்கூடப் பங்கே இல்லாமல் ராஜாவுக்கே எல்லா அதிகாரத்தையும் விட்டிருந்தது என்பதுதான். ராஜா என்றால் அந்த ஒரு ஆளைமட்டும் நினைக்காமல் அவனுடைய தர்பாரிலுள்ள ப்ரமுகர்களையும் குறிப்பாகக் கொள்கிறோம். ராஜா முக்யமாகவும் மற்றும் அவனுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், மந்திரி – ப்ரதானி ஆகியவர்களும் முடிவுகள் எடுத்து அதிகாரிகள் மூலம் அவற்றை அமல்படுத்தியதுதான் பழங்கால ஆட்சிமுறை என்று நினைக்கிறோம். வெள்ளைக்கார சரித்ர ஆசிரியர்கள் ஆராய்ச்சி என்ற பெயரில் தந்த்ரமாக நம்மை வளைத்துப் பழக்கப்படுத்தியிருப்பதில் சிலபேர் இன்னொன்றும் நினைக்கிறோம். அதாவது இந்த ராஜாக்களைப் பிராமணர்கள் தங்கள் கையில் போட்டுக்கொண்டு, தங்கள் இஷ்டப்படி, அதாவது தாங்களே உசத்தி என்று கொட்டம் அடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்க வசதியாகவே எல்லாம் செய்துகொண்டார்கள் என்பதாகவும் ஒரு எண்ணம் இருந்துவருகிறது.

பொதுஜனங்களுக்கும் ஆட்சியிலே பங்கு தருகிற ஜன நாயகம் என்பது மேல்நாட்டினர் சொல்லிக் கொடுத்துத்தான் நமக்குத் தெரியவந்ததென்று பொது அபிப்ராயம் இருக்கிறது.

ஆனால் வாஸ்தவத்திலோ வேதகாலத்திலிருந்தே ஸகல ஜனங்களின் அபிப்ராயமும் ப்ரதிபலிப்பதற்கு இடம் தந்துதான் ராஜ்ய நிர்வாஹம் நடந்து வந்திருக்கிறது. வேதத்திலே “ஸபாஸ, “ஸமிதி”, “விததா”, என்று இரண்டு, மூன்று அமைப்புக்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறது. இவற்றில் அறிஞர்களாக இருக்கப்பட்ட ஜனங்கள் கூடி ஆட்சி விஷயங்களைக் கலந்தாலோசித்து முடிவுகள் எடுத்ததாகவும் அவற்றுக்கு இணங்கவே அரசன் பரிபாலனம் செய்ததாகவும் தெரிகிறது. வெள்ளைக்கார சரித்திர ஆசிரியர்கள்கூட இவை பிராம்மணர்களால் மட்டுமோ, அல்லது பிராமண – க்ஷத்ரியர்களால் மட்டுமோ அமைந்ததாகச் சொல்லாமல், ஸகல ஸமூஹங்களுக்கும் ப்ரதிநிதித்வம் தருகிற ரீதியில்தான் அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது என்று சொல்கிறார்கள்.

‘நமோ நம’ என்று திரும்பத் திரும்ப வருவதாக “ருத்ரம்” என்று அபிஷேக காலத்தில் ஒரு ஸ்தோத்ரம் சொல்லப்படுகிறதே, அது வேதத்திலேயே வருவது – யஜுர் வேதத்தின் தைத்திரீய ஸம்ஹிதையில் வருவது. அதிலே இந்த லோகத்திலிருக்கப்பட்ட எல்லா சேதன, அசேதனங்களையும் சொல்லி, அவை ஒவ்வொன்றுக்கும் ‘நமோ நம’ என்று நமஸ்காரம் பண்ணப்படுகிறது.

