ஊர்த் தலைமை : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இது ஒரு ராஜ்யம் பூராவுக்குமாகச் செய்த ஏற்பாடு. அப்புறம் ஒவ்வொரு ஊரிலும் ஊர்க்காரர்களுக்கு வேண்டிய வசதிகளை கவனித்துச் செய்து தருவதற்காக ஸ்தல நிர்வாஹம் என்று தனியாய் ஏற்பாடு செய்தார்கள். ஊருக்கு ஊர் ராஜா வைத்தால் நாடு என்று எல்லாரும் ஐக்யப்பட்டுப் பொதுவாகச் சேர்வதும், அதற்கான ஆட்சி பீடத்துக்கு உரிய மதிப்புத் தருவதும் குலைந்து போகும். அங்கங்கே தங்கள் கார்யங்களைத் தாங்களே நிர்வஹித்துக் கொள்ள ஜனங்களுக்கு ஸ்வதந்த்ரம் இருக்க வேண்டுமானாலும், ஒரு ஊர்க்காரர்கள் செய்வது இன்னொரு ஊர்க்காரர்களை பாதிக்காதபடி மேற்பார்வை செய்து ஊர் ஸபைகளை ஒற்றுமையாக ஒத்துப்போகும்படிச்செய்யவும், தேசம் பூராவுக்குமான கார்யங்களை கவனிப்பதற்கும், ராணுவத்தைக் கொண்டு சத்ருக்களிடமிருந்து ரக்ஷை தருவதற்கும், central authority (மத்ய அதிகார பீடம்) இருக்கத்தான் வேண்டும். ராஜா என்ற அதன் தலைவனும் இருக்கத்தான் வேண்டும். இதற்குக் குந்தகம் பண்ணுவதற்கு இடம் கொடுப்பதாக ஊருக்கு ஊர் ராஜா வைத்துக்கொள்ளக்கூடாது. ராஜாவைக் காட்டியே தேசாபிமானம் உண்டாக்கவேண்டியிருப்பதுபோல ஊர் விஷயத்தில் இல்லை. ஏனென்றால் நாட்டைவிட ஊர் என்பது ஜனங்களுக்கு நெருக்கமாக இருப்பது. ‘தங்கள் நாடு’ என்று இருப்பதைவிடத் ‘தங்கள் ஊர்’ என்பதில் அதிக அபிமானம் இயற்கையாகவே இருக்கும்.

முதலில் தான், அபபுறம் தன் குடும்பம், அதற்கப்புறம் தன் ஊர், பிற்பாடுதான் தன்நாடு என்று இருக்கிறது. ‘தன் உலகம்’ என்றே மனஸ் விஸ்தாரமாக வேண்டுமென்று பெரியவர்கள் சொல்கிறார்கள். அதிருக்கட்டும். நடைமுறையில் ஊருக்கு அப்புறம்தான் நாடு என்று இருக்கிறது. அதுதான் மநுஷ இயற்கை. தினமும் பார்த்துப் பழகுகிற ஆறு, குளம், கோவில், வயல், கடைவீதி, அன்றன்றும் பழகுகிற ஜனங்கள் ஆகியவர்களைக் கொண்டிருப்பதால், சொந்த ஊர் என்ற பாசம் ஏற்படுகிறது. பார்க்காத இடங்கள், பார்க்காத மநுஷ்யர்கள் உள்ள விஸ்தாரமான பரப்பு – அதாவது தேசம் – என்றால் அதனிடம் இத்தனை பிடிப்பு ஏற்பட முடிவதில்லை. எதற்குச் சொல்கிறேனென்றால், தேசம் என்ற ஒன்றிடம் புதுசாகப் பிடிமானத்தை ஏற்படுத்தித் தருவதற்காக அதற்கு ‘ஸிம்ப’லாக உயிருள்ள ஒருத்தனை ராஜா என்று வைக்க வேண்டியிருப்பது போல, இயற்கையாகவே ஜனங்களுக்குப் பிடிமானமுள்ள ஊரில், அதாவது ஸ்தல ஆட்சியில் ஒருத்தனை வைக்க வேண்டிய அவச்யமிருக்கவில்லை. ராஜாக்கள் என்று பலபேரை அந்தந்த ஊர் ஜனங்களின் விசேஷ மரியாதை – விச்வாஸங்களைப் பெறும்படி வைத்துவிட்டாலே தேசம் பூராவுக்கும் இருப்பவனின் அதிகார ஸ்தானத்தையும் ‘இமேஜை’யும் அது ‘வீக்’காக்கிவிடும். (பலஹீனப்படுத்திவிடும்) .

