தேசத் தலைமைக்கு அரசன் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஆட்சி நடத்துபவர்களிடம் ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும். எனவே கட்டுப்படுத்த ஒரு தலைவன் வேண்டும். ஆளப்படுகிறவர்களுக்கும், தங்களுடைய நாடு என்பது மண்ணும் மலையும் நதியுமாக முடிந்துபோகாமல், அதனிடம் அன்பு, பக்தி, விச்வாஸம் எல்லாம் உண்டாக்குவதாக அதன் ரூபகமான (உருவகமான) ஒரு உயிருள்ள பிடிப்புவேண்டும். இந்த இரண்டு உத்தேசங்களுக்காகவும் ஆட்சியின் தலைவராக, தேசத்தின் தலைவராக ஒருத்தர் இருக்க வேண்டியதாகிறது. ராஜா என்று ஒருத்தனை அப்படி வைத்துக் கொண்டார்கள். பாரம்பர்யமாக இப்படிப்பட்ட ராஜாவை வைத்துக்கொண்டால்தான், குழந்தையாக அவன் பிறந்ததிலிருந்தே அந்தத் தலைமைப் பீடத்துக்கு வேண்டிய எல்லா யோக்யதாம்சமும் அவனுக்கு இருக்குமாறு பயிற்சி கொடுக்க முடியும் என்பதால் ராஜபதவியை hereditary -யாக வைத்துக் கொண்டார்கள். கற்றுக் கொடுத்துப் பயிற்சி பண்ணுவது மட்டுமில்லாமல், தன்னுடைய background (வாழ்க்கைப் பின்னணி) , சூழ்நிலை, ரத்தத்தோடு வந்த குணம் முதலியவற்றிலிருந்தே ராஜாவுக்கு இருக்கவேண்டிய அநேக அம்சங்களையும் தோரணைகளையும் ஒருவன் பெறுவதும் பாரம்பர்ய முறையில்தான் ஸாத்யமாகிறது.

அவன் மனம்போனபடிச் செய்யவிடாமல், தர்ம சாஸ்த்ரம், அர்த்த சாஸ்த்ரம், நீதி சாஸ்த்ரம் என்று ஏற்கனவே இருக்கப்பட்டவைகளை அநுஸரித்து, அவற்றுக்குக் கட்டுப்பட்டே ஆட்சி பண்ண வேண்டுமென்று வைத்தார்கள். ராஜகுரு, மந்த்ரிகள், புத்திமான்கள் ஆகியோரைக் கொண்ட அநேக விதமான ஆலோசனை ஸபைகளின் அபிப்பிராயங்களைக் கேட்டு, அதன்படியே ராஜா ஆட்சி நடத்த வேண்டுமென்று வைத்தார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is தகுதி தேவை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஊர்த் தலைமை
Next