எதனாலென்றால் அது ஒவ்வொன்றிலும் விச்வவ்யாபியான பரமாத்மா நிறைந்திருப்பதால். எல்லா சிவஸ்வரூபம் என்று இப்படிச் சொல்லிக்கொண்டே போகிறபோது, “ஸபைகளுக்கெல்லாம் நமஸ்காரம், ஸபாபதிகளுக்கெல்லாம் நமஸ்காரம்” என்று “நமோ நம” சொல்லியிருக்கிறது. ராஜாங்க கார்யங்களுக்காக ஏற்பட்ட மக்களுடைய ஸபையும், அதற்கு அக்ராஸனராக இருந்த ஸபாபதியுந்தான் இங்கே குறிப்பிடப்படுவது.

நம் காலத்தில் அநேக விதமான ஸபைகளைச் சொல்கிறோம் – அவற்றில் ஸங்கீத ஸபை முக்யமாயிருக்கிறது. “ஸபாவுக்குப் போறேன்” என்றால் கச்சேரிக்குப் போகிறான் என்றே அர்த்தம் செய்து கொள்கிறோம். ஆனால் வேத காலத்தில் அடைமொழி கொடுக்காமல் வெறுமே ஸபை என்று சொன்னால், அது இந்தக் காலத்தில் நாம் “சட்ட ஸபை” என்று அடைமொழி கொடுத்துச் சொல்கிறோமே, அந்த மாதிரியான ஒரு அமைப்புத்தான். ‘ஸபை‘ என்பது தமிழில் ‘அவை’ என்று ஆயிற்று.

ஜனங்களுக்கு நல்லது பண்ணுவதற்காகப் பல அறிஞர்கள் ஒன்றுகூடி ஒரு ஸபை ஏற்படுத்தினால் அது ஈச்வர ஸ்வரூபமே என்று மதித்து “ருத்ர”த்தில் அதற்கு நமஸ்காரம் தெரிவித்திருக்கிறது.

பரமேச்வரன் அர்சசாரூபத்தில் (விக்ரஹ உருவில்) பரிபூர்ணமாக விளங்கிக் கொண்டிருக்கிற சிதம்பரத்தில் அவருடைய ஸந்நிதிக்கு “ஸபை” என்றுதான் பெயர். அது “கனக ஸபை”. அது தவிர, தாம் ஆடிக்கொண்டே லோகங்களையெல்லாம், சேதனா சேதனங்களையெல்லாம் ஆட்டி வைத்துக்கொண்டு ஆட்சி நடத்துகிற அந்த த்ரிபுவன சக்ரவர்த்திக்கு இன்னும் நாலு ஸபை – ரஜத ஸபை என்று வெள்ளியில் ஒன்று, மதுரையில் இருப்பது; ரத்ன ஸபை என்று திருவாலங்காட்டில் இருப்பது; தாம்ர ஸபை என்று திருநெல்வேலியில் இருப்பது; சித்ர ஸபை என்று சிற்பங்களே இல்லாமல் சித்ரங்கள் மட்டும் நிறைந்திருப்பதாகத் திருக்குற்றாலத்தில் இருப்பது – என்றிப்படி மொத்தம் பஞ்ச ஸபைகள். இந்த ஸபைகளுக்கு preside பண்ணும் ‘ஸ்பீக்க’ராக, ஸபாபதியாக அவர் இருக்கிறார்! இல்லை, ஸ்பீக்கர் (பேசுபவர்) இல்லை, டான்ஸர் (ஆடுபவர்)!

அவரை நாம் ‘நடராஜா’ என்றே பொதுவில் சொல்கிறோமானாலும், தீக்ஷிதர்கள் சிதம்பர ஆலயத்தைக் குறிப்பிட்டு எழுதும்போது ‘ஸபாநாயகர் கோயில்’ என்றுதான் போடுவது வழக்கம். ஈச்வரன் ஸபாநாயகர் அல்லது ஸபாபதி மட்டுமில்லை, ஸபையுமே அவன்தான் என்று நமக்குக் காண்பித்துக் கொடுக்கவே வேத ஸ்துதியான ‘ஸ்ரீ ருத்ர’த்தில் ஸபைக்கும் நமஸ்காரம் சொல்லியிருக்கிறது. ‘Will of the people is the will of God’, ‘மக்கள் தீர்ப்பு மஹேசன் தீர்ப்பே’ என்பதெல்லாம் நம்மிடம் புதுசாக வந்து சேர்ந்திருக்கும் கொள்கைகள் இல்லை, ஆதிக்கு ஆதியான வேத காலத்திலிருந்து இந்த அபிப்ராயம் இருந்து வந்திருக்கிறது என்பதற்கு இது சான்று.