ஆனாலும் எந்த நிர்வாஹமானாலும் அதிலே ஒரு தலைவன் இருக்கவேண்டும். இப்படி ஊர் ஸபைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனாலும் இவனுக்கு விசேஷமாக ஒரு ‘இமேஜ்’ இருக்கவேண்டியதில்லை. மத்ய பீட ராஜாவுக்குள்ளது போன்ற பெரிய பொறுப்புகளும் இவனுக்கு இல்லை. ஊர்த்தலைமை என்பது ராஜ்யாதிகாரத்தைப் போலப் பிறநததிலிருந்து பழக்கினால்தான் உரிய யோக்யதாம்சங்களைப் பெறமுடியும் என்கிற அளவுக்கு நுட்பமான பொறுப்பு வாய்ந்த ஒன்றில்லை. தேசத்தின் ராஜாவுக்கு அடங்கி, அவன் அதிகாரத்துக்கும் மேற்பார்வைக்கும் கட்டுப்பட்டு ஊர்த் தலைவன் உள்ளூர் ஸமாசாரங்களை மட்டும் கவனிக்க வேண்டியவன்தான். ஆகையால் இதற்குப் பாரம்பர்ய ரைட் அவச்யமில்லை. பார்க்கப்போனால், இப்படிச் சின்ன அளவில் அதிகாரமிருக்கும்போது அதைப் பாரம்பர்யமாக்குவதே தான் யோக்யதாம்சம் இல்லாதவர்களிடம் பொறுப்பு போவதற்கு வழி பண்ணிவிடும். ‘தனக்குப் பெரிய பொறுப்பு இருக்கிறது, ஒரு பெரிய நிலப்பரப்பையும், பெரிய ஜன ஸமூஹத்தையும் தான் ஆண்டு நிர்வாஹம் செய்து மதிப்புக்குப் பாத்ரமாக வேண்டும்; சத்ருக்கள் வந்தால் ஸமாளிக்க வேண்டும்’ என்கிறபோது ஒரு ராஜகுமாரன் ரொம்பவும் கவனத்தோடு, கவலையோடு யோக்யதை ஸம்பாதித்துக் கொள்ளப் பாடுபடுவான். “எல்லாம் நம் மநுஷர்கள்தான் – நமக்குத் தெரிந்த சேஷன் சுப்பன்தான்” என்று இருக்கும் போது, பொறுப்பும் குறைவாக இருந்து, “இது எப்படியும் ஹெரிடிடரி, வேறே யாரும் போட்டிக்கு வர முடியாது” என்றும் இருந்துவிட்டால் ஒருத்தன் யோக்யதை ஸம்பாதித்துக்கொள்ளப் பாடுபடவேண்டியதில்லைதானே!

இம்மாதிரியான பல காரணங்களினால் ஊர் நிர்வாஹத்தைப் பாரம்பர்யமாக வைக்காமல் விட்டார்கள்.

நாடானால் ராஜா என்கிறவன் ஆலோசனை ஸபைகளின் துணையுடன் நிர்வாஹம் செய்யவேண்டும்; ஊரானால் ஒரு நிர்வாஹ ஸபை தனக்குத் தலைவனாக ஒருத்தனை வைத்துக் கொண்டு கார்யங்களைச் செய்யவேண்டும் என்று வைத்தார்கள். இரண்டுக்கும் இருக்கிற வித்யாஸத்தை கவனிக்க வேண்டும். நாட்டில் ராஜா என்கிறவன்தான் முடிவான நிர்வாஹ அதிகாரம் உள்ளவன். அவனுக்கு ஸபைகள் ஆலோசனை சொல்கின்றன. ஆலோசனைதான். முடிவு அவன்தான் எடுப்பான். ஊரிலே இப்படியில்லை. ஸபையேதான் ஆலோசனை சொல்வதோடு நிற்காமல் நேராக நிர்வஹிப்பது, முடிவு எடுப்பது. தலைவன் என்று ஒருத்தன் இல்லாமல் பல பேர் உதிரியாக இருப்பது ஸரியாய் வராது; பலபேரை ஒரு கட்டுக்கோப்பில் வைப்பதற்காகத் தலைவன் இருக்கத்தான் வேண்டும் என்பதற்காக ஸபை ஒரு தலைவனை வைத்துக் கொள்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is தேசத் தலைமைக்கு அரசன்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  தேர்தல் மூலம் ஊர் ஸபையில் அங்கம்
Next