தேர்தல் மூலம் ஊர் ஸபையில் அங்கம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ராஜா, அவனுக்கு ஆலோசனை சொல்கிறவர்கள், ஊர் ஸபைக்காரர்கள் ஆகியவர்களால் மொத்தத்தில் நிர்வாஹம் நடந்தது.

யார் வேண்டுமானாலும் ராஜாவாக வரமுடியாது. அது ஹெரிடிடரி.

மற்ற ஸ்தானங்களுக்கு அதாவது அவனுடைய ஆலோசனை ஸபை, ஊராட்சி ஸபை, முதலியவற்றில் யார் வேண்டுமானாலும் இடம் பெறலாமா? ‘கூடாது. ஊர் நிர்வாஹம், நாட்டு நிர்வாஹம் ஆகியன சிக்கலான விஷயம். நாட்டு நிர்வாஹத்தைவிட ஊர் நிர்வாஹம் சிக்கல் குறைந்தது, பொறுப்பு குறைந்தது என்றாலும் இதிலேயும் சிக்கல் உன்டு, பொறுப்பு உண்டு. எனவே உரிய தகுதி பெற்றிருப்பவர்களிடம்தான் பொறுப்புக் கொடுத்து மேலே சொன்ன ஸபைகளில் அமர்த்தலாம்’ என்று ஏற்பாடு செய்தார்கள்.

இப்படி அமர்த்துவதிலேதான் ஜனங்கள் தங்களுக்கும் பங்கு இருக்கிறதென்று ஸந்தோஷப்படும்படியாக ஒரு தேர்தல் முறையை ஊர் விஷயத்தில் கையாண்டார்கள்.

இப்போது இப்படி உங்களையெல்லாம் மெனக்கெடுத்தி உட்காரவைத்து முக்யமாகச் சொல்ல நினைத்து, சோழர்களின் ஆட்சிக் காலத்தில் தற்போது ஜனநாயகத்தின் மூச்சாக நினைக்கப்படும் “தேர்தல்” என்ற ஏற்பாடுகூட இருந்தது என்பதைப் பற்றித்தான். தேர்தல் இருந்தாலும் இப்போதுள்ள தேர்தல் முறைக்கு எப்படி அந்தக்கால முறை வித்யாஸமாயிருந்தது என்பதைச் சொல்லி, இப்போதிருப்பதைவிட அந்த முறை எப்படி ச்லாக்யமானது என்று கொஞ்சம் காட்ட ஆசை. ‘ராஜ்யத்தையோ, ஊரையோ நிர்வாஹம் செய்பவர்களுக்குத் தகுதி இருக்கவேண்டும், எல்லாரையும் அதில்விட முடியாது’ என்றால், அப்போது, இப்படிப்பட்ட தகுதிகள் அவர்களுக்கு இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்த்துத் தான் அவர்களுக்கு ஸ்தானம் தரவேண்டும் என்றும் ஆகிவிடுகிறது. ராஜ்யத்தைப் பொறுத்தமட்டில் ஒரு ராஜகுமாரன் பட்டத்துக்கு வரும்போது, அவனுடைய தகப்பனாருக்குத் துணையாயிருந்த ஸதஸ் பெரியவர்களே இவனக்கும் ஆலோசனை சொல்லி நல்ல வழியிலே போகப் பண்ணுவார்கள். அப்புறம் அவர்கள் வயோதிகத்தில் பதவியை விட்டு விட்டுப் போனாலோ, அல்லது காலமாய் விட்டாலோ, அந்த ராஜாவே அதற்குள் நல்ல ஆட்சி அநுபவமும், விவேகமும் பெற்றிருப்பானாதலால் தனக்கு ஆலோசனை சொல்லக்கூடியவர் யார் என்று பார்த்து அப்படிப்பட்டவர்களை நியமனம் செய்துகொண்டுவிடுவான். இங்கே ராஜாவேதான் ‘அப்பாயின்டிங் அதாரிடி’.

ஊர் விஷயத்தைப் பார்க்கலாம். ஊர் நிர்வாஹத்தை ஏற்று நடத்தும் ஸபையினருக்கும் தகுதிகள் இருக்கவேண்டும். ஸபையினருக்கும் தகுதிகள் இருக்கவேண்டும். ஆனாலும் ராஜா அல்லது ராஜழங்க அதிகாரியால் அவர்கள் நியமிக்கப்ட்டதாக இல்லாமல், ‘தங்கள் ஊரை நிர்வஹிப்பவர்களின் நியமனம் தங்கள் ஊராராலேயே முடிவாயிற்று’ என்று ஜனங்களுக்கு ஒரு த்ருப்தி இருக்கும்படிச் செய்தால் நன்றாய் இருக்கும். எந்த ஊரிலோ இருந்து கொண்டு, யாரோ உத்தரவு போட்டு நம்முடைய இந்த ஸொந்த ஊரை நிர்வஹிக்க ஆஸாமிகள் வரவேண்டுமா என்று அவர்கள் நினைக்காமல், தங்களுக்கே இதில் பங்கு இருக்கிறது, ‘பார்ட்டிஸிபேஷன்’ இருக்கிறது என்று பெருமையுடன் நினைக்கப் பண்ணவேண்டும். இதற்கான ஒரு தேர்தல் முறையைத்தான் சோழர் ஆட்சியில் பார்க்கிறோம்.

ஸரி, அப்படியானால் பொது ஜனங்களையே, “உங்கள் ப்ரதிநிதிகளாக ஸபைக்காரர்களை ‘எலெக்ட்’ செய்யுங்கள்” என்று விட்டுவிட்டார்களா?

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஊர்த் தலைமை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  குடியரசு, ஜனநாயகம்
Next