ராஜீய வ்யவஹாரங்களை ஆலோசித்து விவாதிக்கும் ஸபை அங்கத்தினர்களுக்கு நல்ல அறிவு, அதைப்போலவே உயர்ந்த சீலமான நடத்தை, ‘பாயிண்ட்’களை நன்றாக எடுத்துச் சொல்வதற்கு அவசியமான வாக்கு வன்மை ஆகிய மூன்றும் இருக்கவேண்டும் என்பதை வேதத்திலிருந்து தெரிந்துகொள்கிறோம். இந்த மூன்றையும் வேண்டும் ப்ரார்த்தனா ரூபமான அநேக மந்த்ரங்கள் வேதத்தில் இருக்கின்றன. ரிஷிகள் புத்தியிலும் பெரியவர்கள், ஒழுக்கத்திலும் பெரியவர்களென்று நமக்குத் தெரியும். இவற்றோடு நல்ல வாக்குச் சக்தியும் பெற்றுத் தாங்கள் ஸபைகளில் அங்கம் வகிக்கவேண்டும், அதன் வழியாக அரசாட்சிக்கும் மக்கள் நலனுக்கும் உதவவேண்டும் என்று அவர்களில் சிலர் விரும்பியிருக்கிறார்கள். “(விததா என்கிற) ஸபையில் வன்மையாகப் பேசும் சக்தி எங்களுக்கு வேண்டும்” என்று ரிஷிகள் ப்ரார்த்திக்கும் மந்த்ரங்கள் இருக்கின்றன.

“ருத்ரம்” என்று ப்ரஸித்தமாகச் சொல்லப்படும் ஸ்துதி – ஸபையையும் ஸபாபதியையும் பற்றிச் சொல்வது – யஜுர் வேதத்தில் வருகிறது. ரிக்வேதத்திலிருந்தும் ஈச்வரபரமான ஐந்து ஸூக்தங்களைச் சேர்த்துப் “பஞ்சருத்ரம்” என்று சொல்வார்கள். அதிலேகூட ஒரு இடத்தில் இந்த ப்ரார்த்தனை வருகிறது1. இப்படி புத்தி, குணம், வாக்கு மூன்றிலும் உயர்ந்தவனாக இருக்கப்பட்டவனையே “ஸபேயன்” அதாவது ஸபையில் மெம்பர்ஷிப் வஹிக்கத் தகுதி உள்ளவன் என்று சொல்லியிருக்கிறது. “ஸபேயன்” என்று ஒருத்தனைச் சொல்லிவிட்டால் போதும், அவன் குணஸம்பத்து, புத்திபலம், வாக்சக்தி மூன்றுமே உள்ளவன் என்று ஆகிவிடும். பிறப்பால் ஒருவன் ராஜாவாகிவிட்டால் போதாது, அவன் ஸபேயனாக இருக்கவேண்டும் என்று காட்டும் மந்த்ரங்கள் இருக்கின்றன.

மக்களுடைய நலனை ஆராய்ந்து, விவாதித்து முடிவுகள் எடுக்கவேண்டிய ஸபையைச் சேர்ந்தவர்கள் எப்படி ஒன்றுபட்டு செயலாற்றவேண்டும் என்பதை “ஸபேயர்”களுக்கு உபதேசிக்கும் ஒரு வேத ஸூக்தம் ரிக் வேதத்தின் முடிவிலே, பூர்த்தியாகும் இடத்தில் இருக்கிறது2. “உலகத்துக்கே முதல் நூலாக இருக்கப்பட்ட வேதத்தில் இத்தனை அழகாகச் சொல்லியிருக்கிறதே! இதையே U.N.-க்கு (ஐ.நா.ஸபைக்கு) motto-வாக (லக்ஷ்ய வாசகமாக) வைத்துவிடலாம்” என்று அறிஞர்கள் புகழ்கிறார்கள். “ஒன்று கூடுங்கள். ஒருவருக்கொருவர் திறந்து பேசி விவாதித்துக் கொள்ளுங்கள். லோக க்ஷேமம், மக்கள் நலன் ஒன்றே லக்ஷ்யம் என்பதில் உங்கள் எல்லாருடைய மனஸும் ஒத்துப் போகட்டும். ஒரே லக்ஷ்யத்துக்காக ஏக மனஸாகப் பாடுபட்டுப் பரஸ்பரம் ஹ்ருதயம் கலந்து ஒன்றாகுங்கள் ஐகமத்யத்தால் (மன ஒற்றுமையால்) எல்லோரும் இன்புற்றிருக்க வழி காணுங்கள்” என்று அந்த ஸூக்தத்தில் உபதேசித்திருக்கிறது.

பல ஸமூஹத்தினரும் இம்மாதிரி ஸபைகளில் ப்ரதிநிதித்வம் வஹித்துத்தான் நாட்டு நிர்வாஹம் நடந்திருக்கிறது. ப்ராமணப் புரோஹிதன் வைத்ததே சட்டமாயிருந்தது என்பது கொஞ்சங்கூட ஸரியில்லை. புரோஹிதனைப் போலவே க்ராமணி, ஸேநானி முதலான பலரையும் அரசாங்க கார்யங்களில் முக்யமானவர்களாகச் சொல்லியிருக்கிறது. க்ராமணி என்பவன் க்ராம வாழ்கையையும், அதாவது ஸிவில் வ்யவஹாரங்களையும், ஸேநானி என்பவன் மிலிடரி வ்யவஹாரங்களையும் கவனித்து வந்திருக்கிற அதிகாரிகளாகத் தெரிகிறது. ஸேநானி நிச்சயமாக பிராமணனில்லை, க்ஷத்ரியன்தான். ‘க்ராமணி’ என்று இப்போதும் உள்ள ஸமூஹமும் அப்ராமண ஜாதியாகத்தான் இருக்கிறது. ஆதியிலேயே இப்படி இருப்பதற்கு இடம் இல்லாவிட்டால் பிற்பாடு அப்படி ஆகி இருக்க முடியாது.

(‘க்ராமணி’ என்பதிலிருந்துதான் ‘க்ராம மணியம்’ என்பது வந்து, அப்புறம் மணியக்காரன் என்றே வார்த்தை ஏற்பட்டிருக்குமோ என்னவோ?)

ராஜ பட்டாபிஷேகத்தைப் பற்றிய வேத மந்த்ரங்களைப் பார்த்தால் ஜன ஸமூஹத்தின் ஒவ்வொரு பிரிவினரும் அவனைத் தங்கள் அரசனாக ஏற்று ப்ரகடனம் செய்திருக்கிறார்களென்று தெரிகிறது. இதில் முடியரசோடு குடியரசும் ஒருவிதத்தில் கைகோத்துக் கொண்டு போகிறதென்று சொல்லலாம்.


* இந்த வியாஸம் பல உரைகளின் தொகுப்பாயினும், இதன் மிகப்பெரும் பகுதி ஸ்வதந்திரம் வருவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன் 1945-லும், நாம் குடியரசாவதற்கு ஓராண்டு முன் 1949-ல் நமது அரசியல் நிர்ணயச் சட்டவிதிகள் உருவாகி நிறைவேற்றப்பட்டு வந்தபோதும் அருளப் பெற்றவை என்பதைக் கவனித்தோமாயின் ஸ்ரீ சரணர்களின் தீர்க்க த்ருஷ்டியை வியக்காமலிருக்க முடியாது.

1 ரிக்வேதம், 2.33-15

2 ரிக்வேதம், பத்தாம் மண்டலம், 191-வது ஸூக்தம்

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is அம்பாள் அருள்வாளாக
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஜாதி நாட்டாண்மை
Next