அந்தக் காட்டிலுள்ள ஒரு மலைக்குகையில் ஜாம்பவான் வாஸம் பண்ணிக் கொண்டிருந்தார். ராமாவதாரத்தின் போது ராவண யுத்தத்தில வானர ஸேனையோடுகூட ராமருக்கு ஸஹாயமாயிருந்த கரடித் தலைவரான அதே ஜாம்பவான்தான்.
கடைசியில் ராமர் ஸரயுவில் தம் சரீரத்தை விட்டு வைகுண்டத்துக்கு ஆரோஹணம் செய்தபோது, அத்தனை பேரையும் தம்மோடு பரமபதத்துக்கு அழைத்துக்கொண்ட போனாரென்றாலும் ஆஞ்ஜநேயர், ஜாம்பவான் ஆகிய இரண்டு பேரை மட்டும் விட்டுவிட்டுப் போய்விட்டார். ராம ஸ்மரணம் மாத்திரம் ஒருவனுக்கு ஸதாவும் இருந்து விட்டால் அவனுக்கு இந்த பாபமயமான, துக்கமயமான பூலோகமே பரமபதமாகத் தானிருக்கும் என்று ரூபித்துக் காட்டக்கூடிய யோக்யதை இவர்களுக்கு இருந்தது. ஆகையால், ‘இந்த உண்மையை உலகத்துக்குக் காட்டுவதற்காக இவர்கள் இங்கேயே சிரஞ்ஜீவியாக இருந்து கொண்டிருக்கட்டும்’ என்று நினைத்தார். அதனால் அவர்களை பூலோகத்திலேயே இருக்கும்படியாக ஆக்ஞாபித்து விட்டுப் போய்விட்டார். இதே மாதிரி விபீஷணனையும் லங்கையில் சிரஞ்சீவியாக இருந்து கொண்டருக்கும்படிப் பண்ணிவிட்டார்.
மநுஷ்ய ஜாதியை ரொம்பவும் உயர்வாகச் சொல்லிக் கொள்கிறோம். ஆனால் ராமசந்த்ரமூர்த்தி மநுஷ்ய ஜாதியைச் சேர்ந்த எவருக்கும் இப்படிச் சிரஞ்ஜீவித்வம் வஹிக்கும்படியான யோக்யதாம்சம் (யோகயதாம்சம் என்றால் வேறென்ன? ஸதா ஸர்வதா அவரையே ஸ்மரித்துக் கொண்டிருக்கும் த்ருட பக்திதான். அப்படிப்பட்ட யோக்யதாம்சம்) இருப்பதாக நினைக்கவில்லை. அஸுர ஜன்மா, ஒருத்தன் குரங்கு ஒன்று, கரடி ஒன்று என்று மூன்று பேரைத்தான் தம் பக்திக்கு சாச்வதச் சின்னங்களாக விட்டுப் போயிருக்கிறார்.
அச்வத்தாமா பலிர் வ்யாஸோ ஹநூமாம்ச்ச விபீஷண: |
க்ருப பரசுராமச்ச ஸப்தைதே சிரஜீவிந: ||
என்று ஏழு சிரஞ்ஜீவிகள் இருப்பதாக ச்லோகம். அச்வத்தாமன், மஹாபலி, வ்யாஸர், ஹநுமார், விபீஷணன், க்ருபர், பரசுராமர் என்ற இந்த ஏழு பேரில் ஜாம்பவான் இல்லாவிட்டாலும் அவரும் சிரஞ்ஜீவியாக இருந்து கொண்டிருப்பவர்தான். எந்த ஃபீல்டிலுமே (துறையிலுமே) பழம் தின்று கொட்டை போட்டவர்களை “ஜாம்பவானாச்சே!” என்கிறோமல்லவா?
அகஸ்த்யர், என்றும் பதினாறாயிருக்கும் மார்க்கண்டேயர் ஆகியவர்களும் (மேலே சொன்ன ச்லோகத்தில் குறிப்பிடப்படாவிட்டாலும்) சிரஞ்ஜீவிகள்தாம். த்ரேதா யுகத்து ராமர் காலத்திலிருந்து, த்வாபர முடிவில் இந்தக் கதை நடக்கும்போதும் இருந்த ஜாம்பவான் மணியைக் கவ்விக்கொண்டு வரும் சிங்கத்தைப் பார்த்தார். அவருக்கு அப்போது ஸுகுமாரன் என்று பெயர் கொண்ட ஒரு பிள்ளை குழந்தை இருந்தது. அத்தனை வயஸுக்கா ஒரு பிள்ளை என்றால் கரடி, அதிலும் சிரஞ்ஜீவி – அதைப் பற்றி எது, எப்படியென்று நமக்கென்ன தெரியும்? ஜ்வலித்துக் கொண்டிருக்கும் மணி தம் குழந்தைக்கு நல்ல விளையாட்டுப் பொருளாயிருக்கும் என்று நினைத்தார்.
உடனே மஹா பலசாலியான அவர் சிங்கத்தோடு சண்டை போட்டு அதைக் கொன்று விட்டார். மணியை எடுத்துக்கொண்டு போய்க் குழந்தையின் தொட்டிலுக்கு மேலே பொம்மையும் கிளிச்சட்டமும் கட்டித் தொங்கவிடுகிறது போல ஸ்யமந்தகத்தைக் கட்டி வைத்தார். (வாலி தன் பிள்ளை அங்கதனடைய தொட்டிலுக்கு மேலே ராவணனையே ‘பத்து தலைப் பூச்சி’ என்று சொல்லி கட்டி வைத்தானாம்!)
கண்ணைப் பறிக்கிற ஸ்யமந்தகத்தின் ஜொலிப்பும் கரடிக்குழ்தையானதால் அதற்கு கூசவில்லை. நம்மகத்துக் குழந்தைக்கு டார்ச்லைட் அடித்துக் காட்டினால் வேடிக்கையாயிருக்கிற மாதிரித்தான் கரடிக் குழந்தைக்கு மணி இருந்தது போலிருக்கிறது!