குடியரசு, ஜனநாயகம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)
தற்போது (1949) இப்படித்தான் நடக்கவேண்டுமென்று ஏற்பாடாகி வருகிறது. ஊர் மட்டுமில்லை, மாகாணம், தேசம் பூராவுக்குமே இப்படி நடத்துவதுதான் உத்தேசமாயிருக்கிறது. குடியரசாக தேசம் ஆகிறபோது ஜனங்கள் எல்லாரும் வோட்டுப் போட்டுப் பார்லிமென்டுக்கும், அஸெம்ப்ளிக்கும் ப்ரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து ஆட்சி நடத்தப் பண்ணவேண்டும் என்பதற்கு ஏற்பாடாகி வருகிறது.
இப்போது முடியரசு ஸாத்யமில்லை. ஈஸ்ட் இண்டியா கம்பெனி கொஞ்சம் கொஞ்சமாகப் பிடித்து அப்புறம் ப்ரிட்டிஷ் ராஜாங்கத்துக்கு தேசம் கை மாறின காலங்களில் இந்தத் தேசம் முழுவதற்கும் ஒரு ராஜா இருக்கவில்லை. பிற்பாடு ஸ்வதேச ஸம்ஸ்தானங்கள் என்று பெயர் பெற்ற ஏராளமான ராஜ்யங்களே அப்போது இருந்தன. நமக்கு ஸ்வதந்த்ரம் வந்தபோது இவற்றில் ஏதோ கொஞ்சம் ஸ்வயாதிக்யம் பெற்றிருந்தவற்றைத்தான் ஸ்வதேச ஸம்ஸ்தானம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். Native state என்பார்கள். இப்படி ஐநூற்றுக்கு மேல் இருக்கின்றனவென்றால், இம்மாதிரி கொஞ்சம் ராஜ்யாதிகாரம் கூடக்கொடுக்காமல் ப்ரிட்டிஷ்காரர்கள் முழுங்கியேவிட்ட சின்னச் சின்ன ராஜ்யங்கள் எத்தனையோ இருந்திருக்கும். ஏகப்பட்ட ராஜாக்களின் ஆளுகையில் இருந்த தேசம் அப்புறம் வெள்ளைக்கார, ‘கிங் எம்பர’ரிடம் போயிற்று. அதிகாரமில்லாமல் figure-head என்று ராஜாவாக இருப்பவர் அவர். அந்த ஹிஸ்டரி இப்போது வேண்டாம். சொல்ல வந்தது, இப்போது அந்த ஒரே ராஜாவிடமிருந்து தேசம் நமக்கு திரும்பி வருகிறபோது இது முழுதையும் ஒப்பிப்பதற்கு பாரம்பர்ய ரைட் உள்ளவராக ஒரு ராஜகுடும்ப வாரிசும் இல்லை. ஆனபடியால், மற்ற காரணங்கள் ஒரு பக்கம் இருக்க, இப்போது தேசம் பூராவையும் ஏதோ ஒரு ராஜ வம்சம் வாங்கிக் கொள்வதற்கில்லாமல் ஜனங்கள்தான் வாங்கிக்கொள்ளவேண்டும். குடியரசுதான் இங்கே வரமுடியும். வெள்ளைக்காரர்களோடு ராஜா யாரும் சண்டை போட்டு தேசத்தைத் திரும்பவும் ஜயிக்கவில்லை. ஜனங்களே தான் கூடியமட்டும் அஹிம்ஸை மார்க்கம் என்று சொல்லக்கூடிய முறையில் ஓரளவு ஸாத்விக யுத்தம் செய்து ராஜ்யத்தைத் திரும்பப் பெற்றிருக்கிறார்கள். அதனால் ஜனங்களே இதை ஆண்டுக்கொள்ள உரிமை பெற்றவர்களாக இருக்கிறார்கள். இதைத்தான் குடியரசு என்பது.
குடியரசு என்றாலும் அத்தனை ஜனங்களுக்கும் ஆட்சியில் நேர்பொறுப்பும் பதவியும் கொடுக்க முடியாது. அதனால் அவர்களுக்கு ப்ரதிநிதிகளாக சிலபேர்தான் ராஜாங்கத்தை அமைத்து நடத்தவேண்டும். இதிலே பொதுஜனங்களுக்கு இடம் தராமல், ப்ரபுக்களாக இருக்கப்பட்டவர்களே சேர்ந்து ஆட்சி நடத்துவதான ‘அரிஸ்டாக்ரசி’, மதத்தலைவர்கள் நடத்துவதான ‘தியாக்ரஸி’ – என்பது போலப் பல இருக்கின்றன. ஒருவரே எல்லா அதிகாரத்தையும் தன் வசமாக்கிக்கொண்டு, ஸர்வாதிகாரி என்றே பெயர் வைத்துக்கொண்டு, ஸர்வாதிகாரி என்றே பெயர் வைத்துக்கொண்டு ஆள்வதை ‘ஆடாக்ரஸி’ என்கிறார்கள். இம்மாதிரியுள்ள பல ஆட்சி முறைகளில், ஜனங்களில் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தை மட்டும் சேர்ந்தவர்களாயில்லாமல் ஸகல ஜனங்களுக்கும் ப்ரதிநிதிகளாக இருக்கப்பட்டவர்களிடம் ஆட்சியைக் கொடுப்பதற்கு ‘டெமாக்ரஸி’ என்று பெயர். ஜனநாயகம் என்று நாம் சொல்கிறோம். இப்படிப் பொதுவான ஜனஸமூஹம் பூராவுக்குமான ப்ரதிநிதிகளைக் கொண்டே நம்முடைய குடியரசில் ஜனநாயகமாக ஆட்சியை ஏற்படுத்த உத்தேசிக்கப் பட்டிருக்கிறது. இது இப்படித்தான் இருக்க முடியும். கால தேச வர்த்தமானத்தில் இதைத் தவிர வேறு விதமாக ஏற்பாடு செய்வதற்கில்லை எனலாம